'ஒவ்வொரு கச்சேரியும் எனக்கு முதல் கச்சேரி'' என்கிறார் தவில் வித்வான் ஹரித்வாரமங்கலம் ஏ.கே.பழனிவேல்.
திருவாரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஹரித்வாரமங்கலத்தில் பிறந்து, கர்நாடக இசையுலகில் தவில் கலைஞராகப் பிரகாசிக்கும் அவர் இந்த ஆண்டு இசை விழா சீசனில், பாரத் கலாசாரின் "ஞானகலா பாரதி' விருதைப் பெற்றிருக்கிறார். எண்பது வயதை நெருங்கியும் கச்சேரிகளை நடத்திக் கொண்டிருக்கும் அவரிடம் பேசியபோது;
'எங்கள் கிராமம் ஒரு குக்கிராமம். ஒருபக்கம் வெண்ணாறு. இன்னொரு பக்கம் வெட்டாறு. ஆறுகளைக் கடக்க பாலமோ, சாலைகளோ கிடையாது. அந்தக் காலத்தில் ஒரு பஸ்ஸை பார்க்க வேண்டும் என்றால் கூட பத்து கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.
எனது அப்பா குமாரவேல் ஹரித்வாரமங்கலத்தில் உள்ள பாதாளேசுவரை கோயிலின் ஆஸ்தான தவில் கலைஞர். "தவில் கற்றுவிட்டு, கிராமக் கோயிலில் நீயும் தவில் வாசிக்கணுமா? வேண்டாம்' என்று சொல்லிவிட்டார் எனது அப்பா. ஆனாலும் எனக்கு தவில் மீது ஒரு ஈர்ப்பு. என் அப்பாவிடம் தவில் கற்கச் சொல்லி, கேட்கத் தைரியம் இல்லாததால், அம்மாவிடம் சொன்னேன். சரியான தருணத்தில், என் அப்பாவிடம் சொல்லி, சம்மதம் பெற்றார் அம்மா.
எனக்கு எட்டு, வயதிருக்கும்போது, திருச்சேரையில் தவில் வித்வான் முத்துக்குமாரசாமி பிள்ளையிடம் தவில் கற்கச் சேர்த்துவிட, என் அப்பாவே அழைத்துகொண்டு போன நாள் என் வாழ்க்கையில் மிக முக்கியமான தினம்.
எனது பத்து வயதில் புரட்டாசி நவராத்திரி கச்கேரிக்கு வாசித்தபோது, என்னையும் உடன் அமரவைத்து எனது குருநாதர் வாசிக்கச் சொல்லி என் அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். அன்று நான் மகிழ்ச்சியில் திளைத்தது ஆயுசுக்கும் மறக்காது.
முருகன் கோயிலுக்குச் சென்று வணங்கும்போது, நான் என்னையே மறந்துவிடுவேன். எந்த ஊரில் சுவாமியைக் கும்பிட்டாலும், எனக்கு எங்கள் ஊர் முருகன் முன்னால் நிற்பது போலவே உணர்வேன். "நான் நல்லா தவில் வாசிக்கணும். பெயருரும் புகழும் அடையணும்' என்று வேண்டுவேன்.
தனிமையில் உட்கர்ந்து, புகழ் பெற்ற தவில் கலைஞரானதும் எனது பெயரை "பழனிவேல்' என்று போட்டுக் கொள்வதா? "ஏ.கே. பழனிவேல்' என்று போட்டுக் கொள்வதா?
ஊர் பெயரையும் சேர்த்து "ஹரித்வாரமங்கலம் ஏ.கே. பழனிவேல்' என்று பலமுறை யோசித்தது உண்டு.
பூக்களும், முள்களும் கலந்த நான் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறபோது, தவில் மீது ஒருவித பக்தியே ஏற்படுகிறது. என் திறமையை அங்கீகரிக்கும் வகையில் எனக்கு நிறைய விருதுகள் கொடுத்திருப்பதில் மகிழ்ச்சி. இன்று நமக்கு கிடைத்திருக்கும் பெருமைக்கெல்லாம் காரணம் இந்த தவில் என்பதால், அதனை வணங்கத் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகளாக, எத்தனையோ கச்சேரிகள் வாசித்திருக்கிறேன். ஆனாலும் ஒவ்வொரு கச்சேரியையும் என்னுடைய முதல் கச்சேரி போலவே நான் நினைத்து நன்றாக வாசிக்க வேண்டும் என்றே நினைப்பேன்.
"பத்மஸ்ரீ' விருது கிடைத்ததும், அதுவும் அப்துல் கலாமிடம் வாங்கியதை நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன். அந்த விருதை வாங்க, தில்லிக்கு நான் சென்றபோது, விழாவுக்கு முந்தைய தினம் தில்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவும், சுப்புடு ஐயாவின் வாழ்த்தும் மறக்க முடியாதவை'' என்கிறார் ஹரித்வாரமங்கலம் ஏ.கே.பழனிவேல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.