துருவ நட்சத்திரம் டூ பார்ட்டி

துருவ நட்சத்திரம் டூ பார்ட்டி

உலகம் போற்றும் ஆடல்கலையாகப் புகழ் அடைந்துள்ள பரதநாட்டியம் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளச் சின்னமாகும்.
Published on

உலகம் போற்றும் ஆடல்கலையாகப் புகழ் அடைந்துள்ள பரதநாட்டியம் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளச் சின்னமாகும். 'பரதக் கலையை இளம்தலைமுறையினர் மறந்து வருகிறார்களோ?' என்று கவலைப்பட்டாலும், அந்த கவலையைப் போக்குபவர்களும் இருக்கின்றனர்.

பெங்களூரில் வசித்துவரும் ஜி.வெங்கடகுப்புசாமி- ராஜமாதாங்கி தம்பதியின் மகள் ஹம்சவர்த்தினி, தனது இளம் வயது முதலே பரதக் கலையைப் பயின்றுவந்தார். இருபது ஆண்டுகள் பரதநாட்டிய அனுபவம் உள்ள அவர், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.

'மருத்துவப் படிப்பில் சிறந்து விளங்கியதற்காக 48 தங்கப் பதக்கங்களையும், பல்வேறு பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளேன். முதுகலை 'நீட்' தேர்வில் தேசிய அளவில் ஏழாம் இடம் பிடித்துள்ளேன். பரதநாட்டியத்தில் மருத்துவம் குறித்து ஆராய்ச்சி செய்கிறேன். மருத்துவராக இருந்தாலும், பரதக் கலையில் கிடைக்கின்ற இளைப்பாறுதலும், உற்சாகமும் வேறு எதிலும் கிடைக்கவில்லை'' என்கிறார் ஹம்சவர்த்தினி.

பரதநாட்டியமும் மருத்துவமுமாக பயணித்துவரும் அவரிடம் பேசியபோது:

'எனது சொந்த ஊர் மதுரையை அடுத்த திருமங்கலம் அருகேயுள்ள அலப்பலச்சேரி கிராமம். எனது தாத்தா வழக்குரைஞர் பி.குருமூர்த்தியும், அப்பா ஜி.வெங்கடகுப்புசாமியும் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ந்தனர். எனது பாட்டி லட்சுமிக்கு பிறவி இதயநோய் இருந்ததை எங்களால் கண்டறிய முடியாததால், அவரை திடீரென இழந்துவிட்டோம். அந்த நிகழ்வு என் மனதை மிகவும் பாதித்துவிட்டது. இதனால் மருத்துவராக ஆசைப்பட்டேன். கனவும் நனவாகியுள்ளது.

அம்மா ராஜமாதங்கிக்கு பரதநாட்டியம் என்றால் உயிர். அவரால் தனது இளம் வயதில் தன்னால் கற்க முடியவில்லையே என்றிருந்த குறையைப் போக்க, எனது ஆறாம் வயதிலேயே பயிற்சியில் சேர்த்துவிட்டார்.

ஆரம்பத்தில் பரதக் கலை பிடிக்காமல் இருந்தது உண்மைதான். அதன் நுணுக்கங்கள், கலைப் பண்புகளைக் கற்றவுடன் பரதநாட்டியம் உயிர்மூச்சானது.

பள்ளியில் சோர்வு ஏற்பட்டால், மனம் கலங்கினால், தோல்வி மனப்பான்மை ஏற்பட்டால், அவற்றில் இருந்துவிடுபட பரதநாட்டியம் அருமருந்தாக உள்ளதை நான் எனது அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். பரதநாட்டியக் கலையை கற்றபோது, கவனச் சிதறல், ஆர்வமின்மை, படிப்பில் கவனமின்மையைப் போக்க உதவியாக இருந்தது. பரதமும் கற்றுவந்ததால் படிப்பிலும் சுட்டியாக இருந்தேன்.

நாட்டின் கலை, பண்பாடு, புராணங்கள், வரலாற்றோடு ஆழமாக வேர்ப் பிடித்திருக்கும் கலை பரதநாட்டியம்.

இன்றைய குழந்தைகள், பள்ளிக்காலத்தில் கலை மீதான ஆர்வத்தைக் காட்டிலும் விளையாட்டு, உடற்பயிற்சியில் அதிக ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால், பரதம் கற்றால் விளையாட்டு, உடற்பயிற்சியைக் காட்டிலும் நூறு மடங்கு பலம் கிடைக்கும்.

விளையாட்டு வன்கலையானால், நாட்டியம் நுண்கலையாகும். புராணக் கதாபாத்திரங்களாக நாட்டியமாடியபோது, ஒழுக்கம் என்னில் தஞ்சம் அடைந்தது.

திரெளபதி, லட்சுமி, சாமுண்டி போன்ற பெண் தெய்வங்கள் குறித்து நாட்டியமாடியபோது, பெண்ணியத்துக்கான வலிமை வெளிப்பட்டது.

2017-இல் அரங்கேற்றம் நடைபெற்றபோது, சென்னை, மைசூரு, சிதம்பரம், கோவா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களிலும், ஆஸ்திரேலியா நாட்டிலும் நாட்டியமாடியுள்ளேன்.

பரதநாட்டியத்தின் வாயிலாக பாரதி, கிருஷ்ணர், சிவனை அரங்கேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். கர்நாடக இசையையும் கற்று வருகிறேன். அது பரதநாட்டியத்துக்கு உதவியாக உள்ளது.

