
உலக அளவில் கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றக் கூடிய எல்லா பிரிவு ரத்தத்துக்கும் பொருந்தக் கூடிய புதிய வகை செயற்கை ரத்தத்தை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
அறுவைச் சிகிச்சைகள், விபத்துகள், பிரசவம், புற்றுநோய் சிகிச்சைகளின்போது நோயாளியின் உயிரைக் காக்க ரத்த மாற்றம், ரத்தம் செலுத்துதல் மிகவும் அவசியமாகிறது. ரத்த வங்கிகளில் பெரும்பாலும் ரத்தம் இருப்பு குறைவாகவே இருக்கும்.
தேவைப்படுகிற அல்லது அரிய வகை ரத்தப் பிரிவு உடனே கிடைக்காது. உலக நாடுகளில் அனைவரும் ரத்தத் தானம் செய்வதில்லை என்பதால், ரத்தப் பற்றாக்குறை அனைத்துக் காலத்திலும் இருக்கும். அதனால்தான் நோயாளியின் உறவினர்கள், நண்பர்களை நோயாளிக்காக ரத்தம் ஏற்பாடு செய்ய கூறுகின்றனர். ரத்தம் கிடைக்க காலதாமதமானால், நோயாளிக்கு ஒவ்வொரு நொடியும் அபாயமானதாக அமையும்.
அவசரக் காலங்களில் ரத்தம், குறிப்பிட்ட பிரிவு ரத்தம் கிடைக்காமல் உலகம் எங்கும் மக்கள் அவதிப்படுகின்றனர். ரத்த வங்கிகளாலும் ரத்தத் தேவையைச் சமாளிக்க முடிவதில்லை. இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில், ஜப்பானின் நாரா மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தில், பேராசிரியர் ஹிரோமி சகாய் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் நீல நிற செயற்கை ரத்தத்தை உருவாக்கிப் பரிசோதித்து வருகின்றனர்.
இது அனைத்து ரத்த வகைகளுக்கும் சேரும். வழக்கமான தானமாக வழங்கப்படும் ரத்தத்தின் ஆயுள் ஒன்றரை மாதம் வரைதான். ஆனால் செயற்கை ரத்தத்தின் ஆயுள் 2 ஆண்டுகள் என்கின்றனர்.
செயற்கை ரத்தம் ஹீமோகுளோபினை பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. ஹீமோகுளோபின் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ரத்த சிவப்பணுக்களின் ஒரு பகுதியாகும். தானம் செய்யப்பட்டு காலாவதியான ரத்தத்திலிருந்து ஹீமோகுளோபினை விஞ்ஞானிகள் சேகரித்து, வைரஸ் எதிர்ப்பு கவசத்தில் வைத்து, அதன் ஆயுளை அதிகரிக்கின்றனர். அறை வெப்ப நிலையில் இரண்டு ஆண்டுகள் வரை செயற்கை ரத்தம் கெடாமல் இருக்கும். காலாவதியான ரத்தத்துக்கு ஒருவிதத்தில் மறுசுழற்சி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
சுவாரசியமாக, இந்தச் செயற்கை ரத்தம் சிவப்பு நிறத்தில் இல்லாமல் நீல நிறத்தில் உள்ளது. அதற்குக் காரணம் அதை உருவாக்கப் பயன்படுத்தப்படும் பொருள்களும் அது ஆக்சிஜனுடன் வினைபுரியும் விதமும்தான் காரணம் .
பேராசிரியர் சகாய், சூவோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தெருயுகி கோமாட்சு உள்ளிட்டோர் செயற்கை ஆக்சிஜன் கொண்டு செல்லும் செல்களை உருவாக்கி வருகின்றனர். இவை ரத்த பிளாஸ்மாவில் உள்ள பொது புரதமான அல்புமினை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன, இந்தச் செல்கள் உடல் முழுவதும் ஆக்சிஜனை எடுத்துச் செல்ல உதவுகின்றன.
தற்போது, செயற்கை ரத்த ஆராய்ச்சிக் குழு, தன்னார்வலர்கள் உடலில் 100 மி.லி. முதல் 400 மி. லி செயற்கை ரத்தம் செலுத்தி எவ்வாறு உள்ளுறுப்புகள் வேலை செய்கின்றன என்று சோதனைகளை நடத்தி வருகிறது. எந்தப் பிரச்னைகளையும் உறுதி செய்யப்படாவிட்டால் 2030-இல் இருந்து ஜப்பான் மருத்துவமனைகளில் செயற்கை ரத்தத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள். அதன் பிறகு, செயற்கை ரத்த தொழில்நுட்பம் உலக நாடுகளுக்கும் பரவும். பின்னர், செயற்கை ரத்தத்தை எவ்வளவு வேண்டுமானாலும் தேவைக்கு ஏற்றது போல மருந்துக்கடைகளில் உடனே வாங்கிவிடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.