பாரம்பரிய அருங்காட்சியகம்...

கொப்பி என்றால், 'கொம்மம்' அல்லது 'கும்மி' என்று பொருள்படும்.
பாரம்பரிய அருங்காட்சியகம்...
Updated on
3 min read

சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட பிள்ளையார்பட்டி அருகே நகர வைரவன்பட்டி என்ற ஊரில் நகரத்தார் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக 'செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம்', ஐரோப்பிய - இந்தோ கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் மூன்று அடுக்கு கட்டடத்தில் இயங்கிவருகிறது. இங்கு 4 ஆயிரம் சதுர அடியில் செட்டிநாடு பாணியில் முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து, அருங்காட்சியக உரிமையாளர் சா.லெ.சு.பழனியப்பன் கூறியது:

சா.லெ.சு.பழனியப்பன்.
சா.லெ.சு.பழனியப்பன்.

'இலங்கை நாட்டில் உள்ள கம்பலாவில் வசித்து வந்த எங்களது பாட்டையா சாத்தப்பா செட்டியார், பெரும் வணிகர். எனது தந்தையும், சிறிய தந்தையும் 1960-ஆம் ஆண்டு வரை அந்நாட்டில் இருந்துள்ளனர். அவர்கள் கொண்டு வந்த அனைத்துப் பொருள்களும் எங்கள் வீட்டின் ஒரு பகுதியில் முடங்கிக் கிடந்தது. இதைக் காட்சிப்படுத்தவே அருங்காட்சியகத்தை உருவாக்கினேன்.

மன்னருக்கு முடிசூட்டுதல், வீடுகளில் கொடி பறக்க விடுதல், வீட்டின் உச்சியில் அரண்மனை போல் தங்கக் கலசம் வைத்திருத்தல் ஆகிய மூன்று உரிமைகளை நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கு சோழ மன்னர்கள் அளித்தனர். இதைப் பின்பற்றியே இந்தக் கட்டடத்தின் உச்சியில் தங்க முலாம் பூசிய கலசம் வைத்துள்ளோம்.

சிங்கப்பூர், மலேசியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தோர், அரசுத் துறையினர், தொல்லியல் ஆய்வாளர்கள் போன்ற எண்ணற்றோர் பார்வையிட்டுள்ளனர். எனது பணிகளுக்கு மனைவி பழ.மாலதி, மகன் பழ.சாத்தப்பா சுந்தரம் (விக்னேஷ்) இருவரும் உதவிகரமாக உள்ளனர்.

நகரத்தார் கோயில்களின் அரிய புகைப்படங்கள், சுப நிகழ்வுகளை எடுத்துக் கூறும் சுவர் ஓவியங்கள், நகரத்தார் வரலாறு - வாழ்வியல் தொடர்பான நூலகம், ஆபரண நகைகள், அஞ்சறைப் பெட்டி, ஐப்பான் கிளாஸ் பாத்திரம், தமிழ் எண்களால் 1924-ஆம் ஆண்டு எழுதப்பட்ட பெயரேடு, 1930-31 ஆண்டு கணக்குப் புத்தகம், ஓலைச் சுவடிகள், திருமண சீர் வரிசைப் பொருள்கள், கலைப்பொருள்கள், பழைய முத்திரைத் தாள், மண்பாண்டங்கள், கைவினைப் பொருள்கள், யானைக் கழிவில் செய்த யானைப் பொம்மைகள், கிட்டங்கிகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

புவிசார் குறியீடு பெற்ற செட்டிநாடு கொட்டான், கண்டாங்கி சேலை, இவைகளுக்காக மத்திய அரசு சார்பில் வெளியீடு செய்த அஞ்சல் உறை(கவர்) உள்ளிட்டவையும் இங்குள்ளன. அருங்காட்சியகத்தில் உள்ள முக்கியப் பொருள்கள் குறித்த விவரம்:

கழுத்திரு: கழுத்தில் அணியும் மங்கல சங்கிலி. செட்டிநாட்டுத் திருமணங்களில் முதலில் கட்டப்படும் தாலி. இறைத் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ள கழுத்திருவை அணிவிப்பதன் மூலம் கழுத்தில் 'திரு' என்ற லட்சுமியைத் தங்கவைப்பதுதான் நோக்கம். மணமக்களுக்கு இறைவன் எல்லா நலன்களையும் அளித்துக் காப்பான் என்பதே நம்பிக்கையாகும். இரட்டைவடச் சங்கிலியும், அதனுடன் கோர்த்து இணைத்துள்ள 33 வகையான கைவேலைப்பாட்டுடன் கூடிய அழகிய துணை நகைகளாகும். 100 பவுன்களில் செய்யப்பட்டு, படிப்படியாகக் குறைந்து, இப்போது 16 பவுனில் செய்யப்படுகிறது

