புத்தகப் பை..!
பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளின் மனநிலையைக் கருத்தில் கொண்டு, புத்தகப் பையை உருவாக்கியுள்ளனர். அவர்கள் நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட கொல்லிமலை அருகே குண்டூர் நாடு ஊராட்சியில் உள்ள நத்துக்குழிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் த.கௌசியா, ப.நதியா.
அவர்களிடம் பேசியபோது:
'அனைவருக்கும் கல்வி பொதுவானது' என்றால் கண்டுபிடிப்புகள் திறமையானவர்களை மட்டுமே சாரும்.
அரசுப் பள்ளி மாணவிகள் அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் பங்கேற்று சாதிக்க வேண்டும் என தலைமை ஆசிரியர் சங்கர், அறிவியல் ஆசிரியர் சந்திரசேகர் ஆகியோர் ஊக்கப்படுத்தினர். அப்போது நாங்கள் இருவரும் விவாதித்தோம். பள்ளி மாணவிகள் "புத்தகப் பை' என்ற சுமையால் எவ்வாறான சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பது குறித்து சிந்தித்தோம்.
அன்றாடம் பள்ளிக்குச் செல்லப் பயன்படுத்தும் 32 வகை பொருள்களை ஒரே பையில் வைக்கும் வகையில் "ட்ரே' வடிவிலான பெட்டியைத் தயார் செய்தோம். அதில், முகக்கவசம், பென்சில், பேனா, கைக்குட்டை, நகவெட்டி, குடை, புத்தகம், தின்பண்டங்கள் உள்ளிட்ட பொருள்கள் ஒவ்வொன்றையும் ஒரு அடுக்கில் வைக்கவும், வெளிச்சத்துக்கான பேட்டரியால் இயங்கும் மின்விளக்கு, விசிறி போன்றவற்றையும் இணைத்து புத்தகப் பையை உருவாக்கினோம். இதற்கு ஒரு மாதத்திற்கும் மேலானது.
ட்ராலி வடிவிலான பேக்கில் இந்த 32 பொருள்கள் கொண்ட பெட்டியை வைத்து இழுத்தும் செல்லலாம். மலைப்பகுதிகளில் வசிக்கும் எங்களைப் போன்ற மாணவிகளுக்கு இந்தப் புத்தகப் பை பயன்பாட்டுக்கு வந்தால் ஒரு வரப்பிரசாதமாக அமையும். தற்காலிக முறையில் தயாரித்துள்ள இந்த புத்தகப் பை முழுமையான பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான புத்தளிர் போட்டியில், எங்கள் கண்டுபிடிப்பு முதல் பரிசைப்பெற்றது. இதையடுத்து, இருவரையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டினார். இதற்காக, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு (இஸ்ரோ) செல்வதற்கான வாய்ப்பையும் அவர் ஏற்படுத்தித் தந்தார்.
எங்களை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆகியோர் பாராட்டியதுடன், இஸ்ரோ சென்று வருவதற்கான செலவுத் தொகையையும் வழங்கினர்'' என்றனர்.