துப்பாக்கி கையில் எடுத்து...

ஜெர்மனியில் மூனிச் நகரில் அண்மையில் நடைபெற்ற 'ஐ.எஸ்.எஸ்.எஃப்.' உலகக் கோப்பைக்கான துப்பாக்கிச் சுடும் போட்டியில் இளவேனில், 10 மீ. ஏர் ரைபில் பிரிவில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
துப்பாக்கி கையில் எடுத்து...
Published on
Updated on
2 min read

ஜெர்மனியில் மூனிச் நகரில் அண்மையில் நடைபெற்ற 'ஐ.எஸ்.எஸ்.எஃப்.' உலகக் கோப்பைக்கான துப்பாக்கிச் சுடும் போட்டியில் இளவேனில், 10 மீ. ஏர் ரைபில் பிரிவில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

முன்னதாக, 2018-இல் மூனிச்சில் நடைபெற்ற உலகக் கோப்பைக்கான போட்டியில், இந்தியாவின் சார்பாக அறிமுகமாகினார். ஜூனியர்களுக்கான போட்டியில் 6 தங்கப் பதக்கங்கள், ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

ஆசியப் போட்டிகளில் 3 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்ற இளவேனில், சீனியர் உலகக் கோப்பைக்கான போட்டிகளில் போட்டியில் இதுவரை 6 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

இரண்டு ஒலிம்பிக்ஸ்களில் பங்கெடுத்திருக்கும் இளவேனிலுக்கு இருபத்து ஐந்து வயதாகிறது. கடலூரில் பிறந்த இளவேனில் படித்தது, வளர்ந்ததும் குஜராத்தின் அகமதாபாத்தில். தாய் சரோஜா பள்ளி முதல்வராகப் பணியாற்றிவருகிறார். தந்தை முனைவர் வாலறிவன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார்.

இதுகுறித்து தாய் சரோஜா கூறியது:

'இளவேனிலின் அண்ணன் ராணுவ கேப்டன். அவர் விடுமுறையில் வரும்போது துப்பாக்கிகளைப் பற்றி தங்கையிடம் விவரிப்பார். இதனால் துப்பாக்கிகள் மீது இளவேனிலுக்கு ஆர்வம் பிறந்தது. அகமதாபாத்தில் இருக்கும் இந்திய ராணுவத் துப்பாக்கி சுடும் கழகத்தில், இளவேனில் 2013-இல் குறி பார்த்து துப்பாக்கியால் சுடும் பயிற்சியில் சேர்ந்தார்.

குளோப் மிஷன் இன்டர்நேஷனல் பள்ளியில் துப்பாக்கி பயிற்சி தரப்படுகிறது என்பதினால், அங்கு பத்தாம் வகுப்பில் சேர்த்தோம். பிளஸ் டூ வரை அந்தப் பள்ளியில் படித்தார். தொடக்கத்தில் மாவட்ட அளவில் போட்டிகளில் தொடங்கி, தேசிய போட்டிகளில் முன்னேறினார். 2016-இல் சொந்தமாகத் துப்பாக்கி சுமார் மூன்று லட்சம் ரூபாய்க்கு வாங்கினோம்.

ஜெர்மனியில் நடந்த 28-ஆவது ஜுனியர் உலகப் போட்டியில் இந்தியாவின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, 28-ஆம் இடம் கிடைத்தது. இளவேனிலுக்கு துப்பாக்கி ஏந்துவதற்கு அடுத்தபடியாக வாகனம் ஓட்டுவதில் விருப்பம் அதிகம்.

பயிற்சி நாள்களில், அதிகாலை நாலரை மணிக்கே புறப்பட்டுவிடுவார். தனியாகத்தான் போய் வருகிறார். இரவு நேரங்களில் பெண்கள் தனியாகப் போவதில் அகமதாபாத்தில் ஒரு பிரச்னையும் இல்லை. சிட்னியில் தங்கப் பதக்கம் வென்றால் கார் வாங்கித் தர வேண்டும் என்று இளவேனில் கேட்டிருந்தார்.

'ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றால் நிச்சயம் கார் வாங்கித் தருகிறோம்' என்றோம். 'ஒலிம்பிக்ஸில் பதக்கம் பெற்றால் நானே சொந்தமாகக் கார் வாங்கிக் கொள்வேன்' என்று இளவேனில் எங்களை பதிலுக்குக் கலாய்த்தார். கடைசியில் சொந்தமாகவே கார் வாங்கிக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில் மேல் பயிற்சிக்காகச் சென்னைக்கும், புணேவுக்கும் இளவேனில் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியதிருந்தது. அதனால் ஆங்கில இலக்கியம் பட்டப்படிப்பில் சேர்ந்தார். இளவேனிலுக்கு ஓய்வு என்பது எங்களுடன் அகமதாபாத்தில் தங்கும் போதுதான்.

இளவேனிலுக்கு குஜராத்தி, ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் எழுதப் படிக்க பேச வரும். கடலூரில் பிறந்தாலும், மூன்று வயதில் என் வேலை காரணமாக அகமதாபாத் வரவேண்டிவந்தது. இளவேனில் தாத்தா (அப்பாவின் அப்பா) ருத்ரபதியோ, தமிழ் பற்று உள்ளவர்.

எங்களுக்கும் தமிழ் பற்று உண்டு. அதனால் மறக்காமல் அகமதாபாத்தில் தனியாக ஆசிரியரை வைத்து இளவேனிலுக்குத் தமிழ் பயிற்றுவித்தோம். தமிழிலேயே பெயர் வைத்தோம்.

2022 டிசம்பரில் இளவேனிலுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

'ரைஃபிள்' எனப்படும் நீண்ட துப்பாக்கி சுடுவதில் இளவேனிலுக்கு குரு சென்னையில் துப்பாக்கி பயிற்சி பள்ளியின் பொறுப்பாளராக இருந்த நேஹா சவுஹான்' என்கிறார் சரோஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com