இரு இளைஞர்களின் உலகம்!

உணர்ச்சியாக சந்தோஷமாக அதே நேரத்தில் சிந்திக்கக் கூடிய படமாகவும் வந்திருக்கிறது.
இரு இளைஞர்களின் உலகம்!
Updated on
2 min read

உணர்ச்சியாக சந்தோஷமாக அதே நேரத்தில் சிந்திக்கக் கூடிய படமாகவும் வந்திருக்கிறது.

திரைக்கதை எழுதும் போது என்ன சந்தோஷம் இருந்ததோ, அதையே சினிமாவாக மாற்றும் போதும் அனுபவித்தேன். அடிமட்டத்திலிருந்து சினிமா பார்த்து முன்னேறி இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். மக்களின் அவலம் புரியும். துயரம் தெரியும்.

பயணங்களின் அருமை புரியும். நமது இயலாமை, இல்லாமைகளை உணர்ந்திருக்கிறேன். என் சினிமா உணர்வுப்பூர்வமாகவும், இயல்பாகவும் அமைய என் அனுபவங்களே உதவுகின்றன.

தொட்டு உணர்கிற மாதிரி உணர்வுகள் என் சினிமாவில் வந்தால் அதை விட கொடுப்பினை வேறு இல்லை. ஆர்வமாக பேசுகிறார் அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ். இயக்குநர் ராஜேஷ்.எம்மின் உதவியாளர். இப்போது 'கருப்பு பல்சர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வருகிறார்.

கருப்பு பல்சர்... தலைப்பு கவனம் கொள்கிறது....

கதையிலும் கருப்பு பல்சர் ஒன்று பயணமாகும். அதுவே கதைக்குப் பொருத்தமாக இருந்ததால், இந்தத் தலைப்பு.

நம் ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு ஆறாத வலி இருந்துக் கொண்டே இருக்கும். அந்த வலி ஏற்படுத்தும் பாதிப்புகள் நமக்குள் ஒரு கோபத்தை சாம்பல் மூடின தணல் மாதிரி பத்திரமாக வைத்திருக்கும். அந்தக் கோபத்தின் தணல் ஏற்படுத்தும் பாதிப்புகள்தான் படம்.

இயல்பான வாழ்க்கையை பதிவு செய்வதில் திரைக்கதை ரொம்பவே முக்கியம். படத்தின் மேக்கிங் இன்னும் பலம். நம்மைச் சுற்றி நடந்து வருகிற சம்பவங்கள்தான். அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளை கடந்து விடுகிற மனசு, எதாவது ஒரு பிரச்னையில் நின்று மிரட்சி கொள்ளும். அப்படி எனக்குள் இருந்த மன அழுத்தம்தான் கதை. போராடுவதும் வாழ்வதும்தானே மனிதனின் பேரழகு. அன்பும், போராட்டமும்தான் இந்த மானூடத்தின் நிரந்தரம். நல்லவன் கெட்டவனாகிறான்.

கெட்டவன் நல்லவனாகிறான். எதை வெறுக்கிறோமோ, அதை நேசிக்கிறோம். எதை விரும்பினோமோ. அதை வெறுக்கிறோம். ஒருவனை உயரத்தில் வைத்து இன்னொருவனை குழிக்குள் தள்ளி, கேட்காததை கொடுத்து கேட்டதை மறுத்து விளையாடுகிற இந்த காலம் ஒரு தனி மனிதனுக்கு பரிசளித்தது என்ன என்பதுதான் இங்கே கதைக்களம். எல்லா விதத்திலும் உங்களை கவனம் கொள்ள வைக்கும்.

ராஜேஷ் எம்மின் உதவியாளர்.... காமெடிக்கு பஞ்சம் இல்லாத கதையாகத்தான் இருக்கும்...

காமெடிதான் நம் வாழ்வின் பெரும் அத்தியாயம். அதை சினிமாவில் கொண்டு வருவது பெரும் சவால். அதை என் குரு ராஜேஷ் சாரிடம் கற்றுக் கொண்டேன். அதன் பாதிப்புகள் படம் முழுக்க இருக்கும். அபூர்வமான இந்த மனித பிறப்பு ஒரு முறைதான்.

அதை அழகா பூப் பூக்கிற மாதிரி நித்தமும் வாழ வேண்டும் என நினைக்கும் இரண்டு பேர். ஏமாற்றிப் பிழைக்காதவர்கள், சுயநலமாக சிந்திக்காதவர்கள், வஞ்சத்தை ஒளித்துக் கொண்டு பொய்முகம் காட்டி புன்னகைக்காதவர்கள், ஆதாயத்தைத் தேடாதவர்கள், இயலாதவர்களுக்காக வருத்தப்படுகிறவர்கள்.

