அன்று டெலிவரி பாய்; இன்று நீதிபதி!

'ஒருவரின் வளர்ச்சியை சூழ்நிலையே தீர்மானிக்கும். ஆணாதிக்கச் சமூகத்தில் ஆணாக இருப்பது நன்மை.
அன்று டெலிவரி பாய்; இன்று நீதிபதி!
Published on
Updated on
2 min read

'ஒருவரின் வளர்ச்சியை சூழ்நிலையே தீர்மானிக்கும். ஆணாதிக்கச் சமூகத்தில் ஆணாக இருப்பது நன்மை. எனது சூழ்நிலையில் ஒரு பெண் இருந்தால், இந்த முன்னேற்றத்தை அடைந்திருக்க வாய்ப்பில்லை. நான் என் வேலையை நேர்மையாகவும், மனசாட்சிப்படியும் செய்வேன். நீதிக்காக நீதிமன்றத்தை அணுகும் மக்களுக்கு நியாயமாக நடந்து கொள்வேன்'' என்கிறார் யாஸீன்.

கேரள மாநிலத்துக்கு உள்பட்ட பாலக்காட்டைச் சேர்ந்த இவர், சிறுவயதில் கிடைத்த வேலைகளைச் செய்துகொண்டே படித்தவர். "டெலிவரிபாய்'ஆக இருந்தவர், தற்போது நீதிபதிக்கான தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்.

அவர் கூறியது:

'எனது தாய் ஆஷா, ஆறாம் வகுப்பே படித்தார். அவருக்கு பதினான்காவது வயதில் திருமணமானது. அடுத்த ஆண்டே நான் பிறந்தேன். எனது தந்தை பிரிந்து செல்லும்போது, கருவுற்றிருந்த எனது தாய் இரண்டாவதாக, பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தினக் கூலிக்கு வேலைக்குச் சென்று, இருவரையும் வளர்த்தார்.

கேரள அரசின் ஏழைகளுக்கான வீட்டு வசதித் திட்டத்தில் கிடைத்த வீட்டில், நாங்கள் வசித்தோம்.

நான் பழைய ஆடைகளை அணிந்தே வளர்ந்தேன். சிறு வயதிலேயே அதிகாலையில் செய்தித்தாள்கள், பால் பாக்கெட் விநியோகித்து சம்பாதித்தேன். நேரம் கிடைக்கும்போது கட்டுமான வேலைகளைச் செய்தேன்.

படிப்பில் கவனம் செலுத்த போதிய நேரம் கிடைக்காததால், சராசரி மாணவனாக மட்டுமே இருந்தேன். எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் டிப்ளமோ படிப்பை முடித்து ஒரு ஆண்டு இடைவெளியில், பொது நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றேன். பிறகு, சட்டப் படிப்பு. எல்லாவற்றையும் வேலை செய்து கொண்டே படித்தேன். மாலை வேளைகளில் சிறுவர்களுக்கு டியூஷன் எடுத்தேன். பிறகு "ஸோமோடோ' நிறுவனத்தில் டெலிவரி பாயாக' மாறினேன்.

கரோனா ஊரடங்கின்போது, என்னால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலை. நான் சட்டப்படிப்பு படிக்கும்போது, எனது நெருங்கிய தோழியான அஞ்சிதா தொடர்ந்து பண உதவியைச் செய்தார். கடினமான காலங்களில் நண்பர்களும், நண்பிகளும் தொடர்ந்து உதவியதை உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன்.

மார்ச் 2023-இல் வழக்குரைஞராகப் பதிந்து, நீதிமன்றத்தில் பணியை ஆரம்பித்தேன். சட்டக் கல்லூரி

மாணவர்களுக்கு கட்டண அடிப்படையில் பாடங்கள் சொல்லிக் கொடுத்தேன்.

கேரள ஜூடிசியல் சர்வீஸ் 2024 போட்டித் தேர்வில் இரண்டாம் முயற்சியில் இரண்டாம் இடத்தில் தேர்ச்சி பெற்றேன். முதல் முயற்சியில் வெற்றி பெற்றாலும் தேவையான மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. இரண்டாம் முறை சாதித்துவிட்டேன்.

சிறுவயதிலிருந்து வாழ்க்கைப் போராட்டம் பல சவால்களால் என்னைப் பயமுறுத்தியது. அம்மா கூலி வேலை செய்து என்னை ஆளாக்கினார். சட்டம் படிக்க ஆரம்பித்து போட்டி தேர்வில் வெற்றி பெறும்வரை நட்பு வட்டம்தான் என்னைக் காப்பாற்றியது. மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் குறிப்புகளை அறிவுரைகளை வழங்குவதில் எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் கடின உழைப்புக்கு இறுதியில் பலன் கிடைக்கும்.

வாழ்க்கையில் வெற்றி பெற குறுக்குவழி இருப்பதாக நான் நினைக்கவில்லை. பல விஷயங்களைப் படிப்பதைவிட, படித்ததைச் சரிவர புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

மலையாள வழி கல்வி கற்றதால் ஆங்கிலம் எனக்கு கடினமாக அமைந்துவிட்டது. ஆனால் உழைப்பு அதற்கான பலனை வழங்கியுள்ளது. நேரம் கிடைத்தால், சட்டத்தில் முதுகலைப் படிப்பை முடிப்பேன்'' என்கிறார் யாஸீன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.