தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கோட்டை அருகேயுள்ள வல்லம் கிராமத்தில் 1901 ஏப்ரல் 5-இல் பிறந்தவர் சுப்பையா சிவசங்கர நாராயண பிள்ளை என்ற எஸ்.எஸ்.பிள்ளை. இவர் கணிதத்தில் 76 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, அற்புதச் சாதனைகளைப் புரிந்தார்.
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த இவரது பள்ளிப்படிப்புக்கு உதவியவர் ஆரம்பப் பள்ளி ஆசிரியரான சாஸ்திரியார். தனது இன்டர்மீடியேட் படிப்பை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் பயின்றார். மேல்நிலைப் படிப்புக்காக, திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பி.ஏ. படிக்க உதவிகளைச் செய்தனர் பலர்.
அந்தக் காலத்தில் கணித மேதை இராமானுஜரும் இதே சிக்கலில் தவித்தபோது, பிறர் பரிந்துரையுடன் கணிதத்தில் ஆய்வு மேற்கொள்ள சென்னை பல்கலைக்கழகம் விதிகளைத் தளர்த்தியது.
'இராமானுஜத்துக்கு கிடைத்ததுபோல், எஸ்.எஸ்.பிள்ளைக்கும் விதிவிலக்கு கிடைக்குமா?' என்று சென்னை பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவை பச்சையப்பன் கல்லூரியின் அப்போதைய முதல்வர் சின்னதம்பி பிள்ளை நாடினார். அதனையொட்டி, இரண்டாவது முறையாக விதிகள் தளர்த்தப்பட்டு, எஸ்.எஸ். பிள்ளை 1927-இல் ஆய்வை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
இராமானுஜம் வாழ்ந்தபோது, அவருடன் இங்கிலாந்தில் உள்ள கிங்க்ஸ் கல்லூரியில் ஆய்வு செய்த ஆனந்தராவிடம் எஸ்.எஸ். பிள்ளை ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். எண்ணியலில் நான்கு ஆண்டுகள் ஆய்வு செய்ததின் விளைவாக, பிள்ளைக்கு எம்.எஸ்ஸி. பட்டம் வழங்கப்பட்டது. இதனால் அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1929-இல் விரிவுரையாளராகி, தொடர்ந்து 12 ஆண்டுகள் பணியாற்றினார்.
இவர் சிறந்த கணித உண்மைகளைக் கண்டுபிடித்ததால், "டாக்டர் ஆஃப் சயின்ஸ்' எனும் "டி.எஸ்ஸி.' பட்டம் வழங்கப்பட்டது. சென்னை பல்கலைக்கழகத்தில் இந்தப்படத்தைப் பெற்ற முதல் கணித மேதையாக எஸ்.எஸ்.பிள்ளை விளங்கினார். இதே காலகட்டத்தில் இராமானுஜம் சென்னை பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையில் முதல் மாணவராக விளங்கினார்.
1770-இல் இங்கிலாந்து நாட்டின் "எட்வர்ட் வேரிங்' எனும் கணித மேதை ஒரு சுவாரஸ்யமான எண் புதிரை உருவாக்கினார். இந்தக் கணிதப் புதிரானது "வேரிங்க்ஸ் புதிர்' என்று அழைக்கப்பட்டது. இதற்கு சரியான தீர்வுகளைக் கண்டு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் எஸ்.எஸ்.பிள்ளை.
குறிப்பாக, "ஓர் இயல் எண்ணை அதிகபட்சமாக எவ்வளவு எண்ணைக் கொண்டு இருபடி, முப்பது, நாற்படி, ஐம்படி, ஆறுபடி போன்ற படிகளில் கூடுதலாக எழுதலாமா?' என்ற கேள்விக்கு எஸ்.எஸ். பிள்ளை 1935-இல் தீர்வைக் கண்டுபிடித்தார். இதன்மூலம் 165 ஆண்டுகளின் போராட்டத்துக்கு முடிவும் கட்டினார்.
எண்ணியலில் 76 கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய எஸ்.எஸ்.பிள்ளையை அமெரிக்காவில் புகழ் பெற்று விளங்கும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்த ஐன்ஸ்டீன், ஒபன்ஹைமர் ஆகிய மேதைகள் அழைப்பு விடுத்தனர். இதற்கு எஸ்.எஸ். பிள்ளை, 'என்னுடைய கணித ஆய்வுக்கு என் தாய்நாடே போதும்'' என்றார்.
1950-இல் அமெரிக்காவில் உள்ள ஹார்டுவேல்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச கணித மாநாட்டில் சிறப்புரையாற்ற (ஐ.சி.எம்.) அழைப்பு விடுத்தது. இதில் பங்கேற்க சம்மதித்த எஸ்.எஸ்.பிள்ளை தான் புதியதாகக் கண்டறிந்துள்ளதை அங்கு தெரிவிக்கப் போவதாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் தெரிவித்தார்.
1950 ஆகஸ்ட் 30-இல் அமெரிக்கா புறப்பட்ட எஸ்.எஸ்.பிள்ளையை மீண்டும் நாம் உயிரோடு காணவில்லை. கெய்ரோ நகரில் இருந்து அவர் பயணிக்கப் புறப்பட்ட விமானம் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இதில், எஸ்.எஸ்.பிள்ளை உள்பட 48 பயணிகளும், விமானக் குழுவினர் 7 பேரும் மரணம் அடைந்தனர். அவர் தனது நாற்பத்து ஒன்பதாவது வயதில் உயர்நீத்தார். இருந்தாலும், அவரின் கணிதச் சாதனைகளை உலகம் என்றென்றும் புகழ்ந்துகொண்டே இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.