மக்களிடம் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஊடகவியலாளர் பத்மஜா ஜெயராமன் பாராட்டத்தக்கச் செயலை கடந்த சில மாதங்களாகச் செய்துகொண்டிருக்கிறார்.
சென்னையில் 'கிண்டி வாசிப்பு வட்டம்' என்ற அமைப்பை உருவாக்கி, அதன் உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காந்தி மண்டபத்தில் கூடி மாலை நாலரை மணி முதல் ஆறு மணிவரை தாங்கள் விரும்பிய புத்தகங்களை எடுத்து வாசிக்கும் முயற்சிதான் அது.
அவரிடம் பேசியபோது:
'பொதுவாகவே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் மக்களிடம் குறைந்துவிட்டது. செய்திகளையும் கைப்பேசி வாயிலாகவே அறிகின்றனர். வாசிப்பு என்பது ஒரு மனதுக்கு மகிழ்ச்சி தரும் இனிமையான அனுபவம் என்ற உணர்வு சமூகத்தில் குறைந்து வருவது வேதனையை அளிக்கிறது. முன்பெல்லாம் ரயிலில், பேருந்துகளில் பயணம் செய்யும்போது மக்கள் புத்தகங்களை, பத்திரிகைகளைப் படித்துகொண்டிருக்கும் காட்சி மிகவும் சகஜமானது. இன்றே கைப்பேசியில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
வரலாறு, வாழ்க்கை வரலாறு புத்தகங்களை நான் விரும்பி வாசிப்பேன். இதனால், வாசிப்பு ஆர்வத்தை மக்களிடம் அதிகரிப்பது குறித்து யோசித்துகொண்டிருந்தேன்.
பெங்களூரில் ஒரு புத்தகக் கடையில் வாரம்தோறும் வாசகர் கூட்டம் நடப்பதாகவும், அந்த நேரத்தில் வாசகர்கள் தங்கள் விரும்பும் புத்தகத்தை அமைதியான சூழ்நிலையில் அமர்ந்து படிப்பதாகவும் கேள்விப்பட்டேன். அதேபோல நாமும் ஏன் ஏதாவது செய்யக் கூடாது என்ற பொறி தட்டியது.
பொதுஇடத்தில், வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் ஒன்றுசேர்ந்து வாசிக்கவும் தாங்கள் படித்த புத்தகம் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் செய்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணமும் எனக்குத் தோன்றியது.
சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபம் என்னை மிகவும் கவர்ந்த இடம். பரபரப்பான போக்குவரத்து உள்ள பகுதியில் அது அமைந்திருந்தாலும், அதன் உள்ளே சென்றுவிட்டால் மிகவும் அமைதியான ஒரு சூழ்நிலை நிலவும்.
எனவே, வாசகர்கள் வாசிப்பதற்கு மிகவும் ஏற்ற இடம் அது என நினைத்தேன். முகநூல் மூலமாக எனது இந்த எண்ணத்தைப் பகிர்ந்துகொண்டபோது, சிலர் ஆர்வம் காட்டினர். கடந்த பிப்ரவரி மாதத்தில் நான்கு பேர் வருகை தந்து, வாசிப்பு வட்டம் தொடங்க ஆதரவு அளித்தனர். பின்னர், வாசகர்கள் வருகை அதிகரித்து, தற்போது 20 பேர் வரை வருகை தருகின்றனர்.
தற்போது எங்கள் வாசிப்புக் குழுவுக்கு 'கிண்டி வாசிப்பு வட்டம்' என்று பெயர். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை நாலரை மணிக்கு நாங்கள் கூடுவோம். அவரவர் தங்களுக்கு விருப்பமான புத்தகத்தைக் கொண்டு வருவார்கள். ஒரு சில நிமிடங்கள் அறிமுகம், கலந்துரையாடலில் கழித்துவிட்டு, அவரவர் தங்களது புத்தகங்களை வாசிக்கத் தொடங்குவோம்.
நாவல்கள், சிறுகதைகள், வரலாறு, நிர்வாகம், வாழ்க்கை வரலாறு, ஆன்மிகம் உள்ளிட்ட பலவகையான புத்தகங்களைக் கொண்டுவந்து படிக்கிறார்கள்.
பழைய மாமல்லபுரம் சாலையில் வசிக்கும் அகிலேஷ், ரஷிய இலக்கியமான 'டால்ஸ்டாய்' புத்தகங்களை விரும்பி வாசிப்பார். துரைப்பாக்கத்தைச் சேர்ந்த கஸ்தூரிரங்கன் தமிழ் ஆன்மிகப் புத்தகங்களின் தீவிர வாசகர். சிலர் செய்தித் தாள்களை எடுத்துகொண்டு வந்து அவற்றில் இடம்பெற்றிருக்கும் சிறப்புக் கட்டுரைகளைப் படிப்பார்கள்.
ஒருமுறை கோபிநாத் லட்சுமணன் என்ற எழுத்தாளர், எங்கள் வாசிப்பு வட்டத்துக்கு வந்து தான் எழுதிய புத்தகத்தின் பிரதிகளைக் கையெழுத்திட்டு அனைவருக்கும் கொடுத்தார். சுமார் ஒரு மணி வாசித்துவிட்டு, ஐந்தரை மணி வாக்கில் வாசகர்கள் தாங்கள் படித்த புத்தகங்கள் பற்றிய தங்கள் கருத்துகளை எல்லோரும் பகிர்ந்து கொள்வார்கள்.
காந்தி மண்டபத்தில் இருக்கும் அமைதியான, பசுமையான சூழ்நிலை, குடிநீர் வசதி, வாகனம் நிறுத்தும் வசதி எல்லாம் எங்கள் வாசிப்பு வட்டத்துக்கு உற்சாகம் அளிக்கும் விஷயங்கள். 'கிண்டி வாசிப்பு வட்டம்' போல சென்னை பெருநகரின் பல்வேறு பகுதிகளிலும் இன்னும் ஏராளமான வாசிப்பு வட்டங்கள் உருவாக வேண்டும்' என்கிறார் பத்மஜா ஜெயராமன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.