பெண் கல்வியின் அவசியம்...

ஒரு பெண் கல்வி கற்கத் தொடங்கியதும், திறன்களை வளர்த்துக் கொள்கிறார்.
பெண் கல்வியின் அவசியம்...
Updated on
2 min read

'நாட்டில் இதுவரை 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில், இடைநின்ற லட்சக்கணக்கான மாணவிகளைப் பள்ளிகளில் சேர்த்துள்ளோம். ஒரு பெண் கல்வி கற்கத் தொடங்கியதும், திறன்களை வளர்த்துக் கொள்கிறார். மேலும், அவர் தன்னம்பிக்கையுடன் தனது சொந்த வாழ்க்கையை வடிவமைக்கும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்வதையும் அனுபவத்தில் அறிய முடிகிறது' என்கிறார் ஷஃபீனா ஹுசைன்.

இளம்பெண்களுக்கு வல்லமை ஊட்டவும், பல்வகைத் திறன்கள், மனதைரியம், தன்னம்பிக்கையுடன் சமூகம் எழுப்பும் சவால்களை எதிர்கொள்ள பெண்களைத் தயார் செய்துவரும் ஷஃபீனா ஹுசைன் நடத்திவரும், 'பெண்குழந்தைகளைப் படிப்பியுங்கள்' (எஜுகேட் கேர்ள்ஸ் ) என்ற பொதுநல அமைப்புக்கு 'ஆசியாவின் நோபல் பரிசு' என்று அழைக்கப்படும் '2025 ரமோன் மகசேசே' விருது அண்மையில் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் ரூ.42 லட்சம் பரிசுத் தொகை கிடைத்துள்ளது. இதேபோல், உலகளாவிய அங்கீகாரமான 2023-ஆம் ஆண்டுக்கான 'வைஸ்' விருதை (சுமார் நாலரை கோடி ரூபாய்) வென்ற முதல் இந்தியப் பெண்மணியும் ஷஃபீனா ஆவார்.

தனது சாதனைகள் குறித்து அவர் கூறியது:

'உத்தரபிரதேசத்துக்கு உள்பட்ட லக்னோவைச் சேர்ந்த வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த எனது பெற்றோர் காதல் திருமணம் செய்துகொண்டனர். குடும்பத்தினர் புறக்கணித்ததால், பெற்றோருக்கு வாழ்க்கை பெரும் சவாலாக அமைந்தது. தில்லியில் குடியேறினர். அங்குதான் பிறந்தேன்.

நான் 12-ஆம் வகுப்பு படிக்கும்போது பெற்றோர் பிரிந்ததால், அதன்பிறகு நான் பள்ளிக்குச் செல்லவில்லை. மூன்று ஆண்டுகளாக வீட்டில் தந்தையுடன் இருந்தேன். கல்வி கிடைக்காததன் வலியை நேரடியாக உணர்ந்தேன்.

எனது அத்தையோ என்னை மீட்டு லண்டனுக்கு அழைத்துச் சென்றார். அங்கு 'லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்'ஸில் படிக்க வைத்தார். பட்டம் பெற்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்குச்சென்றேன். அதுவே எனது வாழ்வில் திருப்பமாக அமைந்தது. தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசிய கண்டங்களில் பின்தங்கிய சமூகங்களின் முன்னேற்றத்துக்காக சமூக அமைப்புகளுடன் பணியாற்றத் தொடங்கினேன். பின்னர், இந்தியா திரும்பினேன்.

உத்தரகண்ட் மாநிலத்தில் முசோரிக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் சிறிய மருத்துவமனையை அமைத்தேன். என்னைப் பார்க்க என் தந்தை வருகை தந்தார்.

நான் படிக்க முடியாமல் கலங்கி நின்ற நாள்கள் என்னை விரட்டிக் கொண்டே இருந்தன. எனது நிலை எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது என்று நினைத்து, 2007-இல் பொதுநல அமைப்பை உருவாக்கினேன். மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டல்களைப் பெற்றேன்.

கல்வியில் பாலின இடைவெளி மிக அதிகமாக இருக்கும் 26 மாவட்டங்களில் ஒன்பது மாவட்டங்கள் ராஜஸ்தானில் இருந்தன. அதனால்தான் ராஜஸ்தானில் முழுக் கவனத்தைச் செலுத்தி, அங்கு பெண் கல்வியின் அவசியத்தைப் பெற்றோர்களுக்குப் புரிய வைத்தோம். கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியும் பெற்றோம். பல தருணங்களில் எனது இரண்டு மகள்களையும் கிராமங்களுக்கு உடன் அழைத்துச் செல்வேன்.

மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படும் எங்கள் அமைப்பு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. தன்னார்வலர்கள் பள்ளி செல்லாத பெண்களைப் பள்ளியில் சேர்க்கிறார்கள். எனது சேவைகளுக்காக மதிப்புறு முனைவர் பட்டத்தை 'லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ்' வழங்கியது.

பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது என்பது அடிப்படை உரிமை மட்டுமல்ல; முன்னேற்றத்துக்கான ஒரு சக்திவாய்ந்த கிரியா ஊக்கியாகவும் உள்ளது. படித்த ஒரு பெண் குழந்தையாக இருக்கும்போதே திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு குறைவு. அவர்கள், தன் சொந்தக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதற்கான வாய்ப்பு அதிகம்'' என்கிறார் ஷஃபீனா.

-பிஸ்மி பரிணாமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com