'புதிய மருத்துவப் பொருளானது சிறுநீரகப் பையை நிலைநிறுத்துவதோடு, குடல் இறக்கம் போன்ற பாதிப்புகளுக்குத் தீர்வாகவும் இருக்கும். ஆகவே, மருத்துவப் பயன்பாட்டில் பல பிரச்னைகளுக்குரிய தீர்வுக்கு எதிர்காலத்தில் பயன்படலாம். தொடர்ந்து மகளிருக்கான உடல் நலம் காக்கும் ஆய்வில் ஈடுபடவுள்ளேன்' என்கிறார் ப்ரீத்தி அருள்முருகன்.
காரைக்காலைச் சேர்ந்த முப்பது வயதான ப்ரீத்தி அருள்முருகன், மும்பையில் உள்ள இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் (ஐ.ஐ.டி.) ஆராய்ச்சி மாணவி. கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் நடத்திய ஆய்வின் பயனாக மகளிருக்கான முக்கியப் பிரச்னைக்கு தற்காலிகமான தீர்வு கிடைத்துள்ளது.
பெண்களில் பெரும்பாலானோருக்கு மாதவிடாய் காலம் முடிந்தவுடன் சிறுநீர் தானாகவே வெளியேறும் பாதிப்பு உண்டு. இதை 'சிறுநீர் அடங்காமை' என்கின்றனர்.
இந்தப் பாதிப்பானது 35 சதவிகிதம் பேருக்கு உள்ளது. இதற்கான சிகிச்சையில் வலை போன்ற புதிய மருத்துவப் பொருளை ப்ரீத்தி அருள்முருகன் கண்டறிந்து காப்பீடு உரிமை
பெற்றிருக்கிறார். அவரது ஆராய்ச்சிக்காக, சிறப்பு நிதியாக ரூ.1 கோடியை மத்திய அரசு வழங்கியிருக்கிறது.
புதுச்சேரி அண்மையில் வருகை தந்த ப்ரீத்தியும் துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் முதல்வர் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் உள்ளிட்டோரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இதுகுறித்து அவரிடம் பேசியபோது:
'எனது சொந்த ஊர் காரைக்கால் கே.எம்.ஜி.நகர். அப்பா அருள்முருகன் பொறியாளர். அம்மா சுமதி குடும்பத் தலைவி. எனது சகோதரி பகவத்கீதா, மருத்துவம் படிக்கிறார். நான் காரைக்காலில் தனியார் பள்ளியில் கல்வி கற்றேன். அஸ்ஸாம் மாநிலம் கெளகாத்தியில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் உயர்கல்வியைத் தொடர்ந்தேன்.
அங்கு படிக்கும்போது எலும்பு மறுவுருவாக்கம் குறித்த ஆய்வை மேற்கொண்டேன். ஐ.ஐ.டி. உயர்கல்வியை முடித்தவுடன் ஆய்வுப் படிப்புக்காக (பி.எச்.டி.) மும்பை ஐ.ஐ.டி.யில் சேர்ந்தேன். பேராசிரியர் ஜெய்ஸ் பெல்லாரி வழிகாட்டலின்படி, புதிய கண்டுபிடிப்புக்கான முயற்சியில் ஈடுபட்டேன்.
மகளிருக்கு 45 வயது முடிந்ததும், மாதவிடாய் முடிந்த நிலையில் சிறுநீர் வெளியேறும் பாதிப்பை அறிந்து அதற்கு தீர்வு காணவேண்டும் என நினைத்தேன். அதன்படியே எனது ஐ.ஐ.டி. ஆய்வையும் மேற்கொள்ளத் திட்டமிட்டேன். ஆனால், பாதிப்பை நீக்கும் ஆய்வை விட அந்தப் பாதிப்புக்கான சிகிச்சையில் ஏற்படும் நடைமுறைச் சிக்கலை முதலில் தீர்க்கவேண்டும் என நினைத்து அதற்குரிய ஆய்வில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளேன்.
