
கதாநாயகன், வில்லன், குணச்சித்திர வேடங்களில் தமிழில் எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றிருந்தபோதிலும், தனது முத்திரை பதித்த புராண, இதிகாச நாடகங்களில் சரித்திரம் படைத்தவர் 'நாடகக் காவலர்' ஆர்.எஸ். மனோகர். அவரது நூற்றாண்டு விழா சென்னை மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபா அரங்கில் நல்லி குப்புசாமி செட்டியார் தலைமையில் அண்மையில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் பல்வேறு நாடகக் காட்சிகள் திரையில் ஒளிபரப்பியதுடன், நேரிடையாக மேடையில் நடித்தும் காட்டினார் ஆர்.எஸ். மனோகரின் தம்பி மகன் சிவபிரசாத்., மனோகரது நாடகங்களை மீண்டும் மேடையேற்றி வரும் இவர், தனது பெரியப்பா மனோகர் குறித்த நினைவுகள் குறித்து கூறியது:
'ஆர்.எஸ். மனோகர் நாடகங்களில் கண்ணிமைக்கும் பொழுதில் காட்சிகள் மாறும். தந்திரக் காட்சிகள், பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
மனோகர் நாடகமா? மிகச் சரியாக மாலை ஆறு மணிக்கு மணி அடித்து விடுவார்கள். நாடகம் துவங்கிவிடும். தான் படித்த ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் தனக்கு ஒழுக்கம், பக்தி, கட்டுப்பாடு, பெரியவர்களை மதிக்கும் பண்பு, தேசப்பற்று ஆகியவற்றுடன் நேரம் தவறாமையையும் கற்றுக் கொடுத்தனர் என்று அவர் அடிக்கடி சொல்லுவார்.
பச்சையப்பன் கல்லூரியில் அவர் பி.ஏ. சம்ஸ்கிருதம் படித்தபோது, அங்கே 'மிருச்சகடிகா' என்ற சம்ஸ்கிருத நாடகத்தில் கதாநாயகனாக நடிக்க வேண்டிய மாணவனுக்கு திடீரென்று அம்மைநோய் போட்டு, நடிக்க முடியாத சூழ்நிலை. நாடக ஏற்பாட்டாளர்கள் திகைத்து நின்றனர். 'நான் நடிக்கிறேன்' என்று மனோகர் தானாகவே முன்வந்து, நடித்து, பாராட்டும் பெற்றார்.
நாடகத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் மனோகரன். பிற்காலத்தில் அவர் சினிமாவுக்கு வந்தபோது, தனது இயற்பெயரான 'லட்சுமிநாராயணன்' என்பதை 'மனோகர்' என்று மாற்றிக் கொண்டார்.
அந்தக் காலத்தில் டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகங்களின்போது மக்கள் ரசித்துக் கைத் தட்டிப் பாராட்டுவதைப் பார்த்தபோது, மனோகருக்கு நாமும் மேடை நாடகங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
1954 நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று 'நேஷனல் தியேட்டர்' என்ற சொந்தமாக தாடக கம்பெனியை ஆரம்பித்தார். அவரது முதல் நாடகம் 'இன்ப நாள்' என்ற சமூக நாடகம்தான். 'பாவமன்னிப்பு' பாணியில் பாசத்தை மையமாய்க் கொண்ட கதை. நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அடுத்ததும் 'உலகம் சிரிக்கிறது' என்ற சமூக நாடகம்தான்.
மூன்றாவதாக மேடை ஏற்றிய நாடகம்தான் 'இலங்கேஸ்வரன்'. வால்மீகி ராமாயணம், பெளத்த ராமாயணம், துளசிதாசரின் ராமாயணம், ஆனந்த ராமாயணம் என்று பல்வேறு ராமாயணக் கதைகளை ஆராய்ச்சி செய்து எழுதப்பட்டது அந்த நாடகம். கதாநாயகன் ராவணன்.
அரக்கனாகச் சித்திரிக்கப்படும் ராவணனை நல்லவனாகக் காட்டியதும், ராவணனின் மகள் சீதை என்று சொன்னதும் மக்களுக்கு அதிர்ச்சியைத் தந்தன. பெரும் முதலீடு செய்து போட்ட சரித்திர நாடகம், நஷ்டத்தை ஏற்படுத்தியது. சபாக்காரர்கள் தேதிகளை ரத்து செய்து விட்டார்கள். அவர் மனம் நொந்து போய்விட்டார்.
