முருங்கைப் பொடியின் மகத்துவம்...

முருங்கையை முக்கிய உணவாகப் பயன்படுத்த தொடங்குவதே உடல் ஆரோக்கியத்தின் மீது நாம் வைக்கும் முதல் அக்கறையாகும்.
முருங்கைப் பொடியின் மகத்துவம்...
Published on
Updated on
2 min read

முருங்கையை முக்கிய உணவாகப் பயன்படுத்த தொடங்குவதே உடல் ஆரோக்கியத்தின் மீது நாம் வைக்கும் முதல் அக்கறையாகும். முருங்கைக் கீரையை பொடியாக்கி இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவில் கலந்து சாப்பிடலாம். தினமும் உள்கொள்வதால் எவ்வித தொந்தரவும் இல்லை. ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத, வலிமையான இளம்தலைமுறைக்கு முருங்கை மிக, மிக முக்கியமான உணவாகும்'' என்கிறார் பசையா ஹிரேமத்.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் 24 ஆண்டுகள் தகவல்தொழில்நுட்பராக இவர் பணியாற்றி, கர்நாடகத்தில் கொப்பள் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு திரும்பியநிலையில் இயற்கைமுறையில் முருங்கை மரங்களை பயிரிட்டுவருகிறார். முருங்கைப் பொடியைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்.

இவற்றை கொப்பள், ராய்ச்சூரு, பாகல்கோட் போன்ற மாவட்டங்களில் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க 'ஊட்டச்சத்து வேள்வி'யை நடத்தி, மத்திய, மாநில அரசுகளின் பாராட்டை பெற்றிருக்கிறார்.

தனது நீண்டநெடிய பயணம் குறித்து பசையா ஹிரேமத் கூறியது:

'கொப்பளில் உள்ள கங்காவதி அருகேயுள்ள பூத்தகும்பா கிராமத்தில், சாதாரண குடும்பத்தில் பிறந்தேன். தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் கலபுர்கியில் டிப்ளமோவும் பெங்களூரில் பி.எஸ்.சி.யும் படித்தேன். பி.இ.எல்., டி.ஆர்.டி.ஓ. போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் பயிற்சி பெற்றேன்.

1993-இல் இன்போசிஸ் நிறுவனத்தில் நெட்வொர்க், சிஸ்டம் பொறியாளராகப் பணியில் சேர்ந்து, அங்கு 2006 வரை பணியாற்றினேன். அமெரிக்கா, ஐரோப்பா, மலேசியா போன்ற பல நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

2006 முதல் 2014 வரை பல்வேறு அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றியபோது, சியாட்டல், கலிபோர்னியா போன்ற நகரங்களில் குடியிருந்தேன். அந்த நிறுவனங்களில் பணியாற்றிய பல அதிகாரிகள் விளைநிலங்களை வைத்து வேளாண்மையில் ஈடுபடுவது தெரியவந்தது. குறிப்பாக, திராட்சையை பயிரிட்டு, அதன் சாற்றை பிழிந்து ஒயினாக மாற்றி விற்பனை செய்வர்.

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் விளைநிலங்களில் வேதிஉரங்களை சேர்க்காமல் விவசாயம் செய்வார்கள். 'நஞ்சில்லா உணவு' என்பதில் அக்கறை காட்டிய அமெரிக்க, ஐரோப்பியர்கள் 20 ஆயிரம் ஏக்கர் வரையில் பெரும்பரப்பில் விவசாயம் செய்கின்றனர். அதற்கு நவீனதொழில்நுட்பங்கள், கருவிகளைப் பயன்படுத்துவார்கள்.

'உலகின் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மாவட்டமாக கொப்பள் இருக்கிறது' என்பதை ஆய்வேட்டில் அறிந்து, வேதனைப்பட்டேன். எனது சொந்த ஊரில் ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் பாதிக்கப்படுவதை எண்ணி என்ன செய்வது என்று யோசித்து, பல ஆய்வேடுகளை வாசித்தேன். அதற்காக பணம் சேர்க்க ஆரம்பித்தேன்.

2012-இல் பெங்களூருக்கு வந்து, தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தைத் தொடங்கி, நடத்தினேன். 'உழைத்தது போதும். சமுதாய நன்மைக்கு எதையாவது செய்ய வேண்டும்' என்ற எண்ணம் மேலிட நண்பர்களின் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தோடு எனது நிறுவனத்தை இணைத்துவிட்டேன். பின்னர், சொந்த ஊருக்குச் சென்றுவிட்டேன்.

குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க அரசு பல முயற்சிகளை எடுத்திருந்தும், எவ்வித பலனும் ஏற்படவில்லை. இதுகுறித்து ஆய்வு செய்தபோது, 'முருங்கை சிறந்த உணவு' என்பதை அறிந்து, இயற்கை வேளாண்முறையில் பயிரிடுவது என்று முடிவெடுத்தேன்.

வேதி உரத்தை பயன்படுத்தாத, இதுவரை விவசாயமே செய்திராத, அக்கம்பக்கத்தில் விவசாயம் மேற்கொள்ளாத நிலத்தை தேடினேன். ஓராண்டு முயற்சிக்குப் பின்னர், கொப்பள் மாவட்டத்தில் குஷ்டகியில் 2015-இல் 30 ஏக்கர் நிலம் கிடைக்க, அதை வாங்கினேன். தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றவும், விவசாயிகளின் வருமானத்தை மதிப்புக்கூட்டு விளைபொருள்களால் அதிகரிக்கவும் முழுவீச்சில் விவசாயத்தில் ஈடுபட தொடங்கினேன்.

முதல்கட்டமாக நான் வாங்கியிருந்த நிலத்தைப் பண்படுத்தி, 5 ஏக்கரில் இயற்கை வேளாண்முறையில் முருங்கையை பயிரிட்டேன். எதிர்பார்த்த விளைச்சலும் கிடைத்தது.

'முருங்கையில் கால்சியம், மெக்னீஷியம், இரும்புத் தாதுக்கள், வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள், புரதம், நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு ஊட்டங்கள் அதிக அளவில் உள்ளன. ஆனால், முருங்கைக் காய், பூ, பிசின், விதை போன்றவற்றில் 10 சதவீதம் சத்துகள் மட்டுமே உள்ளன. கீரையாகச் சமைத்து உண்பதைக்காட்டிலும், கீரையைப் பொடியாக உட்கொண்டால் மட்டுமே 75 சத ஊட்டச்சத்துகள் கிடைக்கும்' என்பதை அறிந்தேன்.

'நந்தி இயற்கை வேளாண்மை இல்லம்' என்ற நிறுவனத்தைத் தொடங்கி, முருங்கையை அறிவியல்ரீதியாக உலர்த்தி, பொடியாக்கி, சிப்பமாக்கி முதன்முதலில் பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பிவைத்தேன். பின்னர், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தேன்.

மூன்று ஆண்டுகள் போராடி இந்திய அரசின் தரச் சான்றிதழை பெற்றேன். மேலும், அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளின் தரச்சான்றிதழ்களையும் பெற்றுள்ளேன்.

2021-இல் கொப்பள் மாவட்ட ஆட்சியராக இருந்த விகாஷ்கிஷோர் ஷிரோல்கரின் ஆதரவில், மாவட்டத்தில் அங்கன்வாடியில் இருந்த ஆறு மாதங்கள் முதல் ஆறு வயது வரையுள்ள ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மட்டும் முருங்கை கீரைப்பொடி வழங்கப்பட்டது. மூன்று மாதங்களில் ஊட்டச்சத்து மேம்படும் என்று கூறியிருந்தேன். ஆனால், ஒருமாதத்திலேயே ஊட்டச்சத்து மேம்பட்டு, குழந்தைகள் உற்சாகமாக இருப்பதை சுகாதாரத் துறையினர் உறுதி செய்தனர்.

ராய்ச்சூரு, பாகல்கோட் மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கும் முருங்கைப்பொடி வழங்கி வழங்கப்பட்டது. ஒருநாளைக்கு 5 கிராம் அளவுக்கு தான் முருங்கைப்பொடி தரப்பட்டாலும், அதில் கிடைத்த நன்மை ஊக்கப்படுத்துவதாக அமைந்தது. இதுவரை 3 லட்சம் குழந்தைகளுக்கு இலவசமாக முருங்கை சத்துப்பொடியை அளித்துள்ளோம். தற்போது ஊட்டச்சத்து உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் முருங்கை சத்துப்பொடி வழங்கப்படுகிறது.

தற்போது பெல்லாரி மாவட்டத்திலும் முருங்கை சத்துப்பொடியை தர தொடங்கியுள்ளோம்.

ஆண்டுக்கு 100 டன் முருங்கைக் கீரையை உற்பத்திசெய்து வருகிறேன். இன்னும் தேவை அதிகம் இருக்கிறது. ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்காவில் முருங்கையை விரும்பி சாப்பிடும் காலம் வந்துள்ளது. ஆனால், இந்தியாவில் முருங்கையை கண்டுகொள்வதே இல்லை. இந்த நிலை மாற வேண்டும்'' என்கிறார் பசையா ஹிரேமத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com