கோவையில் மகாத்மா தங்கிய வீடு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மகாத்மா காந்திக்கு நினைவகங்கள் இருந்தாலும், கோவையில் அமைந்துள்ள நினைவகத்துக்கு தனிச் சிறப்பு உண்டு.
கோவையில் மகாத்மா தங்கிய வீடு!
Published on
Updated on
2 min read

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மகாத்மா காந்திக்கு நினைவகங்கள் இருந்தாலும், கோவையில் அமைந்துள்ள நினைவகத்துக்கு தனிச் சிறப்பு உண்டு. 1934 பிப்ரவரி 6-ஆம் தேதி இரவு கோவை போத்தனூரில் உள்ள ஒரு ஓட்டு வீட்டில் மகாத்மா காந்தி தங்கியிருந்ததுதான் அந்த தனிச் சிறப்பு.

கோவைக்கு மகாத்மா மூன்று முறை வந்திருந்தாலும் மூன்றாவது முறை பயணத்தில்தான் கோவையில் தங்கியுள்ளார். மகாத்மா தங்கியிருந்த வீடு விஞ்ஞானி ஜி.டி.நாயுடு குடும்பத்தினருக்குச் சொந்தமானதாகும். இந்த ஓட்டு வீட்டில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக 'வித்யாலயா' என்று அழைக்கப்பட்ட கல்விப் பயிற்சி மையத்தை கல்வியாளர் டிஎஸ்.

அவினாசிலிங்கம் நடத்தி வந்தார். இதில் 7-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்விப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

இந்த ஓட்டு வீட்டில் மகாத்மா காந்தி தங்கியிருந்தது குறித்து டி.எஸ்.அவினாசிலிங்கம் எழுதியுள்ள 'சேக்ரட் டச்' என்ற புத்தகத்தில் 'காந்திஜி அட் தி வித்யாலயா' என்ற கட்டுரையில் இதுதொடர்பான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

'கோவையில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டிருந்த பொதுக்கூட்டத்தில் மகாத்மா உரையாற்றினார். அந்த காலகட்டத்தில் போத்தனூர்தான் பிரதான ரயில் நிலையச் சந்திப்பாகும். அதனால், கோவை பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து ராஜமாணிக்கம் பகவதி சகோதரர்கள் நடத்திய நாடகத்தைப் பார்த்துவிட்டு, அந்த நாடகத்துக்கு வசூலான நன்கொடையையும் காந்திஜி பெற்றுக் கொண்டு போத்தனூரில் உள்ள வித்யாலயாவுக்கு புறப்பட்டார்.

மகாத்மா காந்தி எப்போதுமே திறந்த கூரையுள்ள காரில் வேகமாகப் பயணம் செய்வதையே பெரிதும் விரும்புவார். போத்தனூர் ரயில்வே கிராஸிங்கை அதிவேகத்தில் கடக்கும்போது ரயில்வே கேட் அருகே இருந்த வளைவை கார் ஓட்டுநர் கவனிக்கவில்லை. இதனால், ரயில்வே கேட் மூடப்பட்டு இருந்ததைக் கண்டும் ஓட்டுநரால் காரை நிறுத்த முடியாத நிலையில், ரயில்வே கேட் மீது கார் மோதியது. இதில் காரிலிருந்த கனமான சிவப்பு எச்சரிக்கை விளக்கு காற்றில் பறந்து ஓட்டுநரின் இருக்கையில் விழுந்தது.

இதைக் கண்ட அவினாசிலிங்கம் பதைபதைத்தபோதிலும் காந்திஜி எதுவுமே நடக்காததைப் போல நடக்க ஆரம்பித்துவிட்டார். சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு நடந்தே வந்து வித்யாலயாவை அடைந்து அன்றைய பணிகளை முடித்துவிட்டு கடிதங்களுக்கும் பதில் எழுதி விட்டு இரவு 2 மணிக்கு உறங்கச் சென்றார்.

பிப்ரவரி 7-ஆம் தேதி காலை 4 மணிக்கே விழித்த அவர் அன்று காலை பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண வித்யாலயத்துக்கு போத்தனூரிலேயே அடிக்கல் நாட்டினார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர், பழைமை மாறாமல் அப்படியே இருந்த அந்த வீடு 2022-இல் பாரதிய வித்யா பவன் தலைவரான பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயரின் முயற்சியாலும், ஜி.டி. குழுமத் தலைவர் ஜி.டி.கோபால் ஒப்புதலின்பேரிலும் புனரமைக்கப்பட்டது. தற்போது காந்தி நினைவகம் பொதுமக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஜி.டி. அறக்கட்டளையின் சமூகப் பணிகளுக்கான திட்ட தலைவர் எஸ்.அஞ்சனகுமார், உதவி மேலாளர் ஆர்.புவனேஸ்வரி ஆகியோர் கூறியதாவது:

'இந்த நினைவகத்தில் கோவைக்கும், மகாத்மாவுக்கும் இடையேயான வரலாற்றுத் தொடர்பை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படங்கள், ஆவணங்கள், ஓவியங்கள் ஆகியவற்றுடன் மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருள்களின் மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் இங்குள்ள நூலகத்தில் மகாத்மா குறித்த முந்நூறுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி தொடர்பான பல்வேறு தகவல்களும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக மகாகவி பாரதியாருக்கு மகாத்மா தமிழில் எழுதிய கடிதத்தின் நகல், 2-ஆம் உலகப் போரை நிறுத்த வலியுறுத்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதத்தின் நகல், மகாத்மா பள்ளியில் படித்த மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட முந்நூறுக்கும் மேற்பட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நினைவகத்துக்கு ரஷியா, ஜெர்மனி, ஸ்பெயின், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் என கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 16,000 பேர் வந்து சென்றுள்ளனர்.

அதனால், இந்த நினைவகத்தை தமிழக அரசு சுற்றுலாத் துறையின் மூலம் சுற்றுலா மையங்களில் ஒன்றாக பிரபலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த மையம் ஞாயிற்றுக்கிழமை தவிர வார நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பார்ûவாளர்களுக்காகத் திறந்திருக்கும்' என்றனர்.

மரணம் எப்படி?

பதில் சொன்ன மகாத்மா 1934-இல் திருப்பூர் பயணத்தை முடித்துவிட்டு கோவைக்கு மகாத்மா காரில் புறப்பட்டார். அப்போது மேற்கூரையில்லாத திறந்த காரில் பயணம் செய்வது பாதுகாப்பாக இருக்காது எனவும், உயிருக்கே ஆபத்தானது எனவும் உடனிருந்த காந்தியவாதிகள் அவரிடம் கூறியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த மகாத்மா, 'என் உயிரை உள்ளங்கையில் பிடித்துள்ளேன். நான் நெருப்புடன் விளையாடுவது எனக்குத் தெரியும். எனக்கு சாதாரண மரணம் இருக்காது. அது தூக்குக்கயிறாகவோ அல்லது துப்பாக்கிக் குண்டு மூலமாகவோ இருக்கும்' என்று பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com