தெற்கு ஆசியாவில் தொன்மையான ரயில் நிலையமான ஜீவா ரயில் நிலையம், சோழர் காலத்தில் கட்டப்பட்ட ரவீஸ்வரர் கோயில், இதிகாசங்களில் புகழ்பெற்ற முனிவர் வியாசர் தங்கிய இடம், பொதுவுடைமைத் தலைவர் ஜீவா வாழ்ந்த இடம், பல குத்துசண்டை வீரர்களை உருவாக்கிய இடம்...
போன்ற பெருமைகளைத் தாங்கியுள்ள பகுதியே வடசென்னையில் உள்ள 'வியாசர்பாடி'. இங்கு வசிப்போர் படிப்படியாய் வாழ்க்கையில் முன்னேற 'படி... படி..' என்றழைக்கும் 'கலாம்-சபா நூலகம், வழிகாட்டி மையம்' தொடங்கப்பட்டுள்ளது.
தனது இல்லத்தில் குளிரூட்டப்பட்ட இந்த நூலகம்- மையத்தை மாணவர்கள், இளைஞர்கள், வாழ்க்கையில் முன்னேறத் துடிப்போருக்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உருவாக்கியுள்ள முனைவர் வி.டில்லிபாபுவிடம் பேசியபோது:
'நான் பிறந்து வளர்ந்த இடம் வியாசர்பாடி. அங்கு எனது வாழ்க்கைக்குத் தேவையான பல பாடங்கள் கிடைத்தன. அப்படி ஒரு பாடமாக விளங்கிய எனது தாத்தா சபாபதி, 'படித்தால் முன்னேறலாம்' என்பதை எனது சிறு
வயதிலேயே விதைத்தார். எங்கள் பகுதியில் இருந்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கலைக் கல்லூரியை காட்டி, 'நீ நன்றாக படித்தால், இந்தக் கல்லூரியில் படிக்கலாம்' என்று அடிக்கடி கூறுவார். அவரது வார்த்தைகளில் இருந்த உண்மையை, இந்தியப் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின்(டி.ஆர்.டி.ஓ.) ராணுவ விஞ்ஞானியாகப் பொறுப்பேற்றவுடன் உணர்ந்தேன்.
வியாசர்பாடி மல்லிகைப்பூ காலனி என் வாழ்க்கையின் முக்கியமான பகுதி. இங்கு பிறந்து வளர்ந்த நான், பத்தாம் வகுப்பிலிருந்தே மின்சாரம் இல்லாதச் சூழலில் படித்து வளர்ந்தேன். மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியில் படித்ததால், நான் சாதாரண மாணவனாக இருந்தாலும், கல்வியில் முன்னேறக் கடுமையாக உழைத்தேன்.
பொறியியல் படிப்பதற்கும் மின்சாரம் தேவைப்பட்டபோது. எனக்குப் படிக்க முடியாது என்ற எண்ணம் வந்தது. அப்போது, என் அம்மா கோவிந்தம்மாள் விஜயகுமார் (எ) விக்டோரியா தன் உழைப்பை தியாகமாக்கி, இரண்டு மண்ணெண்ணெய் விளக்குகளை வாங்கினார்.
அதில், ஒரு விளக்கு அணைந்து போகும் முன்பு, அடுத்த விளக்கைக் கொடுத்து, என்னைப் படிக்க வைத்து உதவினார். அதனால் தான் நான் என் அம்மாவை 'என் முதல் விஞ்ஞானி' என அழைக்கிறேன். கடினமான சூழல்களுக்கு இடையிலும் பொறியியல் படிப்பை முடித்து, கல்லூரியில் முதல் மாணவனாகத் திகழ்ந்து, தமிழ்நாடு அரசின் சிறப்புப் பரிசையும் பெற்றேன்.
போராட்டங்கள் நிறைந்த எனது வாழ்க்கையில், படிக்க ஆர்வம் இருந்தாலும், அதற்கான வாய்ப்பில்லாமல் தவித்திருக்கிறேன். எனது வாழ்க்கையை புரட்டிப் போட்டது அப்துல் கலாமின் 'அக்னி சிறகுகள்' எனும் நூல். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புத்தக வாசிப்பு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு என் வாழ்க்கையே சிறந்த உதாரணம்.
'எவ்வளவு பின் தங்கிய பகுதியில் வாழ்ந்து வந்தாலும், , படித்தால் முன்னேறலாம்; கல்வியால் நான் உயர்ந்து, என்னை போல மற்றவர்களையும் கல்வியால் உயர வேண்டும்' என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. அடிக்கடி மாணவர்களை சந்தித்து 'படித்தால் முன்னேறலாம்' என்ற அனுபவப் பாடத்தை இளம் மனங்களில் பதிய வைக்கிறேன்.
பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையே எனது பேச்சு மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தி வருவதை கண்கூடாக காணமுடிகிறது.
நான் வாழ்ந்த ஹவியாசர்பாடியிலும் நிலையானதொரு முயற்சியாக செய்ய நினைத்தபோது உருவான கனவுத் திட்டமே 'கலாம் - சபா நூலகம், வழிகாட்டி மையம்'.
