உயிர் காப்போம்...

'ரத்த தானம் கொடுத்து உயிர் காப்போம்' என்கிறார் வ.அருள்சீனிவாசன்.
உயிர் காப்போம்...
Published on
Updated on
1 min read

'ரத்த தானம் கொடுத்து உயிர் காப்போம்' என்கிறார் வ.அருள்சீனிவாசன்.

திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் ஊராட்சியில் உள்ள காட்டுக்கொல்லையைச் சேர்ந்த ஐம்பத்து ஐந்து வயதான அருள் சீனிவாசன், இதுவரையில் 97 முறை ரத்த தானம் செய்துள்ளார்.

அவரிடம் பேசியபோது:

'வேலூரில் ஊரிசு கல்லூரியில் பி.எஸ்சி. படித்தபோது, ரத்த தானம் குறித்த ஆர்வம் ஏற்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் உறுப்பினரானபோது, அதனுடைய ரத்த தானக் கழகத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டேன். 1988-ஆம் ஆண்டு முதல் ரத்த தான விழிப்புணர்வை ஏற்படுத்தி, 1991 முதல் தானம் அளிக்கத் தொடங்கினேன்.

தேவைப்படுபவர்களுக்கும், தானாகவே முன்வந்து குறிப்பிட்ட கால இடைவெளியிலும் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு நானே சென்று அரசு ரத்த வங்கியில் ரத்த தானம் அளித்து வருகிறேன்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை, நாராயணி மருத்துவமனை, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, ஆம்பூர் அரசு மருத்துவமனைகளிலும் ரத்த தானம் அளித்து வருகிறேன்.

சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த நாளின்போதும் வழக்கமாகஅளித்துவிடுவேன். இதுவரை 97 முறை ரத்த தானம் அளித்துள்ளேன். விரைவில் நூறாவது முறையை எட்ட உள்ளேன்.

நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் ரத்த தானம் வழங்கலாம். உடல் ஆரோக்கியத்தை அதன் மூலம் பேணுவதற்கு நமக்கு வாய்ப்பாக உள்ளது.

ரத்த தானம் வழங்குவதால், ஒழுக்கமானவர்களாகவும் திகழலாம். ஆபத்தில் உள்ளவர்கள், நோயாளிகளின் உயிரை காக்க நமக்கு கிடைத்த நல்வாய்ப்பாகக் கருதி, இளைஞர்கள் ரத்த தானம் அளிக்க முன்வர வேண்டும். ரத்த தானம் அளித்து உயிர் காப்போம்.

அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எனது சேவையைப் பாராட்டி விருதுகளையும், சான்றிதழ்களையும் வழங்கியுள்ளன. இருப்பினும், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து ரத்த தானம் அளிப்பதே மன நிறைவைத் தருகிறது' என்கிறார் அருள்சீனிவாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com