இசைக்கு மயங்காதவர் எவருமில்லை. அத்தகைய இசையை மக்களுக்கு ஐம்பத்து இரண்டு ஆண்டுகளாக அளித்து, 20 ஆயிரம் கச்சேரிகளில் வாசித்துள்ள புதுச்சேரி தவில் கலைஞர் பி.தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கியது.
புதுச்சேரி அருகேயுள்ள அபிஷேகபாக்கத்தில் கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இவரிடம் பேசியபோது:
'எங்களுக்கு பூர்விகமே அபிஷேகபாக்கம்தான். தாத்தா ரத்தினம், அப்பா பூவன். இருவருமே தவில் கலைஞர்கள்தான். கோயில் விழாவானாலும், தனிநபர் காரியமானாலும் எங்களது குடும்பத்தினரின் தவில் அங்கே நிச்சயம் ஒலிக்கும். சாமானியர் முதல் படித்தோர் வரை அனைவரையும் வசீகரிக்கும் வகையில் எங்கள் தாத்தாவும், அப்பாவும் தவிலை தன்வசப்படுத்தியிருந்தனர்.
சிறிய வயது முதலே எனது அப்பாவின் தவிலை அவ்வப்போது தட்டித் தட்டி பயிற்சி எடுத்தேன். அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புக்கு மேலாக படிப்பு ஏறாததால், அப்பாவின் தவில் குழுவில் சேர்ந்து இசைச் சேவையில் ஈடுபட்டேன். பதினைந்து வயதானபோது கோயில் விழாவில் தவில் வாசித்த நினைவுள்ளது. அதன்பிறகு பெரும்பாலும் மங்களகரமான நிகழ்வுகளுக்கு மட்டுமே தவிலை வாசிக்கும் மனநிலையும் ஏற்பட்டது.
இறப்புக்கு எப்போதாவது அப்பா தவில் வாசிக்கக் கூப்பிட்டால், ஏதாவது காரணத்தைக் கூறி தட்டிக் கழித்துவிடுவேன். அதன்படி கோயில் திருவிழாக்கள், அரசு விழாக்களில் தான் எனது தவில் கேட்போரை மனமுருகி ரசிக்க வைத்துள்ளது.
இசைக்கு மட்டும்தான் சாதி, மதம் என எந்த வேறுபாடும் கிடையாது. அதன்படி தவிலை அனைவரும் ரசிக்கும்படி இசைப்பது எனது கடமை. அந்த வகையில் எனக்கு "சிங்காரவேலனே தேவா...' எனும் திரைப்படப் பாடல் ரொம்பப் பிடிக்கும். தவிலுக்கு தனி முக்கியத்துவம் அளித்த பாடல் அதுதான்.
எங்கள் குடும்பத்தில் நான் மட்டுமல்ல. எனது நான்கு சகோதரர்களுமே தவில் இசைக் கலைஞர்கள். இதனால் எனக்கு தவிலில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
வலையபட்டி சுப்பிரமணியனின் தவிலை கேட்டு ரசித்து அவரைப் போல புகழ் பெற ஆசைப்பட்டேன். தவிலுடன் நாடகம், திரைப்படம்.. என முழுநேரக் கலைஞனாகவும் ஆசைப்பட்டேன். அதன்படி, கடந்த ஐம்பத்து இரண்டு ஆண்டுகளில் 20 ஆயிரம் கச்சேரிகளில் தவில் வாசித்துள்ளேன்.
தவிலுக்கு ஏற்ற நாகஸ்வரத்திலும் எனக்கு ஈடுபாடு உண்டு. ஷேக் மெளலானாவில் நாகஸ்வரம் வாசிப்பு ரொம்பப் பிடிக்கும்.
புதுச்சேரி கலை, பண்பாட்டுத்துறை மூலம் அரசு விழாக்கள், நேரு யுவகேந்திரா போன்ற அமைப்புகளின் கலை நிகழ்ச்சிகளில் தவில் வாசித்தது என்னைப் பிரபலப்படுத்தியது. புதுவையில் மட்டுமல்லாது, தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், அஸ்ஸôம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று தவில் வாசித்த அனுபவம் உண்டு.
புதுவை ஆளுநர் மாளிகையில் பெளர்ணமி தின முழுநிலவு விழா, தமிழ் சித்திரை விழாவுக்கு தவில் வாசித்தது மறக்கமுடியாதது. அதனடிப்படையில் 2006}07}ஆம் ஆண்டில் புதுவை அரசின் கலைமாமணி விருது கிடைத்தது. அதனையடுத்து, டாக்டர் அம்பேத்கர் ஃபெல்லோஷிப் தேசிய விருது, டாக்டர் ஆஃப் மியூசிக் தவில் விருது, டாக்டர் அம்பேத்கர் கலாஸ்ரீ தேசிய விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளேன்.
விருதுகள் வாங்கும்போது பள்ளியில் பட்டம் பெற்றதைப் போன்ற மகிழ்ச்சி ஏற்படும். ஐந்தாவது வரை படித்த நான் அரசு பொதுத் தேர்வில் வென்று சான்றைப் பெறுவது போல விருதுகள் எனக்கு ஊக்கமளித்தன. அந்த வகையில், பட்டப் படிப்பை முடித்தவருக்கு வழங்கப்படுவது போல எனக்கு தவிலுக்கான பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கி, கெளரவித்துள்ளது. இந்த விருது எனது தாத்தா, அப்பா என மூன்று தலைமுறையின் இசை சேவைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன்.
சாமானியனான எனது இசையையும் மத்திய அரசு அங்கீகரித்திருப்பது, அனைத்து தவில் இசைக் கலைஞர்களையும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. அதற்காக பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்டோருக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.
எனக்கான விருது எனது புதுவை மக்களுக்கானதாக சமர்ப்பிக்கிறேன். மக்கள் ஆதரித்து என்னை அங்கீகரிக்காவிடில் நான் இத்தனை ஆண்டுகள் தவிலை வாசித்திருக்க முடியாது. எனது இசைப் பயணத்தில் அடுத்தபடியாக திரைப்படத்தில் மங்கள இசையாக எனது தவில் ஒலிக்கவேண்டும் என்பதே ஆசை. எனது இசை சேவைக்கு மனைவி ஆதிலட்சுமி, மகள் புகழேந்தி என்ற சரிதா ஆகியோரும் உறுதுணையாக இருந்துவருகின்றனர்.
தவில் இசையில் நான் சாதித்தாலும் பாரதி குறும்படத்திலும், தொலைக்காட்சி நாடங்களிலும் நடித்த அனுபவம் உண்டு. அண்மையில் வெளியான திரைப்படம் ஒன்றில் பறை இசையை வாசிப்பது குறித்த பஞ்சாயத்து நாட்டாமையாகவும் நடித்துள்ளேன். ஆகவே, இசைப்பயணத்துடன் திரைப்பயணத்திலும் எனக்கு ஆசையுள்ளது.
"நாதாலய சங்கமம்' எனும் பெயரில் கரகாட்டம், இசை நிகழ்ச்சி என ஒருங்கிணைப்பு ஏற்பாட்டாளராகவும் உள்ளேன்'' என்கிறார் தட்சிணாமூர்த்தி.
படங்கள் : கி.ரமேஷ்.