சிறுநீர் தானாக வெளியேறும் பாதிப்புக்குள்ளான மகளிருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் சிறுநீரகத்தை அதன் இடத்தில் நிலைநிறுத்தும் வகையில் வலை போன்ற அமைப்பை உள்ளே வைத்து தைத்துவிடுவர். அந்த வலை அமைப்பானது நெகிழி போன்றவற்றால் ஆனவையாக இருக்கின்றன. அதனால், வேற்றுப் பொருளை எப்போதும் ஏற்காத நமது உடல், வலை அமைப்பையும் ஏற்காமல் எதிர்வினையாற்றும். மேலும், அந்த அமைப்பு உறுப்பின் மற்ற பகுதிகளையும் பாதிக்கும் நிலையும் உள்ளது.
ஆகவே, ஒரு நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று, அதன்மூலம் பல உடல் பாதிப்புகள் ஏற்படும் நிலையில் மகளிர் அவதிப்படுவதை தடுக்க முதலில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டேன்.
2019 ஆம் ஆண்டு முதல் ஆய்வை மேற்கொண்டு தற்போது 'பெல்விக் ப்ளோர்மெஸ்' எனும் வேதிக் கூட்டு பொருள்களாலான வலை போன்ற பொருளை கண்டறிந்துள்ளேன். அப்பொருளானது 45 செ.மீ. நீளமும், .5 மி.மீ. தடிமனும் கொண்டதாக இருக்கிறது.
சிறுநீரகப் பையின் கீழ் அதை வைத்து தைத்துவிட்டால், ஓராண்டில் அந்த வேதிப் பொருள் வலை அமைப்பின் மீது உடல் தசைகளும் வளர்ந்துவிடும். அதன்பின் வேதிப் பொருள் கரைந்து உடலில் கலந்துவிடும். அதனால் எந்தவிதப் பிரச்னையும் ஏற்படாது.
ஏற்கெனவே சிறுநீர் வெளியேறும் பாதிப்பு சிகிச்சையில் வலைதள அமைப்பாக நெகிழிப் பொருள் பயன்படுத்தும் செலவைவிட தற்போதைய வேதிப்பொருள் கூட்டு வலைதள பொருளுக்கான செலவு குறைவாக இருக்கும். அத்துடன் பக்கவிளைவுகளின்றி உடலுடன் சேர்ந்துவிடுவதால் விரைவில் குணமடையும் நிலை ஏற்படும்.
இந்தப் புதிய கண்டுபிடிப்பை இந்திய காப்பீடு நிறுவனம் தற்போது அங்கீகரித்து, சான்றும் வழங்கியுள்ளது. அதன்படி இந்தப் புதிய வலைதள சாதனத்துக்கு மும்பை ஐ.ஐ.டி. நிர்வாகம், பேராசிரியர் ஜெய்ஸ் பெல்லாரி மற்றும் நான் (ப்ரீத்தி அருள்முருகன்) ஆகியோர் உரிமையாளராகவும் சான்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனது ஆய்வுக்கு முன்களமாக மும்பை, புதுதில்லி, தமிழகம், கேரளம், புதுவை உள்ளிட்ட பல மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களை சந்தித்துப் பேசியுள்ளேன். அவர்களின் கருத்துகளைத் தொகுத்து மகளிருக்கான சிறுநீரகப் பையால்
ஏற்படும் பிரச்னைக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பொருளை புதிதாக உருவாக்கியுள்ளேன்.
புதிய கண்டுபிடிப்பான மருத்துவப் பொருள் தற்போது விலங்குகளில் பொருத்தி வெற்றிகரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. மனிதருக்குள்ளும் பொருத்தி பரிசோதனை முடிந்துள்ளது. 2028இல் இந்தச் சாதனம் மருத்துவப் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
புதிய மருத்துவப் பொருளானது சிறுநீரகப் பையை நிலைநிறுத்துவதற்காக மட்டுமின்றி குடல் இறக்கம் போன்ற பாதிப்புகளுக்காளானதாகவும் இருக்கும். ஆகவே, மருத்துவப் பயன்பாட்டில் பல பிரச்னைகளுக்குரிய தீர்வுக்கு எதிர்காலத்தில் பயன்படலாம். தொடர்ந்து மகளிருக்கான உடல் நலம் காக்கும் ஆய்வில் ஈடுபடவுள்ளேன்' என்கிறார் ப்ரீத்தி அருள்முருகன்.
படங்கள்கி.ரமேஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.