மாணவர்களின் புத்தாக்கத் தொழில் கண்டுபிடிப்பு...

'புத்தாக்கத் தொழில் கண்டுபிடிப்புகளைத் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களும், இளைஞர்களாலும்தான் உருவாக்க முடியுமா? எங்களாலும் முடியும்' என நிரூபித்துள்ளனர் பள்ளி மாணவ, மாணவிகள்.
மாணவர்களின் புத்தாக்கத் தொழில் கண்டுபிடிப்பு...
Published on
Updated on
1 min read

'புத்தாக்கத் தொழில் கண்டுபிடிப்புகளைத் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களும், இளைஞர்களாலும்தான் உருவாக்க முடியுமா? எங்களாலும் முடியும்' என நிரூபித்துள்ளனர் பள்ளி மாணவ, மாணவிகள்.

கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறித்துவக் கல்லூரி (எம்.சி.சி) வளாகத்தில் எம்.ஆர்.எஃப். டயர் நிறுவனம், பள்ளி- கல்லூரி மாணவர்களின் அறிவாற்றல் திறனை மேம்படுத்தி, பல்வேறு புதுமைத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை உருவாக்க வழிகாட்டி உறுதுணை புரிய அதிநவீன ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவி உள்ளது. இங்கு சேலையூர் சீயோன், ஆல்வின் பள்ளி மாணவர்களுக்கு எம்.சி.சி-எம்.ஆர்.எஃப். ஆராய்ச்சி மையம் உதவியுடன் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளனர்.

'இது எப்படி சாத்தியமாயிற்று?' என்று பள்ளித் தாளாளர் என்.விஜயனிடம் பேசியபோது:

'எம்.சி.சி.கல்லூரி முதல்வர் பி.வில்சனிடம் எங்கள் பள்ளி மாணவர்களுக்கும் பயிற்சி தர முடியுமா? என்று கேட்டபோது, அவர் சம்மதம் தெரிவித்தார். 'மாணவர்களிடம் ஏதேனும் புதுமை ஆலோசனையுடன் ஸ்டார்ட் அஃப் நிறுவனம் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் இருக்கிறீர்களா?' என கேட்டபோது 24 பேர் முன்வந்தனர். அவர்களுக்கு எம்.ஆர்.எஃப்.ஆராய்ச்சி மையம் தலைமை செயல்பாட்டாளர் சி.ஆர்த்தியும், தொழில்நுட்ப வல்லுநர்களும் வழிகாட்டினர்.

இதன்படி, மாணவர்கள் 5 புதுமைத் தொழில் திட்டங்களைக் காட்சிப்படுத்தி விவரித்தனர். பாரம்பரிய தின்பண்டங்கள், பதார்த்தங்கள், உணவு வகைகளை சுவை குன்றாமல் இன்றைய இளைய தலைமுறையினர் விரும்பி சாப்பிடும் வகையில் தயாரித்து இணைய தளம் மூலம் விற்பனை செய்யும் தொழில் திட்டம், பள்ளிக்குச் சுமக்க முடியாமல் அதிக அளவில் எடுத்துச் செல்லப்

படும் நோட் புக், பாடப்புத்தகங்கள், பயிற்சி நோட்டுகள் சுமையைக் குறைக்கும் ஸ்மார்ட் பேடு, உறவினர், நண்பர்கள், தொழில் தொடர்பான விவரங்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு பரிசு பொருள்கள், நினைவூட்டல் வழங்கும் காஸ்மோஸ் அண்ட் கம்பெனி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்து மக்களுக்கும் பயன்தரும் தொழில் நுட்பக் கண்டுபிடிப்பாக விரைவில் மாறும்.

மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி, வழிகாட்டல் மூலம் சிறந்த தொழில் முனைவோர்களை உருவாக்க முடியும்' என்கிறார் விஜயன்.

இதுகுறித்து ஆராய்ச்சிக் கூடத்தின் தலைமைச் செயல்பாட்டாளர் சி.ஆர்த்தியிடம் பேசியபோது:

'மாணவர்கள் வேலை தேடுவோர்களாக இல்லாமல், அவர்களது தொழில் முனைவுத் திறமைகளை மேம்படுத்தி தொழில் நிறுவனங்கள் தொடங்கி வேலை வழங்குவோர்களாகத் திகழ வேண்டும் என்ற நோக்கில் கல்வி நிறுவனங்கள் 'இன்குபேஷன் சென்டர்' என அழைக்கப்படும் புத்தாக்க உள்ளுறை மையங்கள் அமைத்து மாணவர்களை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. நாடு முழுவதும் தற்போது 1100 புத்தாக்க உள்ளுறை மையங்கள் உள்ளன. இந்த வகையில், எம்.சி.சி. வளாகத்தில் எங்கள் மையம் செயல்படுகிறது.

இளம்தலைமுறையினர் மத்தியில் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கும் ஆர்வம், எண்ணம்,வேட்கை இருக்கும்.அதை எப்படி வடிவமைத்து,செயல்படுத்த போதிய தொழில்நுட்ப வழிகாட்டல் கிடைக்காமல் சிரமப்படுவர்.அப்படி புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திட்டம் வைத்து இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் எங்களைத் தொடர்பு கொண்டால் வழிகாட்டி உதவத் தயாராக உள்ளோம்' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com