வேண்டும் வலிமை...

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு சரியான வழிகாட்டி அமையவேண்டும்.
 க.அகிலா ஜுவாலா
க.அகிலா ஜுவாலா
Updated on
1 min read

'நல்ல விஷயங்களை அறியும் விதமாய் சமூக ஊடகங்களில் பயணிக்கிறோம். விஷமாய் நுழையும் சிலரிடம் நம்மை பாதுகாத்துக் கொள்வதும் அவசியம். மாற்றங்கள் வேண்டாம் என்பதல்ல. மாற்றங்களை எதிர்கொள்ளும் சிந்தனைத் தெளிவும், வலிமையும், அதனை நல்வழியில் உபயோகிக்க நேர்மறைச் சிந்தனைகளும் வேண்டும் என்பதே முக்கியம். செயற்கை நுண்ணறிவு, புதிய தகவல் தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவை வளர்க்கும் வண்ணம் இனி பாடத் திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவருவதும் அவசியம்'' என்கிறார் சென்னை வண்டலூரைச் சேர்ந்த க.அகிலா ஜுவாலா.

சமூக ஊடகங்களில் பயணித்து, எழுத்தாளராகவும், கல்வியாளராகவும் பரிணமிக்கும் அவரிடம் பேசியபோது:

'மனித நாகரிகம் ஆற்றங்கரைகளில் தோன்றியதிலிருந்து இன்றுவரை யுத்தங்கள், இருவருக்கிடையே பலத்தை நிரூபிக்கும் நிமித்தம் சண்டை, சச்சரவுகள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.

இன்றைய சமூக ஊடகங்களிலும் மனிதர்களுக்கு இடையே பல கருத்து மோதல்களும், வார்த்தைப் போர்களும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. ஒருபக்கம் இது என்றால், முகம் சுளிக்கவைக்கும் காட்சிகளும் கட்டுப்பாடற்று அனைத்துப் பக்கங்களிலும் நாகரிகத்தின் எல்லை கடந்து இருப்பதும் அரங்கேறுகிறது. கருத்துச் சுதந்திரம் எனும் பெயரில் யாரையும் யாரும் அநாகரிக வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதே சங்கடம் தருகிறது.

சமூக ஊடகங்களால் உலகத்தின் எந்த மூலையில் நடக்கும் எதையும் விநாடிகளில் அறிய முடிகிறது. அதேபோல், சாமானியரால் தங்கள் கருத்துகளையும் எண்ணற்றோருக்கு வெளிப்படுத்த வாய்ப்பும் உருவாகிறது. 'ரீல்ஸ்' எனப்படும் சின்ன சின்ன காணொலிகள் மூலம் சாமானியர்களும் தங்களது திறமைகளைப் பேச்சு, நடனம் , குறும்படங்கள் என வெளியிட்டு புகழீட்ட முடிகிறது.

ஆன்மிகம், மருத்துவம், சமையல், அழகுக்குறிப்பு எனப் பல விஷயங்கள் அடுத்தவர் ரசனைக்கும் தேவைக்கும் விருந்து படைக்கின்றன. அரசியல் கட்சிகளும் தங்கள் கொள்கைகள், சாதனைகள் எனப் பலவற்றை பறைசாற்றிக் கொள்ளமுடிகிறது.

'ஜீரோ க்ரைம்' எனப்படும் சமூக ஊடகக் குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகளைப் பிடிப்பதே பெரிய சவாலான நிலையில் தற்போது செயற்கை நுண்ணறிவு மூலம் புதிதாக வரப்போகும் சவால்களை எப்படி எதிர் கொள்ளப்போகிறோம் என்பதெல்லாம் கேள்விக்குறிகள்தான்.

முன்னேற்றங்கள், மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். இளம் சிறார்களும் இணையத்தைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சுய சிந்தனையும், தீர்மானமும் மட்டுமே நம்மை நாம் சரிசெய்துகொள்ள சரியான பாதையில் பயணிக்க வழியாகும்.

அதற்கு ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு சரியான வழிகாட்டி அமையவேண்டும். அப்படி அமையாத குடும்பங்களுக்கு கல்வியும் நல்ல வழிகாட்டுதலும் விழிப்புணர்வும் கொடுக்க அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் முன்வரவேண்டும். எதுவுமே தவறில்லை என எண்ணும் சுதந்திரப் போக்கு ஆபத்தானது. வருங்கால சமுதாயம் தெளிவுடன் இருக்க இன்றைய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் இதைப்பற்றி தெளிவான சிந்தனை வேண்டும்' என்கிறார் அகிலா ஜுவாலா.

-பா.சுஜித்குமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com