அபிலிம்பிக்ஸில் புகைப்படப் போட்டியில் உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறார் நாற்பத்து நான்கு வயதான ஹரிசாந்தன்.
திருச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட துறையூர் அருகேயுள்ள கண்ணனூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த இவர், இளம்பிள்ளைவாதம் பாதித்து, மூன்றரை வயதில் தனது இடது காலில் 75 சதம் செயலிழந்தார். இருந்தாலும் அவர் தனது செயல்திறனில் இம்மியளவும் இழக்கவில்லை. மாற்றுத் திறனாளிகளுக்குள் ஒளிந்திருக்கும் திறன்களை வெளிக் கொணருகிறது இவரது புகைப்படங்கள்.
மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமையைக் காட்டும் அபிலிம்பிக்ஸ் போட்டியில் சாதனைகளைப் படைத்துவரும் ஹரி சாந்தனிடம் பேசியபோது:
'கோத்தகிரி, இலங்கை என பல இடங்களில் தேயிலைத் தோட்டத்தில் எனது தந்தை பணிபுரிந்து, என்னுடன் சேர்ந்து 5 வாரிசுகளை வளர்த்தார். நான் பத்தாம் வகுப்பு பயிலும்போது தந்தை இறந்துவிட்டார். பிளஸ் 2 வரை படித்து முடித்தேன்.
பின்னர், திரைத்துறையில் கொண்ட ஆர்வத்தால், சென்னையில் திரைப்படம் குறித்த பட்டயப் படிப்பில் சேர்ந்து அதனையும் தொடர முடியாமல் போனது. இடையிடையே கிடைக்கின்ற சிறிய வேலையை பார்த்து குடும்பத்துக்கு உதவினேன். இருந்தபோதும், திரைத்துறை மீதான ஆர்வம் குறையவில்லை.
பெரம்பலூரில் "தமிழோசை' எனும் ஸ்டூடியோ நடத்தி வரும் யாழ்மதியின் நட்பு கிடைத்தது. அவர்தான் புகைப்படத் தொழிலைக் கற்றுத் தந்தவர். இருபது ஆண்டுகளாக எனக்கு அவர்தான் ஆசான். ஆரம்பத்தில் புகைப்படச் சுருள் (பிலிம்) கேமராவில் கற்றேன். இப்போது, டிஜிட்டல் மயமாகிவிட்டது.
எல்லோரும் புகைப்படங்களை எடுக்கலாம். ஆனால், சிறந்த புகைப்படக் கலைஞரால் மட்டுமே சிறந்த புகைப்படங்களைத் தர முடியும். நினைவுகளின் சேமிப்புகளாகவும், கடந்த காலத்தை நிகழ்காலத்தில் கண்டுணரவும் ஆதாரமாக இருப்பவையே புகைப்படங்கள். ஒரு புகைப்படம் ஆயிரம் வலிகளையும், உணர்வுகளையும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கடத்திச் செல்லும் திறன் கொண்டவை. பசி, பஞ்சம், போர், அகதிகளாக இடம்பெயர்தல் என உலகை உலுக்கும் புகைப்படங்கள் பலவற்றை உதாரணமாகக் கூறலாம்.
நானும் சிறந்த புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற முயன்றபோதுதான் மாற்றுத்திறனாளிகளின் திறனை வெளிக்கொணரும் இந்திய தேசிய அபிலிம்பிக் சங்கம் (என்.ஏ.ஏ.ஐ), சர்தக் குளோபல் ரிசோர்ஸ் சென்டர் ( எஸ்.ஜி.ஆர்.சி.) அமைப்புகளின் செயல்பாடுகளை அறிந்து அதில் இணைந்து என்னை மெருகேற்றிக் கொண்டேன். அங்கு கிடைத்த பயிற்சிதான் என்னை உயர்த்தியது.
2007-இல் அபிலிம்பிக்ஸ் தேசிய அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, சர்வதேச அளவில் ஜப்பானில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று, வெண்கலப் பதக்கத்தைப் பெற்றேன். பெங்களூரில் தென்னிந்திய அளவிலான அபிலிம்பிக்ஸ் புகைப்பட போட்டியிலும் இரண்டாவது இடம் பிடித்தேன். 2007-இல் தில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்று, அப்போதைய முதல்வர் ஷீலா தீட்சித்திடம் பதக்கம் பெற்றேன்.
2024-அபிலிம்பிக்ஸ் போட்டிகள் ஹரியானாவில் டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதில் புகைப்படப் போட்டியில் பங்கேற்று இரண்டாவது இடத்தைப் பெற்று, வெள்ளிப்பதக்கமும் வென்றேன். இதன் மூலம், சர்வதேச அபிலிம்பிக்ஸில் 2027-இல் நடைபெறும் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க உள்ளேன். அதற்கு தயார்படுத்தும் வகையில் எஸ்.ஜி.ஆர்.சி. மூலம் பல்வேறு பயிற்சிகளும் பெறவுள்ளேன். இந்த முறை இந்தியாவுக்கு தங்கம் பெற்றுத்தர வேண்டும் என்பதே எனது ஆசை.
அபிலிம்பிக்ஸ் (திறமைகளின் ஒலிம்பிக்ஸ்) என்பது மாற்றுத்திறனாளிகள் தங்கள் தனித்திறமைகளை வெளிக்கொணர்வதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தொழில் திறன் போட்டிகளாகும். சர்வதேச அளவில் இந்தப் போட்டிகள் முதன்முறையாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 1981-இல் நடைபெற்றது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் ஆறாவது அலிம்பிக்ஸ் போட்டிகள் நடத்துவதற்காக, மத்திய அரசின் மனிதவளத்துறையால், தில்லியில் 2001-இல் இந்திய தேசிய அபிலிம்பிக் சங்கம் (என்.ஏ.ஏ.ஐ.) உருவாக்கப்பட்டது. இதேபோல, மாற்றுத்திறனாளிகளின் திறன்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு உருவாக்கும் அமைப்பான சர்தக் குளோபல் ரிசோர்ஸ் சென்டர் (எஸ்.ஜி.ஆர்.சி.), ஹரியானாவில் இயங்கி வருகிறது. இவற்றை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்கிறார் ஹரிசாந்தன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.