கூடுவதும் பிரிவதும்தான் வாழ்க்கை. பிறப்பு, இறப்பு போன்று இரண்டும் மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அம்சம். எதற்குக் கூடினோம், எப்படி பிரிந்தோம் என்பது இதில் முக்கியமானது. மனிதனின் வாழ்க்கையில் தொடக்கமும், முடிவும் தனிமைதான். வேலை, பணம், மண், பொருள் என தேடல்கள் வெவ்வேறாக இருந்தாலும், எல்லாரும் கடைசியில் ஏங்கி நிற்பது அன்பு என்ற ஒற்றை வார்த்தைக்குத்தான்.
'சாப்பிட்டியா? வெயில்ல அலையாதே? உடம்ப பார்த்துக்கோ...' என எங்கோ கிராமத்தில் இருந்து வந்து விழுகிற வார்த்தைகளுக்காக இன்னும் காத்திருப்பவர்கள் எத்தனை பேர். பரபரப்பும், விறுவிறுப்பும் கூடி விட்ட வாழ்க்கையில் நாமெல்லாம் இழந்து நிற்கிற சொந்தங்களும், பந்தங்களும் எத்தனை... வார்த்தைகளில் ஈர்க்கிறார் ராஜாமோகன். தந்தை - மகன் பாசப் பின்னணியில் உருவாகியிருக்கும் 'ஃபாதர்' படத்தின் இயக்குநர். 'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்', 'வானவராயன் வல்லவராயன்' படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.
கசிந்துருகும் காதல் கூட காமெடியாகி விடுகிற காலம் இது... இந்தக் கால கட்டத்தில் தந்தை - மகன் பாசத்தை முன் வைக்கும் கதையை சொல்லுவது சரியாக வருமா...
செவ்வாய் கிரகத்துக்காக இடம் பெயர்ந்து விட்டோம். இரண்டு நாள் விடுமுறை கிடைத்தால், அம்மா, அப்பா, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என கிராமம் தேடி ஓடுவதில்லையா? அம்மாவின் கையில் சாப்பிட்டு விட்டு புதுத் தேடலுடன் நகரம் நோக்கி ஓடி வரும் பிள்ளைகள் எத்தனை பேர். மண்ணும், மனிதர்களுமான வாழ்க்கையைத்தான் நம் மனசு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
தந்தை - மகன் உறவில்தான் எத்தனை எதார்த்தம். எத்தனை அழகு. அப்பாதான் உலகம் என்று வாழும் ஒருவன். அதே போன்று தன் மகனை விட உலகத்தில் சிறந்தது எதுவும் இல்லை என்ற நினைப்பில் உள்ள ஒரு அப்பா. இவர்களின் அன்பு, நேசம், பாசத்துக்கு இடையில் ஊடுருவி வருகிறது ஒரு காதல்.
அதை அந்த தந்தை எப்படி எதிர்கொள்கிறார் என்பது ஒரு லைன். தன் மகன்தான் தனது ஆதாரம் என்று வாழும் ஒரு தகப்பன். தகப்பனை தவிர உலகத்தில் உயர்ந்தது இல்லை என்று வாழும் மகன். இவர்களுக்கு இடையே ஒரு காதல். இது இன்னொரு லைன். இந்த இரண்டு லைன்களுக்கு இடையேயான கோர்வைகள்தான் திரைக்கதை.
கதையின் உள்ளடக்கமும் இதுதானா...
வாழ்க்கையை இன்னும் அழகுப்படுத்தி வைத்திருக்கிற வித்தை காதலுக்கு மட்டுமே உரியது. ஆனால், அதே காதல் அருமையான உறவுகளை துண்டித்து விடுகிறது. எல்லாமும் நீதான்யா.... என நம்பி இருக்கிற உறவுகளுக்கு ஒரு காதல் வந்து ஏமாற்றம் தந்து விடுகிறது.
