வெளிச்சம் எல்லாம் அற்புதம்!

அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசையைத் தீர்மானிக்கும்.
வெளிச்சம் எல்லாம் அற்புதம்!
Published on
Updated on
2 min read

அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசையைத் தீர்மானிக்கும். அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறி விடுகிறது. அப்படித்தான் இங்கே ஒரு சூழல். ஒவ்வொரு கணமும் ஓர் அனுபவம்.

அனுபவமே கடவுள் என்று உணருகிற போதுதான் எல்லாமே தெரிகிறது. ஆசையே துன்பத்துக்கு காரணம் என புத்தர் உணர்ந்தது சிறு விநாடிதான். ஆனால், அவர் கடந்து வந்த தூரம் ஒரு வனத்தை கடந்த மாதிரி. இதுதான் என் தற்போதைய நிலை.'' என்று தன்னிலை விளக்கம் கொடுத்து பேசுகிறார் நடிகர் உதயா. பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள 'அக்யூஸ்ட்' இவரது அடுத்தப் படம். 25 ஆண்டு காலப் போராட்டத்தில் இந்தப் படம் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளார்.

'சின்ன சின்ன தவறுகள் எல்லாம் சேரும் போதுதான் பெரிய பெரிய அனுபவங்கள் கைக்கு வரும். அப்படி ஒட்டுமொத்த அனுபவங்களையும் பெற்று விட, இந்த ஒரு வாழ்க்கை போதாது. இதோ நம் பக்கத்தில் நடக்கிற சின்ன சின்ன தவறுகளிலிருந்து கூட, அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இது ஏதோ ஒரு உபதேசம் போல் இருக்கலாம். ஆனால் உண்மை.'' இதைச் சொல்லி முடிக்கும் போது, உதயாவின் முகத்தில் அவ்வளவு பிரகாசம்.

'சினிமா குடும்பத்தில் இருந்து வந்தாலும் பெரும் போராட்டம்தான். கால் போன போக்கு, மனம் போன இடம் என்று திரியும் வயதில் இருந்தே இந்த சினிமா மேல் சிறு ஆசை. அவ்வப்போது வருகிற படங்களின் பெரும் வெற்றி, அது தரும் உத்வேகம் இந்தப் பயணத் தொடக்கத்துக்கு பெரும் பலம். சினிமாவின் மேல் வெறும் ஆசையை மட்டும் கொள்ளாமல், அதைப் பற்றி தீவிரமாக தெரிந்து கொண்டேன்.

ஆனால் சினிமா வாசலுக்கான திறவுகோல் எங்கேயும் இல்லை. முதல் வாய்ப்பில் ஆயிரம் கஷ்டங்கள் இருந்தன. எல்லாவற்றுக்கு தயாராக இருந்தேன். உழைப்பைத் தவிர வேறு எதுவும் இல்லை. அறிமுகப் படத்துக்கு ஒரளவு நல்ல மரியாதை. அதுவே சினிமாவில் தொடர்ந்து பயணிக்க உத்வேகம் தந்தது.

சினிமாவுக்கு வந்த பலருக்கும் நிறைய கதைகள் இருக்கும். ஆனால் எனக்கென்று அப்படி ஒன்றும் இல்லை.

துக்கம், கவலை, மகிழ்ச்சி, கொண்டாட்டம், அன்பு, அழுகை இவையெல்லாம் நிறைய இருக்கிறது. நான் பார்த்து பழகின மனிதர்கள் எல்லாரும் அவ்வளவு நல்லவர்கள். நல்ல நல்ல அனுபவங்கள் கொடுத்தார்கள். சிலருக்கு பணம்தான் குறியாக இருந்தது.

சினிமா, வாழ்க்கை என இரண்டிலும் இருந்த குழப்பங்களை புரிந்துக் கொள்ள அவர்கள்தான் துணை நின்றார்கள். அதுதான் இந்த இடத்துக்கு என்னை கொண்டு வந்திருக்கிறது.

'இவன் பெரிய ஆளு...'ன்னு சில பேர் எடைப் போட்டார்கள். சிலர் மனசை பார்த்து பார்த்து பழகினார்கள். இப்படி வாழ்வு நெடுகிலும் நல்ல ஆசான்கள். எல்லோருக்கும் நன்றிகள்.

