பவள விழா கொண்டாடும் பள்ளி..!

சிதம்பரம் நகரில் 1950-இல் தொடங்கப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்தியாசாலை பள்ளி நிகழாண்டு பவள விழா கொண்டாட உள்ளது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்தியாசாலை பள்ளி
ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்தியாசாலை பள்ளி
Published on
Updated on
1 min read

சிதம்பரம் நகரில் 1950-இல் தொடங்கப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்தியாசாலை பள்ளி நிகழாண்டு பவள விழா கொண்டாட உள்ளது.

இதுகுறித்து பள்ளியின் செயலாளர் எஸ். ஆர். பாலசுப்பிரமணியனிடம் பேசியபோது:

'ஸ்ரீ ராமகிருஷ்ண வித்தியாசாலை' என்ற ஆரம்பப் பள்ளியை 1950-இல் வணிகர் செ.ரத்தினசாமி செட்டியார் நிறுவினார். 1950 ஜூன் 21-இல் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன சுவாமிகள் சித்பவானந்தர் திறந்து வைத்தார்.

1953 டிசம்பர் 5-இல் நடைபெற்ற பள்ளி விழாவில், சென்னை மாகாண கல்வித் துறை அமைச்சர் சி. சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். 1955 பிப்ரவரி 24-இல் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அதே ஆண்டு மார்ச்

20-இல் சென்னை மாகாண முதல்வர் கு.காமராஜர் பள்ளிக்கு வருகை தந்து, பள்ளி நிறுவனரின் அறப்பணியைப் பாராட்டி பார்வையாளர் பதிவேட்டில் குறிப்பு எழுதினார்.

1956 மார்ச் 7-இல் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் கல்வித்துறை இயக்குநர் நெ. து. சுந்தரவடிவேலு பங்கேற்றுப் பேசியுள்ளார். அதே ஆண்டு ஆகஸ்ட் 19-இல் அமைச்சர் சண்முக ராஜேந்திர சேதுபதி புதிய கட்டடத்தை திறந்து வைத்து, வேளாண்மை, தட்டச்சு ஆகிய தொழிற்கல்விப் பாடப் பிரிவுகளைத் தொடங்கி வைத்தார்.

1969 அக்டோபர் 31-இல் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் எஸ். வி. சிட்டிபாபு புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

1971-இல் பள்ளி நிறுவனர் இயற்கை எய்தியதால், அவரது மகன்கள் எஸ். ஆர்.பாலசுப்பிரமணியன் (நான்) தாளாளராகப் பொறுப்பேற்றேன். எனது சகோதரர்கள் எஸ். ஆர். ராமநாதன் தலைவராகவும், எஸ். ஆர். திருநாவுக்கரசு துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றனர்.

1975-இல் நடைபெற்ற பள்ளியின் வெள்ளிவிழாவில் அண்ணாமலைப் பல்கலைத் தமிழ்த் துறை பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் சிறப்புரையாற்றினார்.

1978-இல் இந்தப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 1986-இல் பள்ளியில் 'எஸ். ஆர். மெமோரியல் கம்ப்யூட்டர் சென்டர்' நிறுவப்பட்டு, பள்ளி மாணவர்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

பொன்விழாவின் போது முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளி நிறுவனர் முழு உருவச் சிலையை, தருமை ஆதீன குருமகா சன்னிதானம் சண்முக சுந்தர பரமாச்சார்ய சுவாமிகள் பள்ளி வளாகத்தில் திறந்து வைத்து ஆசியுரை வழங்கினார்.

2007-இல் பள்ளி நிறுவனர் செ.ரத்தினசாமி செட்டியாரின் நூற்றாண்டு விழாவின்போது, அஞ்சல் துறை சார்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. தமிழறிஞர்கள் க.வெள்ளைவாரணனார், சோ. சத்தியசீலன், அ.அறிவொளி உள்ளிட்டோர் உரையாற்றினர்.

2010-இல் நடைபெற்ற பள்ளியின் வைரவிழாவின்போது, அனைத்து மாணவர்களுக்கும் திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. 2020-இல் முன்னாள் தலைமையாசிரியர் பி. ஆர்.குருமூர்த்தி நினைவாக 10 கணினிகள் கொண்ட புதிய கனிணி மையம் இப்பள்ளியில் நிறுவப்பட்டு பயன்பாட்டில் உள்ளது'' என்கிறார் எஸ். ஆர். பாலசுப்பிரமணியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com