'உனக்காக எதையும் விட்ருவப்பா...' என்ற மகன், 'இப்போது வேலையா இருக்கேன்.. அப்புறம் பேசுறேன்...' என அப்பாவுக்கே நேரம் ஒதுக்கி கொடுக்கிற சூழலுக்கு உள்ளாகி விடுகிறான். எப்படியெல்லாமோ கல்யாணம் செய்து வைக்க காத்திருக்கிற பெற்றோர்களை, எனக்கு எப்போதோ கல்யாணம் முடிந்து விட்டது என கடந்து விடுகிறது இளந் தலைமுறை. ஆராய்ந்து பார்த்தால், எதிர்பார்ப்புகள்தான் உறவுகளுக்குள் இருக்கிற முக்கிய பிரச்னை.
எதிர்பார்ப்புகள் பொய்யாகும் போதுதான், இங்கே எல்லாவற்றிலும் சிக்கல். மனசுக்கு பிடித்தவர்களை காதலிக்க தெரிந்த நம்மால், நம் வீட்டு உறவுகளின் மனதிலும் இடம் பிடிக்க முடியாதா? என நடக்கிற போராட்டம்தான் கதை. பிரிகிற வலிக்கு பயந்தோ, பிரிந்தால் உலகம் என்ன சொல்லுமோ என்கிற இமேஜுக்கு பயந்தோ சேர்ந்து வாழ்வது போல அபத்தம் வேறு இல்லை என்பது இந்தக் கதையின் தாக்கமாக இருக்கும்.
இது மாதிரியான கதைகளுக்கு இப்போது இடமிருக்கா...
தற்கால சினிமாக்கள் அப்படி புரிந்து வைத்திருக்கின்றன. நல்ல சினிமாக்களுக்கு என்றைக்கும் காலம் உண்டு. என்ன... அது சினிமாவாக மட்டுமே அல்லாமல், உணர்வுகளை வருடி விடுகிற விஷயமாக இருக்க வேண்டும். அதற்காக நமக்கு அந்நியமான, நம் வாழாத கலாசாரங்களை எடுத்து வைத்து விட்டு வருத்தப்பட்டால் யார் என்ன செய்வது?
விதவிதமாக, ரகரகமாக இவ்வளவு மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிற இந்த மாநகரத்தில் இருந்து, இன்னமும் எங்கோ கிராமத்தில் வாழ்கிற தன் தங்கைக்கு பொங்கல் சீராக சில ரூபாய்களை மணியார்டரில் அனுப்பி வைக்கிற அண்ணன்கள் நம்முடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு நாகரீக வளர்ச்சி விகிதம் வளர்ந்து நம் வாழ்க்கையை மாற்றி போட்டாலும், சில அம்சங்கள் நம்மை விட்டு என்றைக்கும் பிரிந்து விடாது. ரசனை வேறு, உணர்வுகள் வேறு.
பிரகாஷ்ராஜ் இந்தக் கதைக்குள் எப்படி வந்தார்...
பிரகாஷ்ராஜ் சார் வந்ததும் இந்தப் படம் பெரிய படமாகி விட்டது. அதே நேரத்தில் எனக்குள் பதட்டம். இவரிடம் எப்படி வேலை வாங்குவது என்று உள்ளுக்குள் உதறல். நெருங்கி போய் பழகினால் மனுஷன் குழந்தை. இப்படி ஒரு மனிதனை நான் பார்த்ததே இல்லை. என் முந்தைய படங்களில் இவர் இல்லையே என்ற வருத்தம் துரத்திக் கொண்டது.
இந்தப் படத்துக்கு அவரின் நடிப்புதான் பலம். இன்னுமொரு தேசிய விருது காத்திருக்கிறது. பிரகாஷ்ராஜ் மகனாக கன்னடத்தில் பிரபலமான டார்லிங் கிருஷ்ணா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அம்ருதா.கன்னடத்தில் வளர்ந்து வரும் ஹீரோயின். இசையமைப்பாளராக நகுல் அவ்வயங்கர். கன்னடத்தில் பெரும் இசை ஆளுமை.
அப்படியொரு இசை கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர் ஆர். சந்துருவின் ஒத்துழைப்பு இங்கே முக்கியமானது. அவரே படத்தை வெளியிடுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இயல்பான அழகு, உறுத்தாத நடிப்பு, நல்ல ஒளிப்பதிவு என இந்தப் படத்துக்கு எல்லாமே பெரிய பலம். இந்தப் படம் உண்மையிலேயே புத்தம் புது அனுபவமாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.