மனிதன் தோன்றிய காலத்திலிருந்து மென்மை, துரோகம், வன்மம், குற்றம் எல்லாம் இருந்து கொண்டே இருக்கிறது.
நாமே நல்லவன், கெட்டவன் என்று பிரித்துச் சொல்லி விடுகிறோம். கெட்டவனாக இருந்தவனை நல்லவனாக ஆக்குவதற்கான முயற்சியும், அவனை வேறு திசைக்கு கொண்டு போகிற முயற்சிகளும் நடந்து கொண்டே இருக்கின்றன. அப்படி சிலரைப் பற்றிய கதை... 'கலன்'. தெளிவாகப் பேசுகிறார் இயக்குநர் வீரமுருகன். கிடுகு, நாதூரம் கோட்சே என சர்ச்சை கதைகளை இயக்கி பெயரெடுத்தவர்.
கலன் எந்த மாதிரியான படம்....
தமிழ்நாட்டில் என்கவுன்ட்டர் படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சென்னையில் மட்டும் கடந்த இரண்டு மாதங்களில் 3 பேர் என்கவுன்ட்டரால் கொல்லப்பட்டுள்ளனர்.
அதுவும் தென் மாவட்டங்களில் எளிய மக்கள் மீதும், மக்கள் நலனுக்காக போராடுபவர்கள் மீது நடத்தப்படும் என்கவுன்ட்டர்கள் தற்செயலானதல்ல. நீதிமன்றங்களால் வழங்கப்படும் மரண தண்டனைகளையே ஒழிக்க வேண்டுமென உலகம் முழுவதும் கருத்துக்கள் மேலெழுந்து வரும் நிலையில் குற்றவாளிகள் என கருதப்படுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் அதிகாரத்தை காவல்துறையினர் எடுத்துக் கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது.
என்கவுன்ட்டர்களில் கொல்லப்பட்டவர்கள் கடுமையான குற்றங்களில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கூறி விசாரணையின்றி கொல்லப்படுவதை நியாயப்படுத்த முடியாது. எத்தகைய மோசமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானாலும் அவர் கைது செய்யப்பட்டு உரிய விசாரணைகள் மேற்கொண்டு நீதிமன்றங்கள் மூலம் தண்டனை பெற்றுத்தர வேண்டுமே தவிர, காவல்துறை சட்டத்தை கையிலெடுப்பது சரியல்ல.
தமிழ்நாட்டில் இதற்கு முன்பு பல என்கவுன்ட்டர்கள் நடந்துள்ளன. இதனால் ரவுடியிசம் ஒழியவில்லை. மாறாக, வளர்ந்த வண்ணம் தான் உள்ளது. சமூக விரோத சக்திகள் வளருவதற்கும், ரவுடியிசம் செய்வதற்கும் காவல்துறையினரின் மெத்தனப்போக்கும், அலட்சியமுமே முக்கிய காரணமாகும் என்பதை காட்டப் போகிறேன்.
விமர்சனம் அதிகமாக இருக்குமோ...
எல்லாவற்றையும் கடந்ததுதான் இந்த வாழ்க்கை. இவ்வளவு நீளமான ஐ.பி.எல். நடத்தி கல்லா கட்டுபவர்களை, பெட்ரோல், கேஸ் விலையை ஏற்றி விட்டு பி.எம்.டபிள்யூ காருக்கு வரி குறைப்பவர்களை, பேரறிவாளனின் வாழ்வுரிமையைப் பற்றிப் பேசவே பயப்படும் அரசியல்வாதிகளை...
கடந்ததுதான் இந்த வாழ்க்கை. கொலம்பியா காட்டில் மரணத்துக்குப் பிறகும் அணையாத விண்மீனாகத் திறந்து கிடந்த சேவின் விழிகளில், பன்னிரண்டாம் நாளிலும் திலீபனின் இதழில் உறைந்திருந்த புன்னகையில் இருப்பதற்கெல்லாம் பெயர் என்ன.. அற்பத்துக்கும் சொற்பதுத்துக்கும் அரசியல் என்ற பெயரை எதற்குப் பயன்படுத்துகிறோம்.
அவரவரது வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் பெயர்தான் பாலிடிக்ஸ் என்றாகி விட்டது இந்தத் தேசத்தில். கொஞ்சம் உள் நோக்கி பார்த்தால், எல்லாவற்றுக்கும் நாமே காரணமாகி இருப்போம். அப்படித்தான் இந்தக் கதையின் ஓட்டம் இருக்கும். எல்லோருக்கும் வாழ்க்கையில் இரண்டு வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் வரும். இப்படியும் போகலாம், அப்படியும் போகலாம். இதில் வருகிற சிலர் தேர்ந்தெடுக்கிற வழிதான் முக்கியமானது.
ஏதாவது ஒரு சம்பவம்தான் கதை நோக்கி திருப்பியிருக்கும்.... அது என்ன....?
மனதில் ஊறிப்போய் இருந்ததுதானே. எல்லாவற்றுக்கும் முன் மாதிரி உண்டு. எதுவும் தானாக உருவாக முடியாது என்பதுதான் இந்த உலகத்தின் சட்டம். படித்தது, பார்த்தது, கேட்டது, உணர்ந்ததுதான் படைப்பாக வருகிறது. நான் பார்த்து வளர்ந்த ஒரு சாதராண ஆள். இன்று சமூகத்தின் பெரிய ஆள். அவரின் வாழ்க்கையை நினைத்துப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.
இந்தக் கதை, உறவுகள் கூட பழையதுதான். ஆனால், அதை எனக்கான உணர்வாக, மனிதனாகக் காட்சிப்படுத்தியதுதான் புதிது. கழுத்தில இருக்கிற வரைக்கும்தான் தங்கம். திருடன் கழுத்தில் கத்தி வைத்து விட்டால் இரும்பு குண்டு மாதிரி அதுவே கனக்கும். எங்கே நிம்மதி, எப்போது சந்தோஷம் என்று எதையும் எளிதாக அர்த்தப்படுத்திட முடியாது.
படத்தில் தெரிந்த முகங்கள் இருக்கிறார்களா..?
நிறையத் திட்டங்கள் இருந்தன. எல்லாவற்றையும் பட்ஜெட்டுக்குள் முடிக்க வேண்டிய கட்டாயம். அதே நேரத்தில் கதையின் தன்மையைப் புரிந்தவர்கள் துணைக்கு வந்தார்கள். அப்பு குட்டி தீபா சம்பத் ராம் மணிமாறன், சேரன்ராஜ் யாசர் காயத்ரி பீட்டர் சரவணன் மற்றும் பலர் துணையாக வந்தார்கள். இந்த படத்திற்கு இசை ஜெர்சன் கேமரா
எடிட்டர் விக்னேஸ்வரன் பாடல் வரிகள் குருமூர்த்தி மற்றும் குமரி விஜயன் எழுதியுள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் நடிகர் மணிமாறனுக்கு ஒரு விரல் தனியாக துண்டிக்கப்பட்ட போதும் படத்தை நிறுத்தாமல் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்துள்ளது.
இதற்கு முன் வந்த கிடுகு படத்துக்கு 270 கட் செய்யப்பட்டது. ஆனால் கலன் திரைப்படத்திற்கு ஒரே ஒரு கட் மட்டும் தணிக்கை துறையால் செய்யப்பட்டு, தணிக்கை துறையின் பாராட்டுக்களும் கிடைத்தன. எல்லோருக்கும் இந்தப் படத்தில் தனித்துவமான இடங்கள் உண்டு.