'போர் தொழில்' படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா தனுஷ் நடிக்கவுள்ள படத்தை இயக்குகிறார். தனுஷூன் 54-ஆவது படமாக உருவாகும் இப்படத்தினை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
தனுஷ் ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார். மேலும் கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிரித்வி பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார், தனித்துவமான ஒளிப்பதிவுக்கு பெயர் பெற்ற தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியாவின் பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது.
'லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'. இப்படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 'கூலி' படத்தைத் தொடர்ந்து 'கைதி -2' படத்தை இயக்குகிறார் லோகேஷ். அதன்பின், 'விக்ரம் - 2', 'ரோலக்ஸ்' என அடுத்தடுத்து வரிசையாக கதைகளை தயார் செய்து வைத்திருக்கிறார்.
இந்நிலையில் தனது படங்களை பற்றி பேசுகையில் ' அமீர்கானை வைத்து இந்திய அளவில் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அப்படம் இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்திருக்கிறார். இதற்கான அமீர்கானை விரைவில் சந்திக்க இருப்பதாகவும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிகை ஐஸ்வர்யா ராயைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், இதனால் விவாகரத்து செய்யப்போவதாகவும் அடிக்கடி செய்திகள் வெளி வந்துகொண்டிருக்கின்றன.
அதனை நிரூபிக்கும் விதமாக இருவரும் அடிக்கடி பொதுநிகழ்ச்சிகளில் தனித்தனியாக வந்து கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் விவாகரத்து குறித்து இருவரும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வந்தனர். சமீப காலமாக மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் இருவரும் சேர்ந்து கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் முதல் முறையாக மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த எம்.பி வேலை தனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்று கங்கனா ரனாவத் ஏற்கெனவே தெரிவித்து இருந்தார். தற்போது இந்த எம்.பி. பதவி குறித்து அளித்த பேட்டியில் தனது புதிய வேலை குறித்து கங்கனா ரனாவத் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், ' நான் எம்.பி பதவியில் இந்த அளவுக்கு வேலை இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. எனக்கு எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தபோது பாராளுமன்றத்திற்கு 60 முதல் 70 நாள்கள் வரவேண்டியிருக்கும் என்று சொன்னார்கள். மற்ற நாட்களில் எனது வேலையை பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். அது எனக்கு சரியாக பட்டது. இப்போது அப்படி இல்லை.' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.