வாழ்க்கையின் எந்தப் பக்கத்தைத் திறந்து பார்த்தாலும் அதில் ஆச்சரியங்கள் நிறைந்து கிடக்கின்றன. அப்படித்தான் இது. பெரிய திட்டமிடல் இருந்தது. எங்கே கிரிமினல்கள் உருவாகி வருகிறார்கள் என்று தேடினால், உங்களுக்குக் கிடைப்பது எதிர்பாராத திருப்பங்கள்.
உங்களின் சந்தோஷத்திற்கும், நிறைந்த எதிர்பார்ப்பிற்கும் நிச்சயம் கேரண்டி. முழுப் படத்தையும் கையில் வைத்துக் கொண்டுதான் நம்பிக்கையோடு பேசுகிறேன். நானே ரசிக மனப்பான்மையால் பார்த்து ரசித்துதான் சொல்கிறேன். ஆர்வமாகப் பேசத் தொடங்குகிறார் விஜயசேகரன். பிரபுசாலமனின் உதவியாளர். இப்போது 'போகி' படத்தின் இயக்குநர்.
'போகி'.. எதை உணர்த்துகிற தலைப்பு....
தமிழர்களின் வரலாற்றில் தொன்று தொட்டு வந்துக் கொண்டிருப்பவைதான். பழையன கழிதலும் புதியன புகுதலும்தான் நம் வாழ்க்கை முறை. அதை இந்தக் காலக் கட்டத்துக்கு தேவையான அளவுக்கு நின்று பேச போகிறேன்.
எல்லாமே திட்டமிட்ட ஒன்றுதான். இன்றைய சினிமா மிகவும் துணிச்சலாகப் பேச வேண்டிய விஷயம் இது. 'எனது அன்பு, கோபம், மனிதம் இதை எல்லாம் முழுவதுமாக வெளிப்படுத்த முடியாமல் எந்த அரசியலாவது தடையாக இருந்தால், அது எனக்கு வேண்டாம்' என்றார் வினோபா பாவே.
உண்மை. தொடர்ந்து பணத்துக்கும் அதிகாரத்துக்கும் எதிரான மனநிலையில் இருப்பவர்கள் எவ்வளவு நிம்மதியாக இருப்பார்கள் என்பதை அறிந்தவர்கள் உணர்வார்கள். யாரைப் பிடிப்பது, யாரைக் கவிழ்ப்பது, யாரைக் கலாய்ப்பது, யாரை எங்கே வைப்பது, யாருக்கு என்ன செய்வது என ஏகப்பட்ட புதிர்ப் பாதைகள் கொண்டதுதான் இங்கே உள்ள அரசியல்.
அலுவலகம் தொடங்கி ஒவ்வொரு மட்டத்திலும் அரசியல் செய்ய தெரிந்தவர்கள் விரைவாக முன்னேறி, வசதி வாய்ப்புகளை அனுபவிப்பார்கள். செய்யத் தெரியாதவர்கள் அப்பாவிகளாக சிங்கியடிப்பார்கள் என்பதுதான் இங்கே உள்ள பெரிய சமூக சிக்கல். சூழ்ச்சியையும் தந்திரமாக பிழைப்பதையும் சமார்த்தியம் என நினைக்கிற எல்லா மனிதர்களின் வாழ்க்கையும்தான் இந்தப் படம்.
கதையின் உள்ளடக்கம்...
ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்துக்குப் பொறுப்பாகி விடுகிறோம். பெண்மை, கற்பு, ஒழுக்கம் போன்ற கலாசார மதிப்பீடுகள் எல்லாம் வேறு வேறு அர்த்தங்கள் பெற்று உருமாறி விட்டன. இன்னும் சில காலங்களில் பண்பாடு, கலாசாரங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் தவிக்கப் போகிறோம். பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு எத்தனை பிரச்னைகளை உருவாக்கி விடுகிறது சமூகம்.
