சூரிய ஒளி ஒவியம்!

காகிதம், துணி, மரம், கண்ணாடி, சுவர்.. உள்ளிட்டவற்றில் ஓவியங்கள் வரையப்படும் நிலையில், தஞ்சாவூர் கரந்தை பாலோப நந்தவனத்தைச் சேர்ந்த பிரேம்குமார் - விஜயலட்சுமி தம்பதியின் மகன் தருண் குமார், சூரிய ஒளியில் ஓவியத்தை வரைந்து வருகிறார்.
சூரிய ஒளி ஒவியம்!
Published on
Updated on
2 min read

காகிதம், துணி, மரம், கண்ணாடி, சுவர்.. உள்ளிட்டவற்றில் ஓவியங்கள் வரையப்படும் நிலையில், தஞ்சாவூர் கரந்தை பாலோப நந்தவனத்தைச் சேர்ந்த பிரேம்குமார் - விஜயலட்சுமி தம்பதியின் மகன் தருண் குமார், சூரிய ஒளியில் ஓவியத்தை வரைந்து வருகிறார்.

இருபத்தொரு வயதான இவர், தஞ்சாவூர் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை கட்டட எழிற்கலை பட்டப்படிப்பில் (பி.ஆர்க்.) நான்காமாண்டு படித்து வருகிறார்.

'இது எப்படி சாத்தியம்?' என்பது குறித்து அவரிடம் பேசியபோது:

'சிறு வயதிலிருந்தே ஓவியம், வர்ணம் தீட்டுதலில் ஆர்வம். பெற்றோரும், ஆசிரியர்களும் முழு ஆதரவு அளித்தனர். தற்போது மேடைகளில் பின்புறத்தில் வைக்கப்படும் பதாகையில் சிறு ஓவியங்களை வரைந்தேன். வெளிநாட்டில் வரையப்பட்டது சூரிய ஒளி ஓவியத்தை சமூக ஊடகங்களில் பார்த்தபோது, அதன் மீது ஆர்வம் ஏற்பட்டது.

மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ் சூரிய ஒளி ஓவியத்தை வரைந்து பிரபலமாக்கியுள்ளார். அவர் எப்படியெல்லாம் ஓவியத்தைப் படைக்கிறார் என்பதை சமூக ஊடகங்களில் உன்னிப்பாகக் கவனித்து, அதன்படி நானும் கற்றேன். இதற்கான உபகரணங்களைச் சேகரித்து, ஓய்வு நேரத்தில் ஒன்றரை ஆண்டாக வரைந்து வருகிறேன்.

இதற்காக, கேரளத்திலிருந்து வரவழைக்கப்படும் ரப்பர் மரப் பலகையில்தான் வரைய முடியும். திருச்சிக்கு வரக் கூடிய இந்த மரத்தைக் கொள்முதல் செய்து, தேவைப்படுகிற அளவுக்கு பலகை வடிவில் அறுப்பேன். முதலில் பென்சிலில் வரி வடிவம் வரைவேன். அதன்பின்னர், லென்ஸில் (பூதக் கண்ணாடி) சூரிய ஒளியைக் குவித்து, அதிலிருந்து வெளிப்படும் வெப்பத்தின் மூலம், பலகையில் சூடேற்றி வரக் கூடிய கரிய நிறத்தைக் கொண்டு ஓவியம் வரைவேன்.

இந்த ஓவியங்கள் ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு அழியாமல் பாதுகாப்பாக இருக்கும். வெயிலில் இருந்தால் மரம் சுருங்கும். மழையில் நனைந்தால் விரியும். எனவே, வெயிலிலோ, மழையிலோ படாமல் பாதுகாத்தால், கிட்டத்தட்ட ஐந்து தலைமுறைகளுக்கு நீடித்து வரும்.

முறையான பயிற்சி இல்லாமல் செய்ய முடியாது. லென்ஸை தவறாகப் பயன்படுத்தினால், கையில் கொப்பளமாகி பாதிப்பை ஏற்படுத்தும். முழுமையாக வெயிலிலேயே நின்று வரையக் கூடிய ஓவியம். காலை 8 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் 1 மணி வரையும், இடையில் ஒரு மணிநேரம் ஓய்வு எடுத்துகொண்டு மீண்டும் வரைவேன்.

கையைத் தூக்கிக் கொண்டு லென்ஸை பிடிப்பதால் தோள்பட்டை வலி ஏற்படும். அதற்கேற்ப ஓய்வு எடுப்பேன். லென்ஸில் சூரிய ஒளி விழும்போது வரக்கூடிய ஒளியிலிருந்து கண்ணைப் பாதுகாப்பதற்காகவே குளிர் கண்ணாடி (கூலிங் கிளாஸ்) அணிவேன். வெயில் தாக்கத்திலிருந்து காத்துகொள்ள குடையும் வைத்திருப்பேன்.

முதலில் மாமன்னன் ராஜராஜசோழனையும், பின்னர் அரசியல் தலைவர்களையும் ஓவியமாகப் படைத்தேன்.

பல்கலைக்கழக விழாக்களுக்கு வந்த ஹிப்ஹாப் தமிழா, கோவாவைச் சேர்ந்த பிரபல கட்டட எழிற்கலை கலைஞர் (ஆர்க்கிடெக்டர்) ரீட்டா மோடி உள்ளிட்டோரை ஓவியமாகப் படைத்து, அவர்களிடம் நினைவுப் பரிசாக வழங்கினேன்.

ராஜராஜசோழனின் ஓவியத்தை சூரிய ஒளியில் ஏ 3 அளவில் படைப்பதற்கு 7 நாள்களாகின. ஏ 4 அளவில் முதல்வர் படத்தை வரைவதற்கு 2 நாள்கள் ஆகின. வெயில் அளவைப் பொருத்து ஓவியம் வரைவதற்கான நேரம் எடுத்துகொள்ளும். அக்னி நட்சத்திரக் காலத்தில் விரைவாக முடித்துவிடலாம். மற்ற பருவத்தில் சில நாள்களாகும். மழைக்காலம், பனி காலத்தில் சூரிய ஒளி இருக்காது என்பதால், இந்த ஓவியத்தை வரைய முடியாது.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 10 பேர் சூரிய ஒளி ஓவியத்தைப் படைக்கின்றனர். வெயில் தாக்கம் காரணமாக இந்த ஓவியத்தைப் பலர் தொடர்வதில்லை. எவ்வளவு நுணுக்கமாக செய்கிறோமோ, அதற்கு தகுந்த அளவுக்கு விலை பெறுகிறது.

எதிர்காலத்தில் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுடன் இணைந்து கணினி, மென்பொருள், இயந்திரம் மூலம் படைப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளேன்' என்கிறார் தருண் குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com