தமிழ்த் திரையுலகில் என்றென்றும் பசுமையான பாடல்களின் பட்டியலில் தவறாமல் இடம்பெறும் பாடல்கள் பலவற்றைப் பாடியவர் லோகநாதன். இவரது சொந்த ஊர் திருச்சி என்பதால், 'திருச்சி லோகநாதன்' என்றே திரையுலகில் பாடகராக அறிமுகமானார். 1924 ஜூலை 24-இல் பிறந்த அவருக்கு இது நூற்றாண்டு.
'உலவும் தென்றல் காற்றினிலே...', பொன்னான கைகள் புண்ணாகலாமா..? என இன்னும் எத்தனையோ பாடல்கள் மூலம் தமிழ் மக்கள் நெஞ்சங்களில் இசை உருவில் உலவிக் கொண்டிருக்கிறார் திருச்சி லோகநாதன்.
சிறு வயது முதலே இவருக்கு ஆர்வம். தந்தை சுப்ரமணியனுக்கு நகை செய்யும் தொழில். நகைத் தொழிலில் ஆர்வம் இல்லாமல், உள்ளூரிலேயே சங்கீதம் கற்றுகொண்டார். எப்போதும் ஏராளமான திரைப் புத்தகங்களை வைத்துகொண்டு பாடல்களைப் பாடிக்கொண்டே இருப்பார். ஊரில் யார், 'லோகு! நீ நல்லா பாடுவியாமே! எங்கே ஒரு பாட்டுப் பாடு பர்க்கலாம்!' என்று கேட்டாலும் துளியும் தயக்கமில்லாமல் தன் கணீரென்று பாட ஆரம்பித்துவிடுவார்.
பாடல்களைத் திரையில் தோன்றி வாயசைக்கும் நடிகர்களுக்கு ஏற்ப பாடவேண்டும் என்ற சென்டிமென்ட்டுக்குள் மாட்டிக் கொள்ளாமல், தனக்கே உரிய கணீரென்ற குரலில் பாடுவதை தன் பிரத்யேக பாணியாகக் கொண்டிருந்தவர் அவர். எனவேதான் அவர் யாருக்காகப் பாடினாலும், அவருடைய குரலுக்காகவே அது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இளம் வயதில் அன்றைய பிரபல இசையமைப்பாளரான ஜி.ராமநாதன் இசையமைத்த பாடல்களைத் திறமையாகப் பாடிய திருச்சி லோகநாதன், பிற்காலத்தில் அவராலேயே பின்னணிப் பாடகராக திரையுலகில் அறிமுகமானார். முதல் பாடலே எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த 'மந்திரிகுமாரி' படத்தில் இடம்பெற்ற 'வாராய் நீ வாராய்... போகுமிடம் வெகுதூரமில்லை... நீ வாராய்'! 'வாராய்....' என்பதுதான். உடன் பாடியவர் ஜிக்கி.
இரண்டாவது பாடல் மு. கருணாநிதி கதை வசனத்தில் உருவான 'அபிமன்யு' என்ற படத்தில் பாடிய 'இனி வசந்தமாம் வாழ்விலே...' என்ற பாடல்.
'வண்ணக்கிளி' என்ற படத்தில் லோகநாதன் பாடிய 'அடிக்கிற கைதான் அணைக்கும்...' என்ற பாடலில் இடையில் விக்கல் ஒலி வரும். அந்த விக்கல் ஒலியில் ரசிகர்கள் கிறங்கிப் போனார்கள்.
'கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் ப்ரமாதம் - அந்த கெளரவப் பிரசாதம் இதுவே எனக்குப் போதும்...' என்ற பாடல் 1957--இல் தெலுங்கிலும், தமிழிலும் வெளிவந்து சூப்பர் ஹிட்டான 'மாயா பஜார்' படத்தில் இடம்பெற்றது.
நடிகர் எஸ்.வி. ரங்காராவ் கடோத்கஜனாக நடித்த அந்தப் பாடலுக்குரிய காட்சியில் இடம்பெறும் விதம்விதமான சாப்பாட்டு ஐட்டங்கலைப் பார்க்கிறபோதே நாக்கில் எச்சில் ஊறும். அந்தக் காலத்தில், இந்தப் பாடலைப் பாடியபடியே, குழந்தைகளுக்கு சாதம் ஊட்டிவிடுவார்கள்.
'ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே..' என்ற பாடலைக் கேட்கும்போது ரசிகர்கள் தாங்களே படகில் ஏறி உலா வருவது போன்ற உணர்வை ஏற்படுத்திவிடும்.
புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே, தங்கச்சிக் கண்ணே..' - இது 'பானை பிடித்தவள் பாக்கியசாலி' என்ற படத்தில் இடம்பெற்ற பாடல். அந்தக் கால திருமண வீடுகளில் தவறாமல் ஒலிபரப்பாகும் பாடல் இது.
அவர் மிகச் சிறந்த பாடகர் மட்டுமில்லை; அபாரமான ரசிகரும் கூட. நடிகர் தங்கவேலு- சரோஜா தம்பதியர் தங்கள் வீட்டில் ஆண்டுதோறும் நவராத்திரியை வெகு விமரிசையாகக் கொண்டாடுவார்கள். ஒருமுறை, அவர்கள் வீட்டு நவராத்திரியின்போது மதுரை சோமு சில பாடல்களைப் பாடினார்.
இந்தப் பாடல்களைக் கேட்டு சொக்கிப் போனார் அங்கே இருந்த திருச்சி லோகநாதன், பாடி முடித்தவுடன் விறுவிறுவென சோமுவின் அருகே சென்று, 'பிரமாதம்! பிரமாதம்!' என்று சொல்லி மனதாரப் பாராட்டினார். அடுத்து, தன் கையில் இருந்த வெள்ளி வெற்றிலைப் பெட்டியை அன்பளிப்பாகக் கொடுத்தார்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த 'தூக்குத்தூக்கி' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த எட்டு பாடல்களையும் பாடும் வாய்ப்பு திருச்சி லோகநாதனுக்கு வந்தது. அவரோ ஒரு பாடலுக்கு ஐநூறு ரூபாய் சம்பளம் கேட்டார்.
சம்பளத்தைக் குறைக்குமாறு தயாரிப்பாளர்கள் கேட்டபோது, அதை விரும்பாத திருச்சி லோகநாதன், 'மதுரையிலிருந்து புதியதாய் ஒரு பாடகர் வந்திருக்கார், அவரை பாடச் சொல்லுங்கள்' என்று கூறிவிட்டார். அவர் சுட்டிக் காட்டிய மதுரைக்காரர் யார் தெரியுமா? டி. எம். சௌந்தரராஜன்தான்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.