பொங்கல் பானை: திருமணத்தின்போது, பொங்கல் வைக்கும் வெண்கலப் பானை, விறகு அடுப்பு, வெள்ளி விளக்குச் சட்டி, வெள்ளிப் பிள்ளையார், சங்கு, வெள்ளி விளக்குச் சட்டி ஆகியவற்றை பெண்களுக்குச் சீராக அளிப்பார்கள். பொங்கலுக்கு முதல் நாள் அவற்றை எடுத்து கழுவி சுத்தம் செய்து வைப்பார்கள். பொங்கல் வைக்கும் இடத்தில் பெரிய செட்டிநாடு பாரம்பரிய பொங்கல் கோலம் இடுவர். செட்டிநாட்டில் வளவு வைத்த வீடுகளில் வாசலிலோ சாமி அறைக்கு நேர் எதிரிலோ பொங்கல் வைக்கப்படுகிறது. திருமணம் முடித்தவர்கள் ஒரு பொங்கலும், திருமணம் முடித்து குழந்தை பெற்றவர்கள் இரண்டு பொங்கலும் வைப்பர்.

கொப்பித்தட்டு: கொப்பி என்றால், 'கொம்மம்' அல்லது 'கும்மி' என்று பொருள்படும். குப்பிப் பொங்கலில், 'குப்பி' என்பது சாண எருவைக் குறிப்பதாகும். தைப் பொங்கல் நேரத்தில் கொப்பி கொட்டுவது செட்டிய வீட்டுச் சிறுமிகள் வழக்கம். பிள்ளையார் கோயில், ஊரணி கரையில் சிறுமிகளும், கன்னிப் பெண்களும், தாங்கள் பாரம்பரியமாக வைத்திருக்கும் வெள்ளியாலான கொப்பித்தட்டு அல்லது கூடையை எடுத்துக் கொண்டு போய் வட்டமாக நின்று கொப்பிக் கொட்டுவர். இது எங்களுடைய வீட்டில் கல்யாண வயதில் பெண் இருக்கிறாள் என்று அந்தக் கால வழக்கப்படி அறிமுகம் செய்விக்கும்படியான ஏற்பாடாகும்.

கடிதங்களும், புகைப்படங்களும்: 1941-ஆம் ஆண்டு இலங்கை யாழ்ப்பாண மாநகர சபையின் அலுவலகக் கட்டடம், 1947 ஆகஸ்ட் 5-இல் கம்பலா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு ஆகியவற்றின் புகைப்படங்களும் உள்ளன.

1947-ஆம் ஆண்டின் அரையணா தபால் அட்டை, 1949-இல் பயன்படுத்திய அஞ்சல் அட்டை, 1952-ஆம் ஆண்டின் இலங்கையின் தபால் அட்டை, 1952 அக்டோபர் 31-ஆம் தேதி சென்னை தமிழ் இசைச் சங்கத்தின் அண்ணாமலை ஹால் திறப்பு விழா அழைப்பிதழ், 1953-ஆம் ஆண்டின் இரண்டணா மதிப்பு கொண்ட தபால் உறை, 1953-ஆம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கடித உறை, 1954-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட கவர், 1954-ஆம் ஆண்டு பார்சல் கடித ரசீது உள்ளிட்ட கடித ஆவணங்கள் இங்குள்ளன.

நாணயங்கள்: 1903-05-ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னர் எட்வர்ட் வெளியீட்ட ஒரு ரூபாய் நாணயம் உள்ளது. இதில் முன்புறம் மன்னரின் படம், மறுபுறம் கிரீடம், இந்தியா என்று இடம்பெற்றுள்ளது.1925-ஆம் ஆண்டின் இலங்கையின் நாணயமும் உள்ளது.

1738-ஆண்டு வாக்கில் அச்சடிக்கப்பட்டு, ரகுநாத தொண்டைமான் காலத்தில் வெளியிடப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தான 'அம்மன் காசு' எனப்படும் சிறிய காசு உள்ளது. பின்னர், சமஸ்தானத்தின் நடைமுறை செலவாணிக்கு வந்தது. 1948-ஆம் ஆண்டு வரை செலவாணியில் இக்காசு இருந்துள்ளது. சுதந்திரத்துக்கு முந்தைய, பிந்தைய காலத்தில் வெளியான நூற்றுக்கணக்கான நாணயங்கள் உள்ளது' என்கிறார் சா.லெ.சு.பழனியப்பன்.

-பொ.ஜெயச்சந்திரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com