
சா. ஜெயபிரகாஷ்
அந்த ஊரின் எல்லைக்கு நுழையும்போதே நெய் மணக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட பொன்னமராவதியின் தெற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள ஊரான வேந்தன்பட்டியே அந்த ஊர். இங்கு அப்படியென்ன சிறப்பு என்பது குறித்து, சமூக ஆர்வலர் செந்தில் நாகப்பனிடம் பேசியபோது:
'நகரத்தார் என்ற நாட்டுக்கோட்டை செட்டியார்கள் அதிகமாக வாழும் கிராமமான வேந்தன்பட்டியை 'செட்டிநாட்டு ஊர்' என்றே சொல்லலாம். ஆறு கோயில் நகரத்தார் வாழ்கின்றனர். இங்கு வசிப்போர் பெரும் தனவான்களும் சிறந்த கல்வியாளர்களும்தான்.
இங்குள்ள சிவன் கோயிலில் நந்தி எம்பெருமான் நெய் நந்தீஸ்வரராக அருள் பாலிக்கிறார். இவ்வூருக்குள் நுழைந்தவுடன் கண்ணுக்கு தெரிவது நெய் நந்தீஸ்வரர் கோயில்தான்.
112 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வூரைச் சார்ந்த நகரத்தார் பெருமுயற்சியை எடுத்து, பெரும்பணம் சேகரித்து கோயிலைக் கட்டி, நிர்வாகப் பொறுப்பையும் இன்று வரை மேற்கொண்டுள்ளனர். இதுவரை கோயில் ஒன்பதுமுறை கும்பாபிஷேகம் கண்டுள்ளது.
சிவனும் உமாதேவியும் மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரர் என்னும் பெயரில் மூலவர்களாக அருள்பாலிக்கின்றனர். விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட சந்நிதிகள் இருந்தாலும், நெய் நந்தீஸ்வரரே கோயிலின் சிறப்புக் கடவுள்.
கம்பீரமாக வீற்றிருக்கும் நெய் நந்தீஸ்வரரின் மேனி முழுவதிலும் பசு நெய் அப்படியே உறைந்து போயிருக்கிறது. எவ்வளவுதான் நெய் பூசினாலும் இவரது மேனியை ஈ, எறும்பு, பூச்சிகள் எதுவும் நெருங்குவதில்லை. இவரை கவியரசர் கண்ணதாசன் போற்றிப் பாடியுள்ளார்.
வேந்தன்பட்டியிலும், அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் பசுக்கள் வைத்திருப்பவர்கள் பால் கறந்து காய்ச்சி நெய் எடுத்து, நெய் நந்தீஸ்வரருக்கு காணிக்கையாகச் செலுத்திய பிறகுதான் பாலை விற்கவோ சொந்த உபயோகத்துக்கு எடுத்துகொள்ளவோ செய்கின்றார்கள்.
'தன ப்ரியன்' என்ற பெயருடைய நந்திக்கு மக்கள் நெற்றியில் காசுகளை பொட்டுகளாகவும், பண நோட்டுகளை கயிற்றில் கட்டி கழுத்தில் மாலையாகவும் அணிவிக்கின்றனர்.
ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலன்று அதிகாலை 4 மணிக்கு நெய் நந்தீஸ்வரருக்கு 'நந்தி விழா' நடைபெறும். அன்று நெய் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேங்களுடன் முப்பது வகையான மாலைகளால் அலங்கரித்து தீப ஆராதனைகள் நடைபெறும். இந்த அதிசய விழா திருவண்ணாமலையிலும் வேந்தன்பட்டியிலும்தான் நடைபெறுகின்றன.
நெய் நந்தீஸ்வரரின் இரு கொம்புகளுக்கு நடுவே இயற்கையாகவே அமைந்த 'சக்கரம்' ஒன்று உள்ளது. நெய் நந்தீஸ்வரரைத் தரிசிக்க வரும் வெளியூர் பக்தர்களும்கூட கலப்படமில்லாத சுத்தமான பசு நெய் கொண்டு வருகின்றனர்.
நோய்களோ, பிரச்னைகள் தீர்ந்தவுடன் வெங்கல மணியும், பட்டுத்துண்டையும் நெய்-நந்தீஸ்வரருக்கு சார்த்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
நெய் நந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடன்று பசு நெய்யால் அபிஷேகம் செய்வர். அபிஷேகம் செய்த நெய் நந்தீஸ்வரரின் தோற்றம் முழுவதிலும் நிறைந்து தரையில் வழிந்து அப்படியே தேங்கி நிற்கிறது.
மறுநாள் அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து நந்தவனத்தில் உள்ள நெய் கிணற்றில் கொட்டுகின்றனர்.
நெய் கிணற்றின் உள்ளே பல ஆண்டுகளாக நெய் உறைந்து போயிருக்கிறது. இதன் உள்ளே உறைந்திருக்கும் நெய்யில் கூட ஈ, எறும்பு, பூச்சிகள் எதுவும் மொய்ப்பதில்லை'' என்கிறார் செந்தில் நாகப்பன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.