பெ.அய்யனார்
'புதுமைப்பித்தனின் ஒவ்வொரு கதையாகப் படித்து குறிப்பு எழுதியுள்ளார் சுந்தர ராமசாமி. அதை எப்படி படித்தேன் என்று. புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகள் கொண்ட தொகுப்பு, மொழிபெயர்த்த கட்டுரைகள், வாழ்க்கை வரலாறு போன்றவை வெளியானது. இதற்கு மேல் புதுமைப்பித்தன் பற்றிப் பேச என்ன இருக்கிறது என்று நினைக்கும்போது, புதுமைபித்தன் பற்றி பேச இன்னும் ஆயிரம் பக்கங்கள் இருக்கும் என்கிறார்கள்' என்கிறார் பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.
எழுத்தாளர் ஆ. இரா. வேங்கடாசலபதி பதிப்பித்த 'புதுமைப்பித்தன் களஞ்சியம், புதுமைப்பித்தன் துணைவியார் எழுதிய 'நினைவுத் தீ' , புதுமைப்பித்தன் மகள் தினகரி சொக்கலிங்கம் எழுதிய 'எந்தையும் தாயும்' ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா ஓவியர் ட்ராட்ஸ்கி மருது தலைமையில் சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனமானது ஜூன் 30-இல் நடத்தியது. காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட இந்த நூல்களை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வெளியிட்டு, புதுமைப்பித்தனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மேலும் பேசியது:
'நான் இந்த அரங்குக்கு வந்ததிலிருந்து இங்கே இருக்க வேண்டியவர் இருந்தால் மகிழ்ந்திருக்கக் கூடிய ஒருவராக நான் சுந்தர ராமசாமியை நினைக்கிறேன். அவர்தான் இதற்கு மிகப் பொருத்தமான மனிதர். அவரது ஆதர்சம்தான் புதுமைப்பித்தன். சுந்தர ராமசாமி தனது 19- ஆம் வயதில் புதுமைப்பித்தனுக்கு மலர் கொண்டு வந்திருக்கிறார். தனது வாழ்நாள் எல்லாம் புதுமைப்பித்தனைப் பேசினார். படித்தார். எழுதினார்.
பாரதியார், வ .உ .சி., புதுமைப்பித்தன் என்று மூன்று ஆளுமைகளைத் தொடர்ந்துப் பேசும் ஆ. இரா. வேங்கடாசலபதிக்கு முக்கியத்துவம் இருக்கிறது. மூன்று ஆளுமைகளும் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள். தமிழ் அறிவுலகத்தின் முக்கியமான ஆளுமைகள். இந்த மூவரின் பங்களிப்பையும் ஒருசேர கொடுத்துள்ள ஆ. இரா.வேங்கடாசலபதிக்கு தமிழ்ச் சமூகம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.
புதுமைப்பித்தனுக்கு சொத்துகள் எல்லாம் எதுவுமே இல்லை. எல்லாம் அவரது தந்தை காலத்திலேயே போய்விட்டது. ஆனால் புதுமைப்பித்தன் இறந்தவுடன் குடும்பத்தினர் அவரது படைப்புகளைப் பாதுகாத்து முறையாகப் பதிப்பித்து முறையான உரிமையுடன் கொடுக்க வேண்டும் என்ற சிறப்பை எடுத்துகொண்டது மிகவும் முக்கியமானது வேங்கடாசலபதியின் இந்த நூலில் இதை படித்தபோது, உலக இலக்கியத்தில் இதேபோன்று மூன்று பேரைக் குறிப்பிட்டு சொல்ல முடியும்.
ஒருவர் டால்ஸ்டாய் மனைவி சோபியா டால்ஸ்டாய். இவர் இல்லாவிட்டால் டால்ஸ்டாய் என்பவரே இல்லை. இதேபோலத்தான் தஸ்தயேவ்ஸ்கியின் மனைவி அன்னா. தஸ்தயேவ்ஸ்கி இறந்தவுடன் அவரது பதிப்பாளர்களைச் சந்தித்து, எல்லா நூல்களையும் மலிவு பதிப்பில் வெளியிட்டார் .
இன்னொருவர் செக்காவின் தங்கை மரியா. செக்காவின் எல்லா படைப்புகளையும் பாதுகாத்து, காப்பாற்றி அதற்காக பெரிய ஆவணக் காப்பகத்தை உருவாக்கினார். செக்காவின் படைப்புகளை உலகறியச் செய்ததில் மரியாவுக்குப் பெரிய இடம் உண்டு' என்றார் எஸ்.ராமகிருஷ்ணன்.
விழாவில் புதுமைப்பித்தனின் மகள் தினகரி சொக்கலிங்கம், எழுத்தாளர் கு. அழகிரிசாமி மகன் சாரங்கன், பழ .அதியமான், சித்ரா பாலசுப்ரமணியம், ஜா. தீபா உள்ளிட்டோர் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.