திரைக்கதிர்

கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி பாலுமகேந்திராவின் நினைவு நாளாகும்.
திரைக்கதிர்
Published on
Updated on
2 min read

கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி பாலுமகேந்திராவின் நினைவு நாளாகும். அவரை போற்றும் விதமாக வெற்றிமாறனின் திரைப் பண்பாட்டு இயக்கம் சார்பில் நான்கு நாள்கள் நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் பேசிய இளையராஜா 'ஒருசில இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைக்கும் போது, மனதுக்கு இதமாக ரிலீஃப் ஆக இருக்கும்.

அப்படி ஒரு உணர்வை ஏற்படுத்தக்கூடிய அளவில் பாலுமகேந்திராவின் படங்கள் இருக்கும் என்பதால், ரொம்பவே இன்னும் ரசனையோடு செய்வேன். அவரது ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையே இசையமைக்கும் இடைவெளிகளில் நான் நூறு படங்களுக்கு இசையமைத்து முடித்திருப்பேன்' என நெகிழ்ந்துள்ளார்.

எஸ்.கே.வின் பிறந்தநாளை முன்னிட்டு 'பராசக்தி' படத்தின் பி.டி.எஸ் காணொளியைப் படக்குழு வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.

முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு 'மதராஸி' எனத் தலைப்பை வைத்து, டைட்டில் டீசர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டிருக்கிறது. பிறந்த நாளுக்கு கமல்ஹாசன், சிவகார்த்திகேயனை வாழ்த்தி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், 'தன் தனித்திறமையால் மக்களை மகிழ்விப்பதில் தம்பி சிவகார்த்திகேயன் காட்டும் உழைப்பும், சினிமாவின் மீதான அவரது காதலும் என்றென்றும் தொடரட்டும், வெற்றிகள் குவியட்டும் எனப் பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யின் சச்சின் வெளியாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்ய இன்னும் கொஞ்ச நாள்களே இருக்கிறது. இந்தாண்டு கோடையில் ரீ ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் அறிவித்திருந்தார். தயாரிப்பாளரின் அறிவிப்பு பதிவுக்கு பதில் பதிவு ஒன்று போட்டிருக்கிறார் ஜெனிலியா.

அந்தப் பதிவில் அவர், 'சச்சின் படத்திற்கு என்றும் என் மனதில் இடமுண்டு. சச்சின் படத்திற்கு என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி சார். படப்பிடிப்பு நாள்களும் முழுவதும் என்னை நல்லபடியாக பார்த்துக் கொண்டதற்கு நன்றி. இதுவரை நான் பங்கேற்ற சிறந்த படப்பிடிப்புகளில் இதுவும் ஒன்று'' என தயாரிப்பாளர் தாணுவிற்கு நன்றி சொல்லியிருக்கிறார்.

முரளி பிரபாகரன் தயாரிப்பில், சாய் பிரபா மீனா இயக்கும் படத்தில் கூல் சுரேஷ், செந்தில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் துவக்க விழாவில் ஏராளமான திரைப் பிரலங்கள் கலந்து கொண்டனர். ஒரு நாற்காலி அதில் அமரப்போகும் தலைவன் யார் எனும் போட்டி, நான்கு கேங்ஸ்டர் குழுக்களுக்கிடையே நடக்கிறது.

அதில் வெல்லப்போவது யார் என்பது தான் இப்படத்தின் மையம். திரை வாழ்க்கையில் மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த நடிகர் செந்தில் முற்றிலும் மாறுபட்ட கேங்ஸ்டராக இப்படத்தில் கலக்கவுள்ளார். இவருடன் கூல் சுரேஷ் கேங்கஸ்டராக நடிக்க, எம். எஸ். ஆரோன் மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

முரளி, வடிவேலு இணைந்து நடித்து 2002- ஆம் ஆண்டு வெளியான 'சுந்தரா டிராவல்ஸ்' படம் மாபெரும் வெற்றி பெற்று மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அன்று முதல் இன்று வரை யாராலும் மறக்க முடியாத படமாக இருந்து வருகிறது.

தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்துக்கு 'சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட்' என்று தலைப்பிட்டுள்ளனர். கருணாஸ், கருணாகரன் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com