மாறிவரும் காலச்சூழலில் தன்னம்பிக்கையை இழந்து சோர்வடையும் இளையத் தலைமுறையினருக்கு இடையே வாழும் காலங்கள் கொஞ்சமாயினும் சாதனை படைக்க வேண்டும் என்ற முயற்சியுடன் தினசரி பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரைச் சேர்ந்த எண்பத்து எட்டு வயது முதியவரான எஸ்.என்.கொளந்தன்.
அவரிடம் பேசியபோது:
'நெடுஞ்சாலைத் துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன்.
சிறு வயது முதலே தடகளப் போட்டிகளில் பங்கேற்பேன். அந்த வகையில், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்றவற்றில் பயிற்சிகளைப் பெற்றேன். மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றேன். இதுவரையில் ஒன்பது தங்கப்பதக்கங்களை வென்றுள்ளேன்.
2014-இல் எனது எழுபத்து ஐந்தாவது வயதில் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய மூத்தோர் தடகளப் போட்டிகளில் பங்கேற்று விளையாடி ஏழாம் இடத்தைப் பிடித்தேன்.
வரும் மார்ச் மாதத்தில் பெங்களூரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கவும், அதன்பிறகு இந்தோனேஷியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவும் முயற்சித்து வருகிறேன். தற்போது அதற்கான பயிற்சியை தினசரி மேற்கொண்டு வருகிறேன்.
வயது மூப்பின் காரணமாக, 7.25 கிலோ எடையில் தொடங்கிய குண்டு எறிதல் தற்போது 3 கிலோ எடையாகக் குறைந்துள்ளது. அதிகபட்சம் 9 மீட்டர் வரையில் வீசி பயிற்சி எடுத்து வருகிறேன். வெரிகோஸ், பைபாஸ் சர்ஜரி, கால் மூட்டுகள் மாற்று அறுவைச் சிகிச்சை, காது கேளாமை போன்ற பிரச்னைகள் உடலில் இருப்பினும் ஆயுள் உள்ளவரை ஏதாவது ஒரு சாதனையை படைக்க வேண்டும் என்பதற்காகவே முயற்சித்து வருகிறேன்.
என்னுடைய ஆர்வத்துக்கு மனைவி எஸ்.பி.சரஸ்வதியும், மகன்களும் உறுதுணையாக இருக்கின்றனர்'' என்கிறார் கொளந்தன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.