கால ஓட்டத்தில் மேற்கத்திய சாயலை பரதக் கலையில் சேர்க்கும் போக்கு அதிகரித்துள்ளதை நான் விரும்பவில்லை. தற்கால நாட்டியங்களுடன் பரதநாட்டியத்தையும் இணைத்து கலவையாகத் தருகின்றனர். இது பரதநாட்டியத்தின் தூய்மையான வடிவத்தை சிதைத்துவிடும். பரதநாட்டியத்தை அதன் ஆதிவடிவத்தை பாதுகாப்பது மிக, மிக முக்கியம்.

கி.மு.200-ஆம் ஆண்டில் தோன்றியதாகக் கூறப்படும் பரதநாடியத்தை பள்ளிக்கல்வியில் கட்டாயமாக்க வேண்டும்.

2016-இல் 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் படித்தேன். 2022-இல் இளநிலை மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, மருத்துவராகத் தொடர்கிறேன். பல்வேறு நோயாளிகளிடம் பரதக்கலையைக் கொண்டு சென்று நோய் தீர்க்கமுடியுமா? என்பதை ஆய்வுக்குள்படுத்தி வருகிறேன். நோயைக் குணமாக்கும்போது ஏழை, எளிய மக்களின் முகத்தில் ஒளிரும் மகிழ்ச்சியை சிரிப்பை காணும்போது, மனம் மகிழும்.

முதுநிலை நீட் தேர்வை எழுதுவதற்கு மிகவும் சிரமப்பட்டேன். சி.எம்.சி. மருத்துவமனையில் விபத்து அவரசப் பிரிவில் பணி அமர்த்தப்பட்டேன். அங்கு காலை 7 மணிக்கு தொடங்கும் எனது பணி, மறுநாள் காலை 7 மணி நீளும். அப்போதெல்லாம் ஆர்வம் குன்றிவிடும். உடலிலும், உள்ளத்திலும் தெம்பிருக்காது. அதுபோன்ற நேரத்தில் அறைக்குள் நுழைந்து பரதநாட்டியம் ஆட தொடங்கிவிடுவேன். அதன்பிறகு புத்துணர்ச்சி ஏற்பட்டு, நீட் தேர்வுக்கு தயார்ப்படுத்திக்கொள்வேன். இப்படி வாரம் அறுபது மணி படித்து முதுநிலை நீட் தேர்வில் தேசிய அளவில் ஏழாம் இடம் பிடித்தேன்.

பரதநாட்டியத்தில் காணப்படும் அறிவியல் காரணம் குறித்து ஆராய்ந்துவருகிறேன். அதேபோல, மருத்துவத்தில் பரதநாட்டியத்தின் பங்களிப்பு குறித்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். பல நோய்களைத் தீர்க்கும் மாமருந்தாக பரதக்கலைக் கோவை அமைந்திருப்பதாக உணர்கிறேன். அவற்றை அறிவியல்ரீதியாக உறுதி செய்ய ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

நாட்டியம் ஒருவகையான யோகக் கலையாகும். அதன்மூலம் பெருமூளைவாதம், வலிப்புநோய் கோளாறுகள் போன்றவற்றை குணமாக்க பரதநாட்டிய யோகா கலை உதவும். இதுபோல, நாட்டியத்துக்கும், மருத்துவத்துக்கும் உள்ள தொடர்புகளைக் கண்டறிய முற்பட்டுள்ளேன். இதன் முடிவுகள் மருத்துவத்தில் பல மாற்றங்களுக்கு வித்திடும்.

மருத்துவ மேற்படிப்பில் பொதுமருத்துவத்தில் ஆய்வு நடத்த உள்ளேன். நோய் வராமல் தடுப்பது, நோயைக் கண்டறிந்து, குணமாக்கும். பொதுமருத்துவத்தில் தான் மேற்படிப்பை பயின்று வருகிறேன்.

குடும்ப மருத்துவரின் பரிந்துரைக்குப் பின்னரே மேல் சிகிச்சைக்கு நோயாளிகளை அனுப்பிவைக்கும் வழக்கம் இருந்தது. இன்றைய காலத்தில் இது மாறி, எதற்கெடுத்தாலும் சிறப்பு மருத்துவரை சந்திக்கும் போக்கு அதிகரித்துள்ளது. குடும்பமருத்துவர் முறை வெளிநாடுகளில் இன்றும் வழக்கத்தில் உள்ளது. ஆனால், இந்தியாவில் அந்த முறை முழுமையாக மறைந்துவிட்டது. அதனால், அந்த முறையை மீண்டும் துளிர்க்க செய்ய வேண்டும்.

பணத்துக்காக மருத்துவராகப் பணியாற்றாமல், ஒருகாலத்தில் சேவை மனதோடு உழைத்த மருத்துவராக என்னை தகவமைத்துகொள்ள விரும்புகிறேன். சிறந்த மருத்துவராக காலம் என்னை அடையாளப்படுத்தினால், எனது தாத்தா குருமூர்த்தியே காரணம்.

எனது மேற்படிப்பு முடிந்ததும், கைதேர்ந்த மருத்துவராக உருவான பிறகும், பரதநாட்டியத்தை தொடர்ந்து ஆடிக்கொண்டே இருப்பேன். நாட்டியக் கலையைப் போல நோய் தீர்க்கும் சிறந்த கலை மருத்துவம். மரபுசார் பரதக்கலையும் சிறந்த மருத்துவம். எனவே, நாட்டியமும் மருத்துவமும் தான் என் வாழ்க்கை'' என்கிறார் ஹம்சவர்த்தினி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com