'சதுரங்க உலகில் நான்காவது இடத்தையும், இந்தியாவில் முதல் இடத்தையும் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்' என்று ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டியுள்ளார். உலக நம்பர் ஒன்னும், ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சனைத் தொடர்ந்து, 'டீம் ஃபால்கன்ஸூ'க்காக விளையாடும் தற்போதைய உலக நம்பர் 2 -ஆக இருக்கும் அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நகமுரா, 'சதுரங்க உலகில் பிரக்ஞானந்தா ஒரு அரிய ரத்தினம்' என்று வரவேற்றுள்ளார். சதுரங்க உலகில் பிரக்ஞானந்தாவை 'ப்ராக்' என்று அழைக்கிறார்கள்.
நேரடி சதுரங்கத் தரவரிசையில் குகேஷ், அர்ஜுன் எரிகைசி முன்னணி செஸ் வீரர்களைப் பின்னுக்குத் தள்ளி, பிரக்ஞானந்தா 'இந்தியாவின் நம்பர் 1' ஆனார். ஆச்சரியமான தருணத்தில் 'உஸ்செஸ்' மாஸ்டர்ஸ் கோப்பை போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மதிப்புப் புள்ளிகளில் குகேஷ், அர்ஜுன் எரிகைசி இடத்தைவிட மேலே சென்றுள்ளார்.
'ஒருவர் எத்தனை முறை வீழ்த்தப்பட்டாலும் பெரிதில்லை. பலமுறை வீழ்ந்தாலும் எத்தனை முறை எழுந்து நின்று போராடும் திறன் ஒருவரிடம் உள்ளது' என்பதுதான் முக்கியம். 'உஸ்செஸ்' மாஸ்டர்ஸ் கோப்பை போட்டியில் பிரக்ஞானந்தா நம்பமுடியாத மீள்தன்மையைக் காட்டி வெற்றி பெற்றார்.
ஐந்து, ஆறாவது சுற்றுகளில் தொடர்ச்சியாக இரண்டு ஆட்டங்களில் பிரக்ஞானந்தா தோற்றார். கடைசி இரண்டு சுற்றுகளில் வென்றார். 'பிளேஆஃப்'களில், இரண்டு முறை ஜவோகிர் சிந்தரோவ்வை பிரக்ஞானந்தா தோற்கடித்தார். வெல்ல வேண்டிய ஆட்டங்களில் அவர் வெற்றி பெற்றது திருப்புமுனையாக அமைந்தது.
பிரக்ஞானந்தாவின் அமைதியும் பாதகமான சூழ்நிலையை சமாளிக்கும் திறனும் பல ஜாம்பவான்களின் பாராட்டைப் பெற்றது. இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால், உலகின் முதல் பத்து இடங்களில் எந்த ரஷியரும் இல்லை.
நேரடி கிளாசிக்கல் சதுரங்கத் தரவரிசையில் பிரக்ஞானந்தா தற்போது உலக நம்பர் நான்காம் ஸ்தானத்தில் உள்ளார். குகேஷ் ஐந்தாம் இடத்திலும், ஆறாம் இடத்தில் அர்ஜுன் எரிகைசி இருக்கிறார். சென்னையைச் சேர்ந்த பத்தொன்பது வயதான பிரக்ஞானந்தா இறுதிச் சுற்றில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டோரோவை வீழ்த்தி கோப்பையை வென்று முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் சர்வதேச மதிப்பீட்டில் நம்பர் 1-ஆக உள்ளார். அமெரிக்க ஹிகாரு நகமுரா, ஃபேபியானோ கருவானா நேரடி தரவரிசையில் முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களில் உள்ளனர்.
இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, 'ஈ ஸ்போர்ட்ஸ்' உலகக் கோப்பைக்கு முன்னதாக ‘டீம் லிக்விட்' அணியில் இணைந்ததற்கான அறிவிப்பு ஜூன் 28-இல் வெளியாகி, சதுரங்க உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரக்ஞானந்தா, இந்த ஆண்டு மேக்னஸ் கார்ல்சன், ஃபேபியானோ கருவானா போன்ற செஸ் ஜாம்பவான்களுடன் அணி சேருகிறார்.
பிரக்ஞானந்தா 'டீம் லிக்விட்' அணியில் சேர்ந்திருப்பதால், 'டீம் லிக்விட்' ஆன்லைன் சதுரங்கப் போட்டிகளில் வலுவான அணிகளில் ஒன்றாக மாறியுள்ளது. 'டீம் லிக்விட்' ஆன்லைன் சதுரங்கப் போட்டி ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 24 வரை சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெறும். இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி மட்டுமே இதுவரை ஈஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பையில் இடம் பெற்ற ஒரே இந்தியர். பிரக்ஞானந்தா இரண்டாவதாக இணைந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.