கடலுக்குள்  கல்யாணம்!

கடலுக்குள் கல்யாணம்!

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்லப்பட்டாலும், அவை பெரும்பாலும் நடப்பது ஆலயங்களிலும் திருமண மண்டபங்களில்தான்!
Published on

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்லப்பட்டாலும், அவை பெரும்பாலும் நடப்பது ஆலயங்களிலும் திருமண மண்டபங்களில்தான்! வெளிநாடுகளில் வித்தியாசமான முறையில் மணமக்கள் தங்கள் திருமணத்தை விண்ணிலும், கடலுக்கு மேலேயும், கடலுக்குள்ளேயும் நடத்துகின்றனர்.

இதுபோன்ற திருமணம் புதுச்சேரி 'தேங்காய்த் திட்டு' பகுதியில், கடலுக்குள் ஐம்பது அடி ஆழத்தில், ஜனவரி 22-ஆம் தேதியன்று காலை ஏழரை மணிக்கு திருமணம் நடைபெற்றது ஆச்சரியம்தான்!

மணமக்கள் ஜான் டி பிரிட்டோ, தீபிகா ஆகிய இருவரும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள். சென்னையில் இருவரும் பணிபுரிந்தபோது, காதலித்தனர்.

'வில் யு மேரி மீ' (என்னை திருமணம் செய்துகொள்வாயா?) என்று எழுதப்பட்ட கொடியுடன் வானில் பறக்கும் பாரா மோட்டார் வாகனத்தில் அமர்ந்து பாரா கிளைடிங் மூலம் வானில் பறந்துவந்து, பிறகு கீழே இறங்கி, கடற்கரையில் நின்றுகொண்டிருக்கும் தீபிகாவின் முன் மண்டியிட்டார். பின்னர், தீபிகாவின் விரலில் மோதிரத்தை பிரிட்டோ அணிவித்தார்.

இவ்வாறு திருமண நிச்சயம் வித்தியாசமாகச் செய்துகொண்டதால், திருமணத்தையும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்துக்கு உள்ளாகினர் பிரிட்டோவும் தீபிகாவும்.

'புதுச்சேரியில் முதல்முறையாகக் கடலுக்குள் திருமணம் செய்துகொள்ளும் ஜோடி' என்ற பெருமையைப் பெறுவோம் என்று தீர்மானித்து, செய்தும் காட்டினர்.

மணமகன் பிரிட்டோ கூறியதாவது:

'கடலுக்குள் திருமணம் எப்படி செய்வது? என்று யோசிக்கும் போது கடலுக்குள் ஸ்கூபா நீந்துதலைச் சொல்லிக் கொடுக்கும் புதுச்சேரியில் இயங்கும் அரவிந்த் தருன்ஸ்ரீ ஸ்கூபா பயிற்சி நிலையத்தை அணுகினோம்.

ஏற்கெனவே சென்னை நீலாங்கரை கடல் பகுதியில் அறுபது அடி ஆழத்தில் ஒரு திருமணத்தை நடத்தியிருக்கிறோம். அது 'கடலுக்குள் நடைபெற்ற முதல் தமிழ்நாட்டு திருமணம்' என்ற பெருமையைப் பெற்றது. 'கடலுக்குள் நடந்த முதல் புதுச்சேரி திருமணம்' என்ற பெருமை கிடைக்க திருமணத்தைப் பாதுகாப்பாக நடத்திவிடலாம் என்ற உறுதியை அளித்தார்.

'கடலுக்குள் மூழ்கிச் செல்ல சேலை, வேஷ்டி பொருத்தமான உடை அல்ல; நான் ஷூட் அணிந்திருந்தேன். தீபிகா வெண்ணிற கவுன் அணிந்திருந்தார். கரையிலிருந்து படகில் ஏறி ஐம்பது அடி ஆழமான கடல் பகுதி வந்ததும், 'ஸ்கூபா' மூழ்கும் முறைப்படி ஆக்சிஜன் சிலிண்டர்களை முதுகில் பொருத்தி, குழாயை மூக்கில் பொருத்திக் கொண்டு, கண்களில் கடல் நீர் பட்டு எரிச்சல் வராமல் இருக்க தண்ணீர் புகாதவாறு கண்ணாடியை அணிந்து கொண்டோம்.

அரவிந்த், அவரது உதவியாளர்களுடன் கடலுக்குள் குதித்து மோதிரம் மாற்றிக் கொண்டோம். தீபிகாவும் நானும் பூச்செண்டு ஏந்தி இருந்தோம். கடலுக்குள் மாலைகளையும், பின்பு மோதிரங்களை மாற்றிக் கொண்டதும் கடலுக்கு மேலே வந்து படகில் ஏறினோம்' என்றார் பிரிட்டோ.

'திருமணம் கடலுக்கு அடியில் நடத்தலாம் என்று தீர்மானித்ததும் நான் பயந்தேன். தயங்கினேன். கடலுக்குள் நீந்துதல் தொடர்பான பல காணொளிகளை இருவரும் பார்த்தோம். தைரியம் வந்தது. பிறகு சில நாள்கள் நீச்சல் குளத்திலும், சில நாள்கள் கடலிலும் பயிற்சி அளித்தனர். பிறகுதான் தைரியம் வந்தது. மாலை மாற்றிக் கொண்ட போதும், தாலி கட்டிக் கொண்ட போதும் சில மீன்கள் எங்களைச் சுற்றி வந்தன. வாழ்த்த வந்திருந்தன' என்கிறார் மணமகள் தீபிகா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com