இதனால் சொல்ல முடியாத தவிப்பில் இருக்கிறார்கள் பெண்கள். சிக்னலில் கார் துடைத்து விடும் சிறுமிக்குப் பின்னால் எத்தனை ஒரு ரணம் இருக்கும். வறுமை, ஆதிக்க சக்திகளின் பண பலம் என நிறைய விஷயங்கள் இதன் பின்னணியில் உண்டு. இந்தியாவின் வல்லரசு கனவு... சந்திரனுக்கு விண்கலம் என பெருமைகளைப் பேசிக் கொண்டிருக்கிற நாம், இன்னொரு பக்கம் ரணங்களை உள்நோக்கி பார்ப்பதில்லை. அப்படி ஒரு பார்வை இது முன் வைக்கும். கலாசாரம், பண்பாட்டுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து தீர்க்கமான ஒரு அரசியல் பார்வையும் இருக்கிறது.
பேச வேண்டிய விஷயம்தான்... வேறு என்ன எதிர்பார்க்கலாம்...
தில்லியில் தன் நண்பனோடு கைகோர்த்துப் போன மருத்துவ பெண் அப்படி ஒரு மூர்க்கமான சூறையாடலுக்கு ஆளாவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். ரத்தமும் துடிப்புமாக அல்லாடிய அந்தப் பெண் மனதில் எத்தனை கேள்விகள் ஓடியிருக்கும்? தலைநகரில் நடந்த கொடூரம் தடம் தெரியாத குக் கிராமங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இதோ இப்போது சென்னைக்கு அருகிலேயே நடந்தேறி இருக்கிறது. அதைக் கண்டும் காணாமலும் நாம் கடந்து கொண்டுதான் இருக்கிறோம். பெண்களைக் காட்டிலும் ஆண்களை மனதாலும், உடலாலும் வலிமையாய் படைத்தது யாரையும் பலாத்காரப்படுத்த அல்ல... பத்திரமாய் பாதுகாப்பதற்கு. சாகப்போகிற கடைசி நிமிஷத்துல கூட, மனசுக்கு பிடித்தவனின் மடியில தலை சாய்க்க நினைக்கிறவர்கள் பெண்கள். அவர்களுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தித் தராத இந்த சமூகத்தின் மீதான அதிரடி பாய்ச்சலாக இருக்கும்.
பரிச்சயமான முகங்கள் யாரும் இல்லையா...
நிறைய திட்டங்கள் இருந்தன. எல்லாவற்றையும் பட்ஜெட்டுக்குள் முடிக்க வேண்டிய கட்டாயம். அதே நேரத்தில் கதையின் தன்மையை புரிந்தவர்கள் துணைக்கு வந்தார்கள். நபிநந்தி, ஷரத் இந்த இருவருமே புதுமுகங்கள்தான். ஆனால், பல ஆண்டுகளாக சினிமாவில் சாதிக்க துடிக்கும் இதயங்கள். நல்ல அறிமுகத்துக்கு காத்திருந்தார்கள். தேடி வந்தார்கள். தகுதிகளும் இருந்தன. சேர்த்துக் கொண்டேன்.
நிகாரிகா, சுவாசிகா இரு நாயகிகளும் நீங்கள் பார்த்த முகம்தான். இருந்தாலும், நல்ல சினிமாவுக்காக காத்திருந்தார்கள். அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறேன். இந்த கதையின் ஓட்டத்துக்கு பிரதான கதாபாத்திரங்கள் ரொம்பவே முக்கியமானவை. அதில் மட்டும் எனக்கு சமரசம் இல்லை. வேல. ராமமூர்த்தி, சங்கிலி முருகன், நான் கடவுள் ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, மாரிமுத்து என எல்லாரும் அறிந்த முகங்கள்தான். எல்லோருக்கும் இந்தப் படத்தில் தனித்துவமான இடங்கள் உண்டு.
வேல. ராமமூர்த்தியின் இடம் ஆச்சரியம் கொள்ள வைக்கும். கவிஞர் சினேகன் - பூனம் கவுர் இருவரும் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்கள். கேரள எல்லையில் உள்ள ஒரு மலை கிராமத்தில் தங்கி படப்பிடிப்பு நடத்தியிருக்கிறேன். வாய்ப்பு தந்த சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் நிறுவனத்துக்கு நன்றி. படத்தை பார்த்ததும் ரிலீஸூக்கு தேதி குறியுங்கள் என நம்பிக்கை வார்த்தை தந்த பிஜிபி எண்டர்பிரைசஸ் பி.ஜி. பிச்சைமணிக்கு ஆயிரம் நன்றிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.