'சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடும் பழமாக வாழைப்பழம் உள்ளது'' என்கிறார் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஆர்.செல்வராஜன்.
'வாழைப் பழத்தை எந்த நிலையில் சாப்பிட்டால் சர்க்கரை உயராது' என்ற ஆய்வை திருச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட தாயனூரில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தினர் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர்.
இதுதொடர்பாக, ஆர். செல்வராஜனிடம் பேசியபோது:
'உலகில் 422 மில்லியன் மக்கள் சர்க்கரை நோய்க்கு (நீரிழிவு நோய்) ஆளாகியுள்ளனர். பெரியவர்
களில் 11 பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
நீரிழிவு நோயாளிகள் தாங்கள் உண்ணும் உணவுக்குப் பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு அதிகரிக்கும் என்பதைஅறியும் 'கிளைசெமிக் குறியீடு' (சர்க்கரை உயர்த்தல் குறியீடு) எவ்வளவு என்பதைக் கணக்கிடுகின்றனர்.
கிளைசெமிக் குறியீடு 55-க்கு கீழ் உள்ள உணவுகள் குறைந்த சர்க்கரை உயர்த்துபவையாகவும், 56 முதல் 69 வரையில் இருந்தால் அவை நடுத்தர சர்க்கரை உயர்த்துபவையாகவும்,
70-க்கும் மேலான குறியீடு என்பது உயர் சர்க்கரை உயர்த்தலாகவும் வகைப்படுத்தப்படுகிறது.
பழுத்த வாழைப்பழங்களில் அதிகமாக ஸ்டார்ச், இயற்கை சர்க்கரைகள் இருப்பதால் உயர் சர்க்கரை உயர்த்தல் உணவாகக் கருதப்படுகிறது.
இந்தியாவில் வணிக ரீதியாகப் பயிரிடப்படும் பச்சை வாழை, நெய் வாழை என 12 வகையான பழங்களில் கிளைசெமிக் குறியீடு 55 முதல் 75 வரை உள்ளதால் அவை நடுத்தர, உயர் சர்க்கரை உயர்த்தல் உணவுகள் என கண்டறியப்பட்டுள்ளன. இதனால், சர்க்கரை நோயாளிகள் பலரும் வாழைப் பழம் என்றாலே ஒதுக்குகின்றனர். தங்களுக்கான உணவுப் பட்டியலில் வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்வதில்லை.
ஒரு வாழைப் பழத்தின் மொத்த அளவில் 32 % முதல் 36 % ஸ்டார்ச் எனும் மாவுச்சத்து உள்ளது. மீதமுள்ளவை நீர், பிற ஊட்டச்சத்து
களாகும். கனிந்த வாழைப் பழத்தில் 27 % முதல் 30 % இயற்கை சர்க்கரையான குளுகோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் ஆகியன உள்ளன. இதுமட்டுமல்லாது 2 % புரதம், 0.5 % கொழுப்பு, 0.02 % தாதுக்களும் உள்ளன.
வாழைப் பழம் கனிவது 7 நிலையாக வகைப்படுத்தப்படுகிறது. முழு பச்சை, சிறிதளவு மஞ்சளுடன் கூடிய பச்சை, மஞ்சளைவிட கூடுதல் பச்சை, பச்சையைவிட கூடுதல் மஞ்சள், பச்சை நுனிகளுடன் கூடிய மஞ்சள், முழு மஞ்சள், பழுப்பு அல்லது கறுப்பு நிற புள்ளிகளுடன் முழு மஞ்சள் என 7 நிலைகள் உள்ளன.
ஐந்தாவது நிலையான பச்சை நுனிகளுடன் கூடிய மஞ்சள் நிறத்திலான வாழைப் பழத்தில் கிளைசெமிக் குறியீடு 48 முதல் 60 ஆக உள்ளது. இவை குறைந்த, நடுத்தர சர்க்கரை உயர்த்துதல் பண்பை கொண்டவை என்பதால் சர்க்கரை நோயாளிகள் இந்த நிலையான வாழைப் பழத்தை உண்ணலாம். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கென்ற பிரத்யேக வாழை ரகமும் உள்ளது. 'பிசாங் லிலின்' என்ற வாழை ரகம் கிளைசெமிக் குறியீட்டை 51-ஆகக் கொண்டதாகும். இது
நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதற்கான பழம் என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ரகமானது 'காவேரி', 'மெழுகுதிரி' என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலும்,
கேரளத்தில் திருவனந்தபுரம், கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிகம் பயிரிடப்படுகிறது. இவை நடுத்தர அளவிலான வாழைத்தார் கொண்ட ரகமாகும். 11 முதல் 13 கிலோ எடை கொண்ட வாழைத்தார்களாக இருக்கும். ஒரு தாருக்கு 7 முதல் 10 சீப்புகள் கிடைக்கும். ஒரு பழம் 60 முதல் 80 கிராம் எடை கொண்டது. 10 செ.மீ. முதல் 16 செ.மீ. நீளம் கொண்டவை.
இது சர்க்கரை நோயாளிகளுக்கான ஏற்ற பழமாகும். இதேபோல, குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட பழங்களை அறிமுகம் செய்வதில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது'' என்கிறார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.