'எந்த வயதிலும் கல்வி கற்கலாம்'' என்கிறார் எழுபத்து இரண்டு வயதான மனநல மருத்துவர் கர்ரி ராமரெட்டி.
இவர் மூன்று முனைவர் பட்டங்கள், 11 சான்றிதழ்கள் உள்பட 61 பட்டங்களைப் பெற்றுள்ளார். எட்டு முறை முதலிடம் பிடித்ததோடு, ஒவ்வொன்றிலும் "எலைட் பிளஸ்' எனப்படும் வெள்ளி அல்லது தங்கத் தர மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
1954 ஆகஸ்ட் 1-இல் ஆந்திர மாநிலத்துக்கு உள்பட்ட ராஜமஹேந்திரவரத்தில் பிறந்து, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அனபர்த்தி என்ற சிறிய நகரத்தில் வளர்ந்த ராமரெட்டியின் பயணம் இடைவிடாத அறிவு தேடலாகும். மருத்துவப் படிப்பு நிறைவானதும், பெங்களூரில் உள்ள தேசிய மனநலம், நரம்பியல் நிறுவனத்தில் (நிம்ஹான்ஸ்) சேர்ந்து, எம்.டி. பட்டம் பெற்றார்.
குடியரசுத் தலைவர் விருது, டாக்டர் பி.சி. ராய் விருது போன்ற விருதுகளைப் பெற்றவர். அவரது 61 பட்டங்களில் ஐந்து முதுகலை சட்டப் படிப்பில் பெற்ற பட்டங்கள் அடங்கும். அவரது மூன்று முனைவர் பட்டங்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள தாமோதரம் சஞ்சீவய்யா தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் ஒரு பட்டமும், புணேவில் உள்ள ஸ்ரீ பாலாஜி வித்யாபீடத்தில் யோகா பிரிவில் ஒரு முனைவர் பட்டமும், பாரதியார் பல்கலைக்கழகத்தில் கல்வியில் மூன்றாவது முனைவர் பட்டமும் அடங்கும்.
'நீங்கள் ஆர்வமாக இருக்கும் வரை, ஒவ்வொரு நாளும் நல்ல சந்தர்ப்பங்களை புதிய வாய்ப்பாக மாற்றலாம். ஆர்வம் இருந்தால் எந்த வயதிலும் கற்றுக் கொள்ளலாம். எனக்கும் எனது அறிவு தேடலுக்கும், ஆர்வத்திற்கும் இடையில் வயது தடையாக உருவாக நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். என் பெற்றோர், என் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர். சிறு வயதிலிருந்தே நிறைய வாசிப்பேன். வாழ்க்கையில் உண்மையான வெற்றி அறிவைத் தேடுவதில் உள்ளது. ஒருவர் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம். எதை வேண்டுமானாலும் படிக்கலாம். அறிவு உயர்த்தும். அது தாய் நாட்டின் மேம்பாட்டுக்கு உதவும்.
அடுத்ததாக என்ன படிக்கலாம் என்று யோசித்து வருகிறேன். அறிவு தேடலை நிறுத்த உத்தேசம் இல்லை. ஒருவர் கற்றலை விரும்பினால், வாழ்க்கையே வகுப்பறையாக மாறும். அதனால் கடைசி மூச்சு இருக்கும் வரை கற்க விரும்புகிறேன். நான் ஒவ்வொரு நாளும் ஐந்து மணிநேரம் படிப்பதில் வாசிப்பதில் அர்ப்பணிக்கிறேன்'' என்கிறார் கர்ரி ராமரெட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.