காஞ்சிபுரத்துக்குச் சென்று பரமாச்சாரியாரை தரிசித்து விஷயத்தைச் சொன்னார். 'நீ தப்பாக ஒண்ணும் சொல்லிடலையே!' என்று சொல்லி அவர் ஆசிர்வதித்தார். சீக்கிரமே அவரது மனக்கவலை தீர்ந்தது. இலங்கையின் கொழும்பு நகரில் ஒரே அரங்கத்தில் இருபத்தியோரு நாள்கள் தொடர்ந்து நாடகத்தை நடத்த அழைப்பு வந்தது.
அங்கே பாராட்டுகள் குவிந்தன. அங்கேதான் அவருக்கு 'இலங்கேஸ்வரன்' என்ற பட்டமும் கொடுத்தனர். அவருடைய நாடகங்களிலேயே மிக அதிகமாக 1,862 தடவை மேடை ஏறியது இந்த நாடகம்தான். சி.சுப்ரமணியம், ஆர்.வெங்கடராமன், பெரியார் ஈ.வெ.ரா. போன்ற தலைவர்கள் இலங்கேஸ்வரன் நாடகத்தைப் பார்த்து ரசித்து, பாராட்டினர்.
'சினிமாஸ்கோப்' என்பதைப் போன்று 'டிராமாஸ்கோப்' என்ற தொழில்நுட்பத்தை மேடையில் முதலில் கொண்டு வந்தது அவர்தான். ஸ்டீரியோஃபோனிக் சவுண்டு முறையை மேடையிலேயே அறிமுகம் செய்தவர் அவர். அதாவது வலப்பக்கத்திலிருந்து படை வீரர்கள் இடப்பக்கம் செல்வது போன்ற காட்சியில் ஒலியும் அவ்வாறே வலமிருந்து இடமாகக் கேட்கும்! அதே போல சுக்ராசாரியார் நாடகத்தை இரண்டு பாகங்களாக மேடை ஏற்றியதும் ஒரு புதுமையே!
அவரது நாடக அனுபவங்கள் சவால்கள் நிறைந்தவை. புராண நாடகங்களில் வசனங்களைக் கற்றுகொடுத்து நடிக்க வைப்பது அவ்வளவு எளிதல்ல.
ஒருமுறை துரோணர் நாடகம் நடக்கவிருந்த சமயத்தில் துருபதன் பாத்திரத்தில் நடிக்க வேண்டிய நடிகர் வர இயலாத சூழல் ஏற்பட்டுவிட்டது. எங்கள் அலுவலகத்தில் மேலாளராக இருந்த விசுவநாதனுக்கும் நடிப்புக்கும் சம்பந்தமே இல்லை.
வேறுவழியில்லாத நிலையில் அவரை அந்தப் பாத்திரத்தில் நடிக்கத் தயார் செய்யும் பொறுப்பை எனக்கு மனோகர் கொடுத்தார். காலை ஒன்பது மணிக்குத் தொடங்கி, மாலை வரை அவருக்கு நடிப்பு, வசனங்கள் சொல்லித் தந்து மேடையேற்றி விட்டோம். அவரும் நன்றாகவே நடித்து குழுவின் பெயரைக் காப்பாற்றினார்.
இன்னொரு சம்பவம். காடக முத்தரையன் நாடகம். அதில், திருமங்கையாழ்வார் பாத்திரத்தில் நடிப்பவர் நாடகத்தன்று காலை இறந்து விட்டார். உடனே வேறு ஒருவரை தயார்செய்து வசனங்களை சொல்லிக்கொடுத்து அன்று மாலை நடிக்க வைத்தோம்.
'நரகாசுரன்' நாடகத்தில் கடைசி காட்சியில் தலை மட்டும் பேசியபடி நகரும்விதமாக ஒரு காட்சி இடம்பெறும். அதில் மனோகர் ஒரு டிராலியில் நின்றிருக்க, மற்ற உடல்பாகங்கள் தெரியாமல் மறைந்திருக்க தலை மட்டும் வெளியே தெரியும். இவர் வசனங்களைப் பேசுவார்.
வழக்கமாக, இவர் டிராலி மேல் ஏறி நின்றுகொண்டு, இழுக்கச் சொன்னவுடன் டிராலியை இழுப்பார்கள். அன்று துரதிருஷ்டவசமாக, இவர் சரியாக ஏறி நிற்காத நிலையில் டிராலியை இழுப்பவரிடம் 'இருடா' என்று சொல்ல, ஆனால் டிராலியை இழுப்பவர் மனோகர் 'இழுடா' என்று சொல்லுவதாக நினைத்து டிராலியை இழுக்க பன்னிரண்டு அடி உயரத்திலிருந்து அவர் கீழே விழுந்து விட்டார். ஆனாலும் தொடர்ந்து சமாளித்து அன்று நடித்து முடித்துவிட்டார்.