இந்த உலகம் எந்த மாதிரி வாழ்க்கையை கொடுத்ததோ, அந்த வாழ்க்கையை இனிக்க இனிக்க வாழ ஆசைப்படுகிற இந்த இரண்டு இளைஞர்களின் உலகம்தான் கதை. அவர்களின் பயணத்தில் வருகிற ஒரு உன்னத காதல் இன்னும் கதையை இயல்பாக அதன் போக்கில் தள்ளி விட்டுப் போகும். இரு வேடங்களிலும் 'கெத்து' தினேஷ் வருகிறார்.

கதையின் உள்ளடக்கம் புரிகிறது.... இன்னும் கொஞ்சம் பேசலாமே....?

பல்கி பெருகுங்கள் இதுதான் ஆதாம், ஏவாள் பிறப்பின் அர்த்தம். ஆனால் இன்றைக்கு நம் லட்சியம், நோக்கம் எல்லாம் வேறாகி விட்டது. பிறக்கும் போதே இவன் டாக்டர், இவள் இன்ஜீனியர் என பெயர் சூட்டப்படுகிறது.

பிறப்பின் அடையாளங்கள் மாறி விட்டன. 'வகுப்பறைக்கு சென்று எல்லோரையும் நேசித்து வீடு திரும்பு', 'நன்மை செய்' எனச் சொல்லும் பெற்றோர்கள் இல்லை. 'அவனை நீ முந்திச் செல்'. 'இவனை ஓரங்கட்டுகிற அளவுக்கு மார்க் எடு' இப்படித்தான் அடுத்த தலைமுறை உந்தப்படுகிறது.

சூழ்நிலை கைதிகளாக சில தவறுகளைச் செய்கிறவர்களையும் கெட்டவர்கள் பட்டியலில் சேர்த்து விட்டு இந்த உலகமே மோசமாகி விட்டது என்ற வெறுப்போடும், அவ நம்பிக்கையோடும் எல்லாவற்றையும் அணுகும் மனநிலை ஆபத்து. தவறு செய்வது தவறில்லை.

இந்த உலகமே அப்படித்தான் இருக்கிறது என்று நம்புவது இன்னும் ஆபத்து. இது சினிமாவுக்கு மட்டுமே பொருந்தும், நிஜத்தில் சாத்தியமா என கேட்பவர்கள் உண்டு. பாசிட்டிவ் விஷயங்களை மனதில் இருத்திக் கொள்வது, இந்த சமூகத்தை பாதுகாப்பானதாக உணர வைக்க உதவும். அப்படியும் இந்தக் கதை பயணமாகும்.

தினேஷூக்கு இரு வேடம்... அவருக்கே இது புது களமாக இருக்கும்..

இந்தப் படம் துவங்கியதில் இருந்து நானும் தினேஷூம் அவ்வளவு நண்பர்கள். அவ்வளவாக அவர் பேச மாட்டார். ஆனால் காட்சிகளில் அவர் காட்டுகிற வேகம் புதிதாக இருக்கும். எல்லோரும் இரு வேடங்களில் தினேஷா? என கேட்டார்கள்.

ஆனால் அவர் வழக்கமாக கிராமத்து கதைகளிலேயே நடித்து வருவதால், இதை சென்னை போன்ற சிட்டி பகுதிக்கும் கொண்டு வந்திருக்கிறோம். மதுரை, சென்னை இரு களங்களிலும் கதை பயணிக்கும். மதுரை தினேஷ் ஜல்லிக் கட்டு வீரர். மாடு பிடியில் கருப்பு பல்சரை பரிசாக வென்றிருப்பார். அது சென்னையில் உள்ள இன்னொரு தினேஷூக்கு வருகிறது. இதுதான் களம்.

புதுமுகம் மதுனிகா, ரசவாதி போன்ற படங்களில் நடித்த ரேஷ்மா இருவரும் ஹீரோயின்கள். மன்சூர் அலிகான், பிராங் ஸ்டார் ராகுல், சரவண சுப்பையா, ஜெயிலர் கலையரசன்... இப்படி மற்ற இடங்களுக்கு பொருத்தமான நடிகர்கள்.

ஒளிப்பதிவுக்கு பாஸ்கர் ஆறுமுகம், இசையும் பாடல்களையும் இன்பராஜ் எழுதி இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பை சசி தாட்ச கவனித்திருக்கிறார். கதையின் உண்மைத்தன்மைக்கு பக்கத்தில் இருப்பவர்களை மட்டுமே இந்தப் படத்தில் பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன். இந்த நேரத்தில் நமக்குக் கிடைக்கிற நண்பர்கள், நாம் தேடிக்கிற சந்தோஷம், நம்ம உலகம் எல்லாமே அழகாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com