என்னை உயர்த்திய எனது தாத்தா சபாபதியின் பெயரையும், என் மனதில் வழிகாட்டியாகப் பதிந்த அப்துல் கலாமின் பெயரையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த மையத்தை 'நிலா நாயகர்' முனைவர் மயில்சாமி அண்ணாதுரை 2024 நவம்பர் 8-இல் திறந்துவைத்தார்.
கல்வி, வேலைவாய்ப்பு, சமூக, பொருளாதாரக் கூறுகளில் மிகவும் பின் தங்கியப்பகுதி வியாசர்பாடியில் சரியான வழிகாட்டுதலும், புரிதலும் இல்லாததால் இளைஞர்கள் வாழ்க்கை தடம்மாறுகிறது. இந்த மையத்தின் வாயிலாக இளைஞர்களின் கவனத்தை கல்வியின் பக்கம் திருப்ப முயற்சிக்கிறேன்.
வாசிப்பை மேம்படுத்துவதற்கு உதவியாகவும், அவர்களது வாழ்வை வடிவமைக்க, கல்வி, வழிகாட்டுதலுடன் இணைந்த ஒரு களமாக அமைத்திருக்கிறேன். இந்த மையம் வடசென்னையின் இளைஞர்களுக்கான புதிய வாழ்க்கையின் வாசலாகவும் இருக்கும்.
இந்த மையத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும் மேடை கிடைக்க வேண்டும் என்பதே என் இலக்கு. இந்த மையத்தைச் சமூகத்துக்காக முன்னிறுத்தும் முயற்சியாகும். வெவ்வேறு இடங்களில் நூலகம், வழிகாட்டி மையத்தை அமைப்பதற்கும் வியாசர்பாடியில் அமைப்பதற்கு வேறுபாடு உள்ளது.
ஆழ்ந்த சிந்தனையின் ஊற்று வாசிப்பு. சிந்தனை இல்லாமல் மாற்றத்துக்கான வழி கிடையாது. வியாசர்பாடியில் இந்த மையம் எதிர்காலத்தின் திசைகாட்டியாகவும், காலத்தை புரட்டிப் போடும் புத்தகச் சாளரமாகவும் விளங்கும். இங்கு மாதம்தோறும் வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவர்கள், அவர்களது கனவுகளை நோக்கி நகர்ந்து, அவர்களின் சாதனைகளை அடையத் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்.
ஒன்பதாம் வகுப்பிலிருந்தே ஐந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் கனவுகளை ஆதரித்து வழிகாட்டுதலை விரிவாக்கும் செயல்பாடுகளையும் மையம் முன்னெடுக்கும். அனைவரையும் விஞ்ஞானியாக மாற்றுவதற்கான முயற்சி அல்ல; அவரவர் விருப்பத்துக்கேற்ப அவர்களின் கனவுகளை நோக்கி நகர்த்துவதே மையத்தின் தலையாய நோக்கம்.
மாணவர்கள் உயர்கல்விக்கான வாய்ப்புகள், துறைகள், தேர்வு வாய்ப்புகள், அதன் பொருளாதாரத் தேவைகளைப் பற்றிய தெளிவான தகவல்களை மையம் வழங்கும். அவர்கள் உச்சம் அடைவதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கும்.
நூலகம் முழுக்க சுயசரிதைகள், அறிவியல் புத்தகங்கள், துறை சார்ந்த புத்தகங்கள் என்று 3 ஆயிரம் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. உலகம் புகழ்ந்த பல ஆளுமைகள் கையெழுத்திட்ட புத்தகங்கள், வாழ்க்கை வரலாறுகள், வழிகாட்டும் நூல்கள் உள்பட பல அரிய படைப்புகளும் உள்ளன.
மாதந்தோறும் முன்னணி அறிஞர்களின் 'சபா' உரைகள் நடத்தப்பட்டு, மாணவர்கள் நேரடியாகத் தொடர்புகொண்டு வாழ்க்கை முன்னேற்றத்துக்கான வழிகாட்டுதல்களைப் பெற வாய்ப்பு வழங்கப்படும்.
'மெய்நிகர் மேடை' என்ற நிகழ்நிலை நிகழ்வு மூலம் ஆகச் சிறந்த அறிஞர்களோடு கலந்துரையாடவும், வழிகாட்டுதல் பெறவும் மாதம் ஒரு நிகழ்வு நடத்தப்படும். வார இறுதி நாள்களில் மாணவர்கள் தங்கள் படித்த நூலிலிருந்து பதினைந்து நிமிடங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.
அவர்களுக்குப் பாராட்டுச், சான்றிதழும் வழங்கப்படும். இந்த நிகழ்வு 'வியாசர்பாடி பேசுகிறது' என்று வலையொலி மூலம் வெளியிடப்படும். சாதிக்கத் துடிக்கும் மாணவ, மாணவிகளின் பலதரப்பட்ட கனவுகளை சுமந்துச் செல்லும் வாகனமாகவும், அவர்களின் கனவுகளைச் நனவாக்கி உச்சத்தைத் தொடவைக்கும் நட்சத்திரமாகவும் இந்த மையம் விளங்கும்' என்கிறார் டில்லிபாபு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.