நாடகம் முடிந்தவுடன் மருத்துவமனையில் சேர்த்தபோது மருத்துவர்கள், 'அதிர்ஷ்டவசமாகத் தப்பினீர்கள். கொஞ்சம் பிசகியிருந்தாலும் ஒரு பக்கம் முழுவதும் பக்கவாத நோய் தாக்கியிருக்கும்' என்று சொன்னார்கள். நாங்கள் எல்லோரும் இறைவனுக்கு நன்றி சொன்னோம்.
மனோகர் திரைத்துறையில் பிஸியாக இருந்தாலும், நாடகங்களுக்குக் குறித்த நேரத்துக்கு செல்லத் தவறியதேயில்லை. எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்பட அன்றைய முன்னணிக் கதாநாயகர்களும், இயக்குநர்களும் மனோகரின் நாடகங்களுக்கு எந்த இடைஞ்சலும் வராமல் இருக்க மிகவும் ஒத்துழைத்தார்கள்.
ஒரு தடவை, சேலத்தில் தொடர்ந்து ஏழு நாள்கள் நாடகம் போட அழைப்பு வந்தது. அதே நேரம் சென்னையில் அவருக்கு சினிமா ஷூட்டிங்கும் இருந்தது. இரண்டிலுமே அவர் இருந்தாக வேண்டும். எப்படி சமாளித்தார் தெரியுமா? தினமும் காலை ஏழு மணிக்குத் தொடங்கி, பகல் ஒரு மணி வரை சென்னையில் ஷூட்டிங்.
அவர் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு முடிந்ததும் காரில் சேலத்துக்குப் புறப்படுவார். மாலையில் சேலத்தில் நாடகம். இரவு மறுபடி காரில் பயணம் செய்து காலையில் சென்னை வந்து சேருவார். வெற்றிகரமாக சேலம் நாடகம் முடித்தாலும், அவரது உடல் நிலை ரொம்பவுமே பாதிக்கப்பட்டது.
மனோகரின் சாதனைகளைப் போற்றும் வகையில் அவருக்கு 'நாடகக் காவலர்' என்ற பட்டம் அளித்தவர் எம்.ஜி.ஆர். என்பதோடு, 'நாடகச் செம்மல்' என்ற பட்டம் அளித்தவர் ஜெயலலிதா. இதுதவிர, 'நாடகப் பேரொளி', 'சங்கீத நாடக அகாதெமி விருது', 'இசைப் பேரறிஞர்' உள்ளிட்ட பட்டங்களையும், எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருது, பரமாச்சாரியார் விருது, ஞான கலா பாரதி, நாடக பத்மம், நாடக ரத்னா, நாடக கலா நிபுணா விருதுகளையும் மனோகர் பெற்றுள்ளார்.
மனோகருக்கு உடல் பலவீனமடைந்தபோது நாடகங்களிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். இதனை அறிந்த முதல்வர் ஜெயலலிதா, இயல், இசை, நாடக மன்றம் வழியாக உதவிகளைச் செய்தார். 'திருநாவுக்கரசர்' வாழ்க்கை வரலாறை மேடையேற்றச் செய்து நாடகத்துக்கு ஜெயலலிதாவே தலைமை தாங்கினார். நூறாவது முறை இந்த நாடகம் நடந்தபோதும் நேரில் வந்து வாழ்த்தினார்' என்கிறார் சிவபிரசாத்.
7,950 முறை மேடையேறிய 31 நாடகங்கள்
ஆர்.எஸ்.மனோகர் தனது முதல் நாடகமான 'இன்ப நாள்' தொடங்கி, கடைசி நாடகமான 'திருநாவுக்கரசர்' வரையிலான 31 நாடகங்களை 7,950 முறைகள் மேடையேற்றி இருக்கிறார். மிக அதிக முறையாக 1,862 முறை மேடை கண்டது 'இலங்கேஸ்வரன்'. அடுத்து 'சாணக்கிய சபதம்' என்ற நாடகம் 726 தடவை மேடை ஏறியது.
மற்ற சில முக்கிய நாடகங்கள் மேடையேறிய எண்ணிக்கை:
துரோணர்- 371, காடக முத்தரையன் 421, மாலிகாபூர் 382, இந்திரஜித் 239, சூரபத்மன் 674, சிசுபாலன் 213, விசுவாமித்திரர் 719, சுக்ராசாரியார் (2 பாகங்கள்)- 520, துரியோதனன்- 177, பரசுராமர்- 156, ஒட்டக் கூத்தர்- 117, மாவீரன் கம்சன்- 174, நரகாசுரன்-173, துர்வாசர்-114, திருநாவுக்கரசர்- 118.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.