உதவி செய்ய தயார்!

சென்னை சூளையில் செயல்பட்டு வரும் 'ஆதிநாத் ஜெயின் அறக்கட்டளை'யை 1979-இல் டி.மோகன் ஜெயின் தலைமையில், சமூகச் சேவையில் ஆர்வமும், அக்கறையும் கொண்ட 32 நண்பர்கள் சேர்ந்து துவங்கினர்.
உதவி செய்ய தயார்!
Published on
Updated on
2 min read

சென்னை சூளையில் செயல்பட்டு வரும் 'ஆதிநாத் ஜெயின் அறக்கட்டளை'யை 1979-இல் டி.மோகன் ஜெயின் தலைமையில், சமூகச் சேவையில் ஆர்வமும், அக்கறையும் கொண்ட 32 நண்பர்கள் சேர்ந்து துவங்கினர். இன்று வரை அவர்களது சமூகப் பணி தொய்வில்லாமல் தொடர்கிறது.

இதுகுறித்து மோகன் ஜெயினிடம் பேசியபோது:

'ஆரம்ப நாள்களில், ஏழைகளுக்குத் தேவையான அத்தியாவசியமான மளிகைப் பொருள்கள், துணிளை வழங்கிக் கொண்டிருந்தோம்.

1990-களில்தான் ஜெய்ப்பூரில் உள்ள செயற்கைக்கால் தயாரிக்கும் நிறுவனங்களின்உதவியுடன் செயற்கைக் கால்களைத் தயாரித்து, தேவையானவர்களுக்கு இலவசமாக வழங்கினோம்.

சென்னையில் நாங்கள் நடத்திய முதல் முகாமிலேயே செயற்கைக் கால் தேவைப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தற்போது சூளையில் 32 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடத்தில் அறக்கட்டளை செயல்படுகிறது.

2023-ஆம் ஆண்டில் மட்டும் 1.42 கோடி ரூபாய் மதிப்பில் நல உதவிகளைச் செய்துள்ளோம்.

சென்னையில் செயற்கைக்கால் தயாரிப்புக்கென ஒரு தனி தொழிற்சாலையே நடத்துகிறோம். இங்கு தயாரிக்கப்படும் செயற்கைக் கால்கள் அனைத்தும் பயனாளிகளுக்கு இலவசமாகவே வழங்கப்படுகின்றன. தவிர,, தேவையானவர்களுக்கு கண் சிகிச்சை,

சக்கர நாற்காலிகள், வாக்கர்கள் போன்ற சாதனங்களும் அளிக்கப்படுகின்றன. மறுபுறம் பெண்களை சொந்தக் காலில் நிற்க வைக்கும் லட்சியத்துடன் அவர்களுக்கு தையல் போன்ற தொழில் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

நாமக்கல்லைச் சேர்ந்த ஓட்டுநரான இளைஞர் சிவகுமார், கோவையைச் சேர்ந்த ஞானமணி போன்ற எண்ணற்றோருக்கு செயற்கைக் கால்களை அளித்து, அவர்கள் தற்போது பல்வேறு பணிகளைச் செய்துகொண்டிருக்கின்றனர்.

பொது மருத்துவம், பிசியோதெரபி, கண் சிகிச்சை, தோல்நோய், பல் மருத்துவம் போன்ற முகாம்களை நடத்துகிறோம். யோகா, தியானம், மாணவ, மாணவிகளுக்கு டியூஷன், இசை, ஓவியம், ஆளுமை மேம்பாடு போன்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் என்று சேவைச் செயல்பாடுகள் பட்டியல் தொடர்கின்றன.

எங்கள் அறக்கட்டளையின் நிகழ்ச்சிகளில் ஆர்.வெங்கடராமன், மு.க.ஸ்டாலின், சுர்ஜித் சிங் பர்னாலா, கே.ரோசய்யயா, பன்வாரிலால் புரோஹித், ஓ.பன்னீர்செல்வம், பிரதாப் ரெட்டி, ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

ஏழை மக்களுக்கு மருத்துவ ரீதியாக பல்வேறு வகையான உதவிகளை இலவசமாகவே வழங்குவதற்கு நாங்கள் காத்திருக்கிறோம். மாணவர்களுக்கு கல்வி, ஆளுமை மேம்பாட்டுக்கும், பெண்களுக்கு திறன் மேம்பாட்டுக்கும் எவ்வளவு பேருக்கு உதவி தேவைப்பட்டாலும் சரி நாங்கள் உதவ ரெடி. யாருக்கு உதவி தேவை என்றாலும், தயங்காமல் 044-42043001 எண்ற எண்ணில் அணுகலாம்' என்கிறார் டி.மோகன் ஜெயின்.

திருவள்ளூரைச் சேர்ந்த இருபத்து எட்டு வயதான பானுபிரியா கூறுகையில், 'நான் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள். என் கணவர் சம்பாதிக்கும் பணம், எங்கள் குடும்பத்துக்குப் போதுமானதாக இல்லை.

நானும் ஏதாவது வேலை செய்து, வருவாய் ஈட்டி, குடும்பத்தின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க விரும்பினேன். என் மாமியாரின் கண் சிகிச்சைக்காக ஆதிநாத் அறக்கட்டளைக்குச் சென்றிருந்தேன். அவருக்கு இலவசமாக சிகிச்சை அளித்தனர். அங்கே, அவர்கள் பெண்களுக்குத் தையல் பயிற்சி அளிக்கிறார்கள் என்ற அறிவிப்பைப் பார்த்தேன்.

அடுத்து 25 பெண்களுக்கு தையல் பயிற்சி ஆரம்பிக்க இருப்பது குறித்து அறிந்து, அதில் சேர்ந்து அந்தப் பயிற்சியை முடித்தேன். தற்போது பெண்களுக்கான ஆடைகளைத் தைத்துக் கொடுத்து தினம் 200 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறேன்' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com