பதினேழு ஆண்டுகள் (அதாவது சரியாகச் சொல்ல வேண்டுமானால் 6,256 நாள்கள்; 90,08,640 நிமிஷங்கள்) காத்திருப்புக்குப் பின்னர் ஜாம்பவான் விராட் கோலியின் ஐ.பி.எல். சாம்பியன் கனவு நனவாகி உள்ளது.
உலகெங்கும் அதிக பார்வையாளர்களை ஈர்த்துள்ள 'இந்தியன் ப்ரீமியர் லீக்' எனப்படும் ஐ.பி.எல். தொடர் கடந்த ஒன்றரை மாதங்களாக கோலாகலமாக நடைபெற்று வந்தது.
கடந்த 3ஆம் தேதி இரவு அகமதாபாதில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவரான விராட் கோலி பெங்களூரு அணியின் ஆரம்ப காலம் முதலே அங்கம் வகித்து ஆடி வருகிறார்.
ஒரே அணியில்...: ஐ.பி.எல். தொடர் தொடங்கப்பட்ட போது, பெங்களூரு அணியில் இணைந்த கோலி 18 ஆண்டுகளாக ஒரே அணியில் நீடித்து வருகிறார். சென்னையில் தோனி, மும்பையில் ரோஹித் சர்மா, மணிஷ் பாண்டே உள்ளிட்டோர் 18 ஆண்டுகளாக ஒரே அணியில் நீடிக்கும் இதர வீரர்கள் ஆவர்.
பெங்களூரு அணியின் பல வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்த கோலியின் சிறப்பாக ஆட்டத்தால் 2016இல் இறுதிக்கு தகுதி பெற்றது பெங்களூரு. ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 8 ரன்களில் தோற்று பட்ட வாய்ப்பை இழந்தது.
மும்மூர்த்திகள் கெயில், கோலி, டி வில்லியர்ஸ்...: ஆர்.சி.பி. அணியின் வளர்ச்சிக்கு மும்மூர்த்திகளான விராட் கோலி, கிறிஸ் கெயில், டி வில்லியர்ஸ் ஆகியோரின் பங்களிப்பு அபரிதமானது. மூவரின் அற்புதமான ஆட்டத்தால் உருவானது பெங்களூரு அணி. முதன்முறையாக வென்ற பட்டத்தை சக வீரர்கள் கெயில், டி வில்லியர்ஸூக்கு அர்ப்பணிப்பதாக கோலி கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கோலியின் கோப்பைகள்: 19 உலகக் கோப்பை 2008, ஒருநாள் உலகக் கோப்பை 2011, சாம்பியன்ஸ் கோப்பை 2013, 2025, பல ஆசியக் கோப்பைகள், டி 20 உலகக் கோப்பை 2024, ஐசிசி டெஸ்ட் மேஸ் 3 முறை என பல்வேறு ஐசிசி கோப்பைகள் கோலியின் அலமாரியை அலங்கரித்தாலும், பல ஆண்டுகளாக ஒரு கோப்பை ஐ.பி.எல். கோப்பை அதில் இடம் பெறாமல் நெருஞ்சி முள்ளை போல் இருந்தது.
அந்த குறையும் நீங்கியுள்ளது. ஐ.பி.எல். கோப்பையை இறுதியாக கோலியின் அலமாரியில் இடம் பெற்று விட்டது. பெங்களூரு அணி முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற கோலியின் விடா முயற்சி, பொறுமை பேரூதவியாக இருந்தது.
ஐ.பி.எல். தொடரில் 8,661 ரன்களுடன் இரண்டாம் இடம், 8 சீசன்களில் 500க்கு மேற்பட்ட ரன்கள், 267 ஐபிஎல் ஆட்டங்கள், ஐ.பி.எல். பிளே ஆஃப்பில் 10 முறை ஆடியது, 4 முறை ஃபைனல், அதிக சதம் 8, அரைசதம் 63, அதிக ரன்கள் 2016973, பவுண்டரிகள் 771 என பல்வேறு சாதனைகள் கோலி வசம் உள்ளது.
2008 முதல் 17 ஆண்டுகள், 6256 நாள்கள், 90,08,940 நிமிஷங்கள் காத்திருந்த கோலியின் பொறுமைக்கு தற்போது பரிசு கிடைத்துள்ளது. அவரது நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது.
'மேஜிக் 18': அணியில் விராட் கோலியின் சீருடை எண் 18 ஆகும். 18ஆவது சீசனில் 18 எண் சீருடையுடன் கோலி பட்டம் வென்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.