வ.ஜெயபாண்டி
'இசை கேட்டால் புவி அசைந்தாடும்..' என்பது திரைப்படப் பாடல் வரி. தமிழர்களின் வாழ்வில் இசை என்பது பிறப்பது முதல் இறப்பது வரை இணைபிரியாத கலையாகவே அமைந்திருக்கிறது.
அந்த வகையில் திருமணத்தில் இணையும் தம்பதிகளைக் கூட யாழ் இசை போல இணைந்திருக்கவேண்டும் என வாழ்த்துவதும் மரபாகும். அப்படிப்பட்ட இசைச் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர் புதுச்சேரியைச் சேர்ந்த இசைத் தம்பதியான தணிகாசலம்- மீனாட்சி.
புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஜவஹர் பால் பவன் குழந்தைகள் வயலின் இசைப்பதைக் கேட்பதற்கென்றே குறிப்பிட்ட ரசிகர்கள் வருவதைக் காணமுடிகிறது. அந்த வகையில் அந்தக் குழந்தைகளின் இசைத் திறமையை வெளிக்கொணர்பவர்களாகவே இந்தத் தம்பதியர் உள்ளனர்.
வயலின் இசையில் கேட்போரை வசீகரிக்கும் திறமையுள்ள இருவரும் ஆறு வயது குழந்தைகள் முதல் பதினாறு வயது வரையிலான மாணவ, மாணவர்களுக்கு வயலின் இசைப் பயிற்சியை அளித்துவருகின்றனர். இவர்களிடம் பயிற்சி பெற்றோர் தேசிய அளவிலான இசைப் போட்டியில் பரிசுகளையும் வென்றுள்ளனர்.
புதுச்சேரி அரும்பார்த்தபுரம் திரிவேணி நகரில் சிவன் கோயில் அருகேயுள்ள வசிக்கும் தணிகாசலத்திடம் பேசியபோது:
'எனது பூர்விகம் புதுச்சேரி நெட்டப்பாக்கம்தான். அப்பா விநாயகம் , ஓதுவாராக இருந்தார். அவருடன் ஏழாம் வயதில் இருந்து கோயிலுக்குச் செல்லும்போது ஸ்ருதி பாக்ஸ் வாசிப்பேன்.
அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்த நிலையில், புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூடத்தில் வயலின் இசை பயின்றேன். அப்போதே பல்வேறு நிகழ்ச்சிகளில் எனது வயலின் இசையும் இடம் பெற்றுவந்தது. கல்விச் செலவுக்காக சைக்கிளில் சென்று பெரிய இடத்துக் குழந்தைகளுக்காக வயலின் கற்றுத் தந்தேன்.
இளநிலை இசைப் பட்டம் பெற்ற நான் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை இசைப் பட்டப்படிப்பை முடித்து, இளநிலை ஆய்வையும் அங்கு மேற்கொண்டுள்ளேன்.
சங்கத் தமிழ் நூலான 'பரிபாடலில் இசை' எனும் தலைப்பிலான ஆய்வுப் பட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்றேன். படிப்பை முடித்ததும் புதுச்சேரி ஜவஹர் பால் பவனில் தற்காலிக ஆசிரியராகப் பணிபுரிந்தேன்.
எனது மனைவி மீனாட்சியும் வயலின் இசையில் நாட்டமுடையவர். அவரது தந்தை புதுச்சேரி அகில இந்திய வானொலியில் மிருதங்க வித்வானாக இருந்தவர்.
பாரம்பரிய இசைக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் 2000-ஆம் ஆண்டில் இருந்து எனது வயலின் இசை பயணத்தில் உடனிருந்துவருகிறார். அவருடன் 18 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து வயலின் இசைப் பயிற்சி சேவையை குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறேன்.
எனது மனைவி 12 வயதிலிருந்தே இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுவருகிறார். எங்களுக்கு இசை சேவை என்பது ரத்தத்தில் ஊறியதாகவே மாறிவிட்டது.
