இளம்வயதில் அஞ்சல் தலைகள், பேனாக்கள், நாணயங்கள், கடிகாரங்கள், புத்தகங்கள், கலைப் பொருள்கள்.. என தனக்குப் பிடித்த பொருள்களைத் தேடித் தேடி சேகரிக்கும் பழக்கத்தைப் பெரும்பாலானோர் கொண்டிருப்பர். ஆனால், காலப்போக்கில் அந்தப் பழக்கத்தைக் கைவிடுவர். வெகு சிலரே தங்களது வாழ்நாள் பழக்கமாக வைத்திருப்பர். இந்த வரிசையில் குறிப்பிடத்தக்கவர் 'பேனா காதலர்' எஸ். சிவசீலன்.
மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த இவர், திருப்பரங்குன்றத்தில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி, ஆய்வு மையத் தலைவராகப் பணியாற்றிவருகிறார்.
அவரிடம் பேசியபோது:
'பள்ளிப் பருவத்தில் படிப்பில் நான் முதல் மாணவன். அப்போது முதலே எனக்கு பேனாக்கள் மீது ஒரு தனி ஈர்ப்பு. அந்த ஈர்ப்பே பிளஸ் 2 படிக்கும் காலங்களில் மேலும் தீவிரமாகி, ஏறத்தாழ வெறியாகவே மாறியது. எனது தந்தை செளந்திரபாண்டியன் கொடுத்த பேனாவே எனது முதல் சேகரிப்பு.
எனது பதினெட்டாம் வயதில் தொடங்கி, முப்பத்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாக ஆர்வம் குறையாமல் பேனாக்கள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளேன். பேனாக்கள் சேகரிப்பையே என் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு, எனது வருமானத்தின் பெரும்பகுதியை பேனாக்கள் வாங்கவே செலவிடுகிறேன்.
ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, சீனா, கனடா, பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஷீபர்ஸ், வாட்டர் மேன், பார்க்கர், கிராஸ், பெலிகான், எலைசீ, பைலட், மான்ட் பிளாங்க் உள்பட பல்வேறு முன்னணி பேனா நிறுவனங்களின் பல வகையான பேனாக்களை சேகரித்து வைத்துள்ளேன்.
நான் சேகரித்த வெளிநாட்டு பேனாக்களில் 'ஸ்டீல் நிப்' (எழுதுமுனை), 14, 18, 21 கேரட் தங்கத்தில் செய்யப்பட்ட 'நிப்' என பல வகைகள் உண்டு. பேனாவில் மை சேர்ப்பதிலும் பல்வேறு வகைகள் இருக்கும். மை தீர்ந்துவிட்டால், பேனாவின் கீழ்பகுதியை மை பாட்டிலில் வைத்தால் தானாகவே தனக்குத் தேவையான மையை எடுத்துகொள்ளும் வகை, பட்டன் சிஸ்டம், உறிஞ்சுதல் வகை, பம்ப் வகை என பலவகையில் பேனாக்களில் மை நிரப்பலாம்.
ஜெர்மனி தயாரிப்பான 'வால்டுமென்' பேனா சுத்தமான வெள்ளியாலான 'ஸ்டெர்லின் சில்வர்' கொண்டு தயாரிக்கப்பட்ட ஐம்பது ஆண்டுகால பேனா, விக்டோரியா மகாராணிக்காக 1947- இல் பார்க்கர் நிறுவனம் தயாரித்த 1951 என்ற வகை பேனாக்கள் என் சேகரிப்பில் உள்ளன.
இவற்றின் எழுதுமுனை 14 கேரட் தங்கம். இதன் மூடி, தங்க முலாம் பூசப்பட்ட ஸ்டெர்லின் சில்வரால் (வெள்ளி) தயாரிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் வந்த புது வகை பேனா என்பதால் அதில், மை நிறப்பும் முறை குறித்து பேனாவிலேயே குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஷீபர்ஸ் நிறுவனத்தால் இங்கிலாந்தில் 14 கேரட் வெள்ளை தங்கத்தால் செய்யப்பட்ட பேனா, ஒரே பேனாவால் எழுத்துகளைத் தடிமனாகவும், மெலிதாகவும் எழுதும் வகையில் எழுதுமுனை அமைக்கப்பட்ட பேனா என பல்வேறு வகையான பேனாக்களைச் சேகரித்து வைத்துள்ளேன். வெண்கலத்தாலான மை கூட்டைக் கொண்ட நூற்றாண்டைக் கடந்த பேனா முதல், 1905- ஆம் ஆண்டிலிருந்து தயாரிக்கப்பட்ட பல வகை பேனாக்கள் என்னிடம் உள்ளன.
ஷீபர்ஸ் நிறுவனத்தார் தங்களது நூற்றாண்டு கொண்டாடத்தைக் குறிக்கும் வகையில், உலக அளவில் 5 ஆயிரம் பேனாக்களை வெளியிட்டுள்ளனர். அதில், 295- ஆவது பேனா என்னிடம் உள்ளது. அந்த பேனா 75 கிராம் வெள்ளியிலும் 18 கேரட் தங்கத்தாலும் செய்யப்பட்ட எழுதுமுனை கொண்டது. இந்தப் பேனாவுடன், பிரத்யேக மை பெட்டி, பேனாவுக்கான சான்றிதழ் ஆகியனவும் உள்ளன. இதை, ரூ.3.25 லட்சத்துக்கு வாங்கினேன். தற்போது உலக அளவில் அந்தப் பேனாவின் மதிப்பு ரூ.7.50 லட்சமாகும்.
இதுபோன்ற நூற்றுக்கணக்கான பேனாக்களை நான் சேகரித்து வைத்துள்ளேன். இன்றளவும் சேகரிக்கிறேன். வீடு, அலுவலகத்தில் இருபதுக்கும் அதிகமான பழமையான பேனாக்களை பயன்படுத்தி வருகின்றேன். வாரத்தில் ஒரு நாள் சனி அல்லது ஞாயிற்றுக்கிழûயை பேனாக்களை பராமரிப்பதற்கு மட்டுமே பயன்படுத்துகிறேன்'' என்கிறார் சீவசீலன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.