
இயற்கையின் கொடையாக, இயற்கை அன்னை தன் அழகைக் கொட்டித் தீர்த்து ஆனந்தம் அடைந்ததோ என எண்ணும் அளவுக்கு பிச்சாவரம் அலையாத்தி வனப் பகுதிகள் பரந்துவிரிந்துள்ளன. சுற்றுலா ஆர்வலர்கள் சென்று வர உகந்த இடம்.
சிதம்பரம் நகரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பிச்சாவரத்துக்கு இரு வழித்தடங்களில் அரைமணி நேரத்துக்கு ஒரு பேருந்து உள்ளது. வார இறுதி நாள்களில் கடலூரில் இருந்தும் நேரடி பேருந்து வசதி உள்ளது.
கடலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பரங்கிப்பேட்டை அருகேயுள்ள பிச்சாவரத்தில் சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் வனப் பகுதி உள்ளது. சதுப்பு நிலங்களில் வளரும் சுரபுன்னை எனும் தாவரங்களை அடர்த்தியாகக் கொண்டு காணப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் கங்கை ஆறு கடலில் கலக்கும் இடத்தில் இதுபோன்ற சுரபுன்னை எனப்
படும் 'மாங்க்ரோவ்' வனப்பகுதிகள் அமைந்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக மிகப் பெரிய சுரபுன்னை வனமாக, தமிழகத்தில் உள்ள பிச்சாவரத்தில்தான் உள்ளது.
தண்ணீருக்குள் வேர்களைக் கொண்டு அடர்தாவரங்களாகக் காணப்படுகின்றன. இந்தக் கால்வாய்களின் வழியே படகுசவாரி செய்வது ஆனந்தமான தருணமாகும். படகில் வனப் பகுதியில் உள்ள கால்வாயின் ஒருபுறத்தின் வழியாக உள்ளே சென்று, மறுபுறத்தின் வழியாக வெளியே வரும்போது சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைக்கும் இனிமையான அனுபவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஆனால், தனியாகச் சென்றால் வழி தெரியாமல் திக்குமுக்காட வேண்டியிருக்கிறது.
'நாரையும் அறியா 4 ஆயிரம் கால்வாய்கள்' எனக் கூறப்படுவதற்கேற்ப சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்வாய்களைக் கொண்டு இந்த வனப் பகுதி விளங்குகிறது.
பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.
உப்பனாறு கடலில் கலக்கும் கடல் முகத்துவாரத்தில்தான் இந்தத் தாவரங்கள் பரந்துவிரிந்து காணப்படுகின்றன. 'தில்லை சுரபுன்னை என பல வகையான தாவரங்கள் நிறைந்த வனப்பகுதியாக பிச்சாவரம் வனப்பகுதி விளங்குகிறது.
சுரபுன்னை தாவரத்தில் இருந்து முருங்கைக் காயைப் போல நீண்டிருக்கும் காய்கள் தண்ணீருக்கு அடியில் உள்ள சதுப்பு நிலத்தில் விழுந்தவுடன் அதுவே வேராக, செடியாக மாறுகிறது.
பிச்சாவரம் வனப் பகுதிக்குள் சென்றுவிட்டால் வெயில் தெரிவதில்லை. இங்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே எம்.ஜி.ஆர். நடித்த 'இதயக்கனி' படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. அதன்பிறகு 'துப்பறிவாளன்', 'தசாவதாரம்' உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்கள் இந்த வனப் பகுதியில் படமாக்கப்பட்டன. இதுதவிர, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழித் திரைப்படங்களும் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.
பிச்சாவரத்தில் 50க்கும் மேற்பட்ட துடுப்புப் படகுகளும், மோட்டார் படகுகளும் இருக்கின்றன. துடுப்புப் படகில் ஒரு மணி நேரத்தில் 1 கி.மீ. சென்று வனப்பகுதியை ரசிக்க 4 பேருக்கு ரூ.450ம், 6 பேருக்கு ரூ.650ம் வசூலிக்கப்படுகிறது. இதுபோல், மோட்டார் படகில் அதிகபட்சமாக 8 பேர் வரை 2 கி.மீ. தூரம் பயணிக்க, 40 நிமிடங்களுக்கு ரூ.1,850 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.