யுகங்களின் காத்திருப்பை ஒரு நொடியின் தரிசனம் துடைத்தெறிவது மனித வாழ்வில்தான் நடக்கும். காத்திருப்பின் வலியைச் சுகமாக்கும் உயிர்கள்தான் பிரபஞ்சத்தின் பெருங்கொடை இல்லையா... எதிர்பார்த்துக் காத்திருப்பது பல நேரங்களில் நடப்பதில்லை.

ஆனால், காத்திருந்ததை விடவும் அழகான விஷயங்கள் நடந்து விடுகின்றன. சினிமாவில் என் அடுத்த துவக்கம் இது. 'அக்யூஸ்ட்' நல்ல கதை. கன்னட இயக்குநர் பிரபு ஸ்ரீனிவாஸூக்கு நன்றி. எளிய கதை, பெரிய கமர்ஷியல் என்று என்னை மாற்றி வைக்கப் போகும் கதை.

திரைக்கதையில் அவ்வளவு சுவாரசியம். எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த கதை. சென்னையிலிருந்து சேலம் வரை பயணிக்கிற கதை. பெரும் சுவாரஸ்யங்களும், அதிர்ச்சிகளும் சம விதத்தில் கலந்திருக்கிற கதை.

இந்த நேரத்தில் நான் நடிக்க வேண்டிய படம். எதிர்பார்ப்பது எல்லாம் நடந்தால், இந்த படம் வேறு ஒரு நிலையில் உங்களை வந்துச் சேரும். உடம்பும், மனசும் லயித்து இயங்குகிற படம். காலம் கடந்தும் ரசிகர்கள் மத்தியில் நிற்க கூடிய படமாக இருக்கும். இதோ நீங்களும், நானும், நாம் எல்லாரும் பார்த்து ரசிக்கிற இந்த உலகம்தான் கதை. நல்ல படம். நல்ல இடத்துக்கு என்னைக் கொண்டு போகும்.

பெரிய இடங்களுக்கு இன்னும் பயணப்படவில்லை. அதற்குள் நிறைய பேரின் அன்பும், ஆதரவும் கிடைத்திருக்கிறது. 'இயல்பா இருக்கப்பா...'னு நிறைய பேர் சொல்லுவதில் மகிழ்ச்சி.

இவற்றையெல்லாம் விட போராடி வெற்றிப் பெற துடிக்கும் உதவி இயக்குநர்கள், நல்ல சினிமாவை நேசிக்கும் புதுப் படைப்பாளிகள் எல்லோருக்கும் என் இடம் பிடிக்கும். அந்தளவுக்கு வருவேன். இப்போது தெரிகிற வெளிச்சம் எல்லாம் அற்புதம். இதற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். நல்ல நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று காத்திருக்கிறேன். தேடி வந்தவை நிறைய.. நானும் தேடிப் போகிறேன்.

பெரிய ஸ்டார், சின்ன ஸ்டார் என எந்த வித்தியாசத்தையும் ரசிகர்கள் பார்ப்பதில்லை. கதை இருந்தால் போதும்... இந்த நிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்தால், எல்லாமே மாறி விடும். கதைதான் முக்கியம். இதுதான் கதை என தீர்மானமாக பிடித்து விட்டால், அந்த கதையில் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று விடுவேன். ஓடுகிற படத்தில் இருப்பதை விட, கதை உள்ள படத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன்.

இந்த நிலைப்பாடு கடைசி வரை இருந்தால் அழகான வெற்றிகளின் பட்டியல் தொடரும். சினிமா ஒரு பதற்றத்துடன் நிற்க வேண்டிய இடம்தான். ஆனால் நம்பிக்கையோடு உழைத்தால், ஆசீர்வதிக்கப்பட்ட இடம் கிடைக்கும். என் சினிமா பயணத்தில் கிடைத்த அனுபவம் இது. எல்லாவற்றுக்கும் நேரம் எடுத்து, புதிது புதிதாக யோசித்து உழைக்கத் தயாராக இருக்கிறேன். அப்படிப் பார்த்தால் இனி வரும் படங்கள்தான் எனக்கான ஸ்டார்ட் பட்டன்''. கண்கள் மலர்ந்து நிற்கிறார் உதயா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com