
உலகச் சரித்திரத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் தான் வாழ்ந்த காலத்தில், ஜனரஞ்சகமான நாடகங்களை உருவாக்கினார். ஆனாலும், அவருடைய புகழ்ப் பெட்டகத்தின் சாவியும், அதில் தானிருந்தது. நாடக அரங்குகள் பூரண சுதந்திரம் அளிக்கவே, அவரும் தனது திறமைகளை முழுமையையும் வெளிப்படுத்தினார்.
ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்கள் எல்லாம், அதாவது மூலக்கதைகள் நாடகப் பிரியர்களுக்கு முன்பே தெரிந்தவைதான். அவர் கற்பனையாக எதையும் உருவாக்கவில்லை. ஆனால், அவர் செய்தது பழைய கதைகளுக்கு தன்னுடைய திறமையான எழுத்துகளின் மூலம் அமரத்துவம் அளித்ததுதான் அவருக்குப் பெரும் புகழைத் தேடி தந்தது.
ஷேக்ஸ்பியர் 1564-இல் இங்கிலாந்தில் அவன் நதிக்கரையோரமுள்ள ஸ்ட்ராபோர்டு எனும் கலகலப்பான நகரில் பிறந்தார். இவர் ஏப்ரல் 23-இள் பிறந்தவர். அவர் ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டது ஏப்ரல் 26 (ஞாயிற்றுக்கிழமை). இவரது தந்தை வியாபாரியாகவும், மேயராகவும் இருந்தார்.
ஹெல்லே தெருவிலுள்ள வசதியான வீட்டில் ஷேக்ஸ்பியர் தனது சகோதர, சகோதரிகளுடன் வளர்க்கப்பட்டிருக்கிறார். ஸ்ட்ராபோர்டில் உள்ள சிறார்கள் அங்குள்ள ஒரே பள்ளியான கிராமர் ஸ்கூலில்தான் கல்வி பயின்றனர். எழுதப் படிக்கத் தெரிந்ததும் எல்லோரும் லத்தீன் மொழியில் பயிற்சி பெற்றனர். அந்தக் காலத்தில் கல்வி அவசியமானதாகக் கருதப்படவில்லை. அதிர்ஷ்டவசமாக ஷேக்ஸ்பியர் சர்வகலாசாலைக்குச் செல்லவில்லை.
ஷேக்ஸ்பியர் தனது பதினெட்டாவது வயதில், தன்னைவிட எட்டுவயது மூத்தவரான அன்னி ஹாத்தாவே என்ற பெண்ணை மணந்தார். அடுத்த மூன்றாண்டுகளில் மூன்று குழந்தைகள் பிறந்தன. சுசானா என்ற மகளுக்கு அடுத்து, ஹமட், ஜூடித் என்ற இரட்டைக் குழந்தைகள்.
1592-இல் ஷேக்ஸ்பியர் லண்டனில் ஒரு நடிகராக இருந்துள்ளார். அந்தக் காலத்தில் நடிப்பு என்பது கடினமானதாகும். ஏழு ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும் என்பதோடு, மிகச் சிறந்த நடிகர்களுக்குதான் வாய்ப்புகள் கிடைக்கும். லண்டனில் புகழ் பெற்ற நடிகராக விளங்கியபோது, அவருக்கு வயது இருபத்து எட்டு.
அடுத்த பத்தாண்டுகளில் ஷேக்ஸ்பியரின் மேதைமை மலர்ந்து, மணம் பரப்பலாயிற்று. 36 நாடகங்களையும், 154 கவிதைகளையும், சில நீண்ட பாடல்களையும் உருவாக்கினார். அரும்பாடுபட்டு "பன்னிரெண்டாவது இரவு' என்றொரு நாடகத்தை இயற்றினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 6-இல் "எபிஃபனி' என்ற ஒரு பண்டிகையை சில நாடுகளில் கொண்டாடுகின்றனர். இது "பன்னிரெண்டு நாள்' கிறிஸ்துமஸ் விழாவின் நிறைவைக் குறிக்கிறது. இந்தப் பண்டிகையானது மாகி என்னும் மூன்று மன்னர்களுக்கு "ஜீஸஸ் தரிசனம்' கொடுத்த நாள் என்கின்றனர்.
அதனால், "மூன்று மன்னர்களின் நாள்', "சிறிய கிறிஸ்துமஸ்', "மன்னர்களின் திருவிழா' என்றெல்லாம் கூறுவதுண்டு. ஆனால் இலக்கியப் பிரியர்களுக்கோ பன்னிரெண்டாம் நாள் பண்டிகையைவிட ஷேக்ஸ்பியரின் "பன்னிரெண்டாவது இரவு' நாடகம் பிரபலமானது. இந்த நாடகத்தை "வாட் யூ வில்' என்ற பெயரால் அழைப்பதுண்டு.
அடுத்து "தி டேமிங் ஆஃப் தி ஷ்ரு' என்ற ஒரு வித்தியாசமான நாடகத்தை இயற்றினார். "நேரெதிரான குணங்களையுடைய சகோதரிகள் இருவரைப் பற்றியது. ஒருத்தி அன்பானவள், அமைதியானவள். மற்றொருத்தி வாயாடி, அடங்காப்பிடாரி, ஒருத்தி காதலுக்காக ஒருவனை மணக்கிறார்' என்பதுதான் இந்த நாடகத்தில் கதை.
இந்த நாடகங்கள் பெற்றுத் தந்த பாராட்டுகளைவிட சோகமுடிவைக் கொண்ட இவரது அற்புதமான நாடகங்களில்தான் பெயர் பெற்றார். அந்த வகையில், "மாக்பெத்', "ஹாம்லெட்', "ஒத்தெல்லோ', "கிங் லீயர்' ஆகிய நான்கு நாடகங்கள் ஈடு இணையற்ற இலக்கியப் படைப்புகளாக விளங்கின.
இந்த நாடகங்களே பல நாடுகளில் எண்ணற்ற முறை மேடைகளை ஏறி, பாராட்டுகளையும் பரிசுகளையும் பெற்றன.
மேடையில் தோன்றி நடிப்பதில் இருந்து 1610-இல் ஷேக்ஸ்பியர் ஓய்வு பெற்று, தனது வாழ்நாளில் கடைசி நாள்களை ஸ்ட்ராபோர்டிலுள்ள வீட்டில் அமைதியாகக் கழித்தார். அவர் 1616 ஏப்ரல்
23-இல் தான் பிறந்த அதே தேதியில் மறைவுற்றார். இதுமட்டுமின்றி, எந்த தேவாலயத்தில் அவர் ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டாரோ, அங்கேயே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.