நீர் மேலாண்மையில் முன்மாதிரி!

காலநிலை மாற்றமானது அதிகபட்ச சவாலாக இருக்கும் சூழலில், நீர்நிலைகளைப் பராமரிப்பதும், சிக்கனமாக- முறையான நீர்ப் பாசனத்தின் மூலம் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதும் அவசியமாக இருக்கிறது.
நீர் மேலாண்மையில் முன்மாதிரி!
Published on
Updated on
2 min read

காலநிலை மாற்றமானது அதிகபட்ச சவாலாக இருக்கும் சூழலில், நீர்நிலைகளைப் பராமரிப்பதும், சிக்கனமாக- முறையான நீர்ப் பாசனத்தின் மூலம் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதும் அவசியமாக இருக்கிறது. இதற்கு முன்மாதிரியாகச் செயல்பட்டு வருகிறது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 'பரம்பூர் பெரிய குளம் நீரைப் பயன்படுத்துவோர் சங்கம்'.

2025 ஜனவரி 26-இல் குடியரசு தின விழாவுக்காக, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் இந்தச் சங்கத்தின் தலைவர் பி. பொன்னையா. நாடு முழுவதும் இருந்தும் தேர்வாகியுள்ள பத்து விவசாயிகளில், தமிழ்நாட்டிலிருந்து இவர் மட்டுமே பங்கேற்கிறார்.

நாற்பத்தொரு வயதான இவர் பிளஸ் 2 வரையே படித்துள்ளார், சாதனைகளைப் புரிந்துவரும் அவரிடம் பேசியபோது:

'குடுமியான்மலை அருகே 67 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பரம்பூர் பெரியகுளத்தில் இருந்து 105 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

1974-இல் நீர்ப் பாசன சங்கம் உருவாக்கப்பட்டது. 1994-இல் பரம்பூர் பெரிய குளம் நீரைப் பயன்படுத்துவோர் சங்கம் என்ற பெயரிலான அமைப்பு, கூட்டுறவுச் சங்கச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. தற்போது 40 பெண்கள் உள்பட 281 பேர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

2001-இல் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த விவசாயிகள் பாசன மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டோம். சங்கத்தின் சார்பில் 4 பேர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள்தான் விவசாய நிலத்துக்கு தண்ணீரைத் திறந்து பாய்ச்சும் பணியாளர்கள்.

இவர்கள் மூலம் சீராகத் தண்ணீரைப் பாய்ச்சுவதால், இங்கே தண்ணீர் வீணாகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆண்டுக்கு இரு போகம் நெல் சாகுபடி நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும் 600 டன்னுக்கு குறையாமல் நெல் விளைச்சல் பெறுகிறோம். மொத்தம் 1,200 டன் நெல் அரசுக் கொள்முதல் நிலையத்திலேயே விற்பனை செய்கிறோம்.

உறுப்பினர்கள் தரும் சந்தா தொகை, குளத்தின் மீன் குத்தகைத் தொகை ஆகியவற்றைக் கொண்டு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குகிறோம். குளத்துக்குத் தேவையான பராமரிப்புச் செலவையும் இந்த நிதியில் இருந்தே ஈடுசெய்கிறோம்.

சங்கத்துக்காக அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில், கணினி சேவை மையத்தைத் தொடங்கி, உறுப்பினர்களுக்கு இலவச சேவையை வழங்கி வருகிறோம். இதன் மூலம் எங்களின் உறுப்பினர்கள் விவசாயப் பதிவு, வருவாய்த் துறைப் பதிவு தொடர்பான எந்த வேலைக்காகவும் வெளியே செல்ல வேண்டியதில்லை.

குளம் உள்பட வரத்து வாரிகளிலும் என மொத்தம் ஐந்து சி.சி. டி.வி. கேமிராக்களை அமைத்திருக்கிறோம். பாசனம் முறையாக நடைபெறுகிறதா, மணல் திருட்டு நடைபெறுகிறதா, தண்ணீர் திருட்டு நடக்கிறதா ஆகியவற்றை வீட்டிலிருந்தே கண்காணிக்க முடியும்.

கண்மாய், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ள இப்போதைய சூழலில், பரம்பூர் பெரிய குளத்தில் ஒற்றை சீமைக்கருவேல மரமும் இல்லை.

எனக்குச் சொந்தமான பதினைந்து ஏக்கர் நிலத்தில், முன்னோடி முயற்சியாக எட்டு ஏக்கரில் மீன் வளர்ப்புடன் கூடிய நெல் சாகுபடியை மேற்கொண்டுள்ளேன்.

2023-இல் மத்திய நீர்வளத் துறையின் தேசிய தண்ணீர் விருதை 2024 அக்டோபர் 22ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற விழாவில், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பட்டேலிடமிருந்து பெற்றேன்'' என்கிறார் பொன்னையா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com