மீட்டெடுக்கப்படும் மரப்பாச்சி பொம்மைகள்...

நவீன உலகில் குழந்தைகள் விளையாடுவதற்கு நெகிழிப் பொம்மைகள், ரப்பர் பொம்மைகளின் பயன்பாடு பரவலாகிவிட்டதால், பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த மரப்பாச்சி பொம்மைகள் வழக்கொழிந்துவிட்டது.
மீட்டெடுக்கப்படும் மரப்பாச்சி பொம்மைகள்...
Published on
Updated on
2 min read

நவீன உலகில் குழந்தைகள் விளையாடுவதற்கு நெகிழிப் பொம்மைகள், ரப்பர் பொம்மைகளின் பயன்பாடு பரவலாகிவிட்டதால், பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த மரப்பாச்சி பொம்மைகள் வழக்கொழிந்துவிட்டது.

இந்த மரப்பாச்சி பொம்மைக் கலையை மீட்டெடுக்கும் முயற்சியில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசுத் திட்டமான தமிழ் மண்ணின் பாரம்பரிய கைவினைக் கலைகளை மீட்டெடுத்தல் பயிற்சித் திட்டத்தில், ஜனவரி 31 முதல் மார்ச் 1 வரை நடைபெறும் பயிற்சியில் 25 பேர் இணைந்துள்ளனர். இருவரைத் தவிர மற்ற அனைவரும் பெண்களே.

இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்ப் பல்கலை. சிற்பத் துறைத் தலைவருமான முனைவர் வே. லதாவிடம் பேசியபோது:

'மரப்பாச்சி பொம்மைகள் ஆண், பெண் வடிவில் ஜோடியாகச் செய்யப்படும். திருமணத்தின்போது பெண் வீட்டார் தனது மகளுக்கு சீதனமாக வழங்குவர். தம்பதியினர் இணைப் பிரியாமல் வாழ வேண்டும் என்பதை அறிவுறுத்தும் விதமாக,

இந்தப் பொம்மைகளை அக்காலத்தில் வழங்கினர். நவராத்திரி பண்டிகையின்போதும் இந்தப் பொம்மைகளையும் வைத்து வழிபட்டு வந்தனர். ஆந்திர மாநிலத்தில் ஏழுமலையானும், அலர்மேல் மங்கை வடிவிலும் வடிவமைக்கப்படும்.

கருங்காலி, செஞ்சந்தனம், முள்ளிலவு, ஊசியிலை மரங்களிலிருந்து பொம்மைகள் செய்யப்படும்.

கர்நாடகம், குஜராத், ஒடிஸ்ஸா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டது.

செஞ்சந்தன மரத்தால் செய்யப்படும் மரப்பாச்சி பொம்மைகள் மருத்துவக் குணமுடையது. இதை குழந்தைகள் வாயில் வைத்து விளையாடும்போது, அவர்களுக்கு ஆரோக்கியமும் கிடைத்தது. குழந்தைகளுக்கு உடல் சூட்டைக் குறைக்க இந்த மரப்பாச்சி பொம்மையை அரைத்து, சாறு சங்கு மூலம் புகட்டப்படும்.

நவீனமயமாக்கலில் இந்த மரப்பாச்சி பொம்மைகள் தயாரிப்பு நலிவடைந்துவிட்டது. இந்தக் கலையை மீட்டெடுப்பதற்காகப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இல்லத்தரசிகள், வருவாயில் பின்தங்கிய பெண்கள் உள்ளிட்டோர் தொழில்முனைவோர்களாக மாறுவதற்காக இருந்தாலும், இந்தக் கலையை வளர்த்தெடுக்க ஆர்வமுடன் முன் வந்துள்ளனர். தற்போது பொம்மைகளைத் தன்னிச்சையாகவே செதுக்கி வடிவமைக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளனர்.

தற்போது நெகிழியிலும், ரப்பரிலும் செய்யப்படும் பொம்மைகளைக் குழந்தைகள் வாயில் வைக்கும்போது, அதன் மூலமாகப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதைத் தவிர்க்க, மரப்பாச்சி பொம்மைகளைப் பயன்படுத்தலாம்' என்கிறார் லதா.

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட ஆரணியைச் சேர்ந்த மரச்சிற்ப நுண்கலை பட்டதாரியும் பயிற்சியாளருமான ப. சிவானந்தம் கூறியது:

'கருங்காலி மரம், செஞ்சந்தன மரம், ஊசியிலை மரம் போன்ற பால் வரக்கூடிய மரங்களிலிருந்து இந்த மரப்பாச்சி பொம்மைகளைச் செய்ய முடியும்.

பொம்மை வடிவில் பேப்பரில் வரைந்து, அதே வடிவத்துக்குக் கத்திரிக்கப்படும். பின்னர் ஒரு அடி (12 அங்குலம்) உயரம், 5 அங்குலம் நீளம், 2 அங்குலம் அகலம் கொண்ட மரக்கட்டையில் காகித வடிவத்தை வைத்து செதுக்கப்படும்.

மரக்கட்டையில் பட்டை உளியைக் கொண்டு தேவையில்லாதப் பகுதியை அகற்றுவோம். குழவு உளி மூலம் கை, கால், உடல் பாகங்களைச் செதுக்கிவிட்டு, முகத்தைக் கீற்று உளியில் செதுக்குவோம்.

ஆண், பெண் பொம்மைகள் பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும், தலையில் கிரீடம், கொண்டை என வேறுபட்டிருக்கும். பெண் பொம்மையில் மார்பகம், இடைக்கட்டு, கழுத்தில் ஆபரணங்களும் செதுக்கப்படும். ஆண் பொம்மையில் தோள்பட்டையில் வேலைப்பாடு இருக்கும். இரு பொம்மைகளும் பத்ம பீடத்துடன் செதுக்கப்படும். முழுமையாகச் செதுக்கப்பட்ட பின்னர், வார்னிஷில் வண்ணம் பூசப்படும்.

இந்தக் கலையைக் கற்றுக் கொள்பவர்கள் தொடக்கத்தில் ஒரு பொம்மையைச் செய்வதற்கு சில நாள்களாகும். தேர்ச்சி பெற்றவுடன் இரு மணிநேரத்தில் ஒரு பொம்மையைச் செய்துவிடலாம்.

ஜோடி பொம்மைகள் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரத்து 500 வரை விலை போகும். இதன் மூலம் இரு மடங்கு லாபம் கிடைக்கும். இந்தப் பொம்மைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களிலேயே இருக்கின்றன.

வீட்டில் பயன்படுத்தப்பட்ட 250 மரப்பொருள்களில் மரப்பாச்சி பொம்மையும் ஒன்றாக இருந்தது. வீட்டுக்கு வீடு இருந்த இப்பொம்மைகள் இப்போது பார்ப்பதே அரிதாகிவிட்டது.

கரோனா காலத்தில் மரப்பாச்சி பொம்மைகள் உற்பத்தி முற்றிலுமாக முடங்கிவிட்டது.

தற்போது பயிற்சி அளிக்கப்படுவதால் இந்தக் கலையை மீட்டெடுக்க வாய்ப்பாக உள்ளது' என்கிறார் சிவானந்தம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com