எனது வயலின் இசைக்கு வி.சத்தியமூர்த்தி, குளச்சல் டி.சீனிவாசன் ஆகியோர் நேரடி ஆசிரியர்களாக இருந்தாலும், லால்குடி ஜெ.ஜெயராமன்தான் மானசீகக் குருவாக உள்ளார். குன்னக்குடி வைத்தியநாதன், லால்குடி ஜெ.ஜெயராமன் ஆகியோரின் வயலின் இசை பிடிக்கும்.
வயலின் இசை என்பது தமிழ் பாரம்பரிய யாழ் இசையை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், அது மேற்கத்திய இசை சாதன வடிவமைப்பாக உள்ளது. மனதுக்கு இதமாகவும், அமைதியை மனதில் ஏற்படுத்தக் கூடியதாகவும் வயலின் இசை மக்களிடையேயான தாக்கம் உள்ளது. ஆனால், மேலைநாடுகளில் வயலின் இசை நவீன விரைவான நடனத்துக்கான இசை சாதனமாகவும் உள்ளதை காணலாம்.
புதுச்சேரியில் கோயில்கள், அரசு நிகழ்வுகள், மக்களின் மங்கள விழாக்கள் என அனைத்து நிலைகளிலும் வயலின் தற்போது தவிர்க்க முடியாத இசையாக இடம் பெற்றுவருகிறது. வயலின் நிகழ்ச்சிக்காக புதுவை உள்ளிட்ட பல மாநிலங்களுக்குச் சென்றிருந்தாலும் பிரான்ஸ், வியத்நாம், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் வாசித்தது பெருமிதமாக உள்ளது.
வயலின் இசை மீட்டி பெருமைப்படுவதைவிட அதை பள்ளிக் குழந்தைகளுக்கு கற்றுத் தந்து அவர்கள் மேன்மையடையும்போது ஏற்படும் பெருமிதமே உயர்வான விருது பெற்ற மகிழ்ச்சியை எனக்கும், எனது மனைவிக்கும் ஏற்படுத்துகிறது.
2014 -ஆம் ஆண்டில் கோயில் நிகழ்ச்சியில் வயலின் வாசித்தபோது, அதை கேட்ட பித்துக்குளி முருகதாஸ் தனது கழுத்தில் கிடந்த ஸ்படிகமாலையை எனக்கு அணிவித்து பாராட்டியது மறக்கமுடியாதது.
தருமபுர ஆதினம் வழங்கிய 'கலாநிதி' பட்டம் நான் நினைத்துப் பார்க்காதது. பல்வேறு இசை அமைப்புகளால் 'சங்கீத சாரதி', 'சிறுவர் மேம்பாட்டு செம்மல்', 'நாதபோக சிரோன்மணி', 'இசைப் பெரு நெறி' உள்ளிட்ட பட்டங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளேன்.
புதுச்சேரி என்பது இசைக்கான பூமி என்பதற்கு தேவாரப் பதிகத்தின் முன்னோடியான காரைக்கால் அம்மையாரையே சாட்சியாக்கலாம். மகாகவி பாரதியும், 'நெல்லிடிக்கும் மகளிர் உள்ளிட்டோர் இசைக்கு மனதைப் பறிகொடுத்ததாக புதுச்சேரியில்தான் ராக தாளத்தோடு கவிதை பாடியுள்ளார்' என்பதையும் கவனிக்கவேண்டும்.
புதுச்சேரி இசைப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகவே வயலின் இசைச் சேவையைக் கருதி வருகிறோம். புதுவையில் இசைக்கென தனிப்பாரம்பரியம் உள்ள நிலையில், அதற்கு சங்கமும் அமைத்துள்ளோம்.
திரைப்பட வாய்ப்புகள் வந்தும், இறைவனுக்கும், சாமானியர்களுக்கும் செய்யும் சேவையை பெரிய வியாபாரமாக்க விரும்பவில்லை என மறுத்துவிட்டோம்.
தமிழகத்தில் உள்ளதைப் போன்று புதுவை அரசும் இசை கலைஞர்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கவேண்டும் என்பது எனது ஆசை.
இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பதன் மூலம் புதுவையில் இசை பாரம்பரியத்தைப் பாதுகாக்கலாம்' என்கிறார்.
படம் - கி.ரமேஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.