
'சங்கமித்திரை' என்ற பெயரில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள 'ஃபெதெர்ஸ்' நட்சத்திர ஹோட்டலில் இயங்கிவரும் உணவகத்தில், தமிழ் கலாசாரத்தின் பாரம்பரிய உணவு வகைகள் பிரபலம். காவிரி முதல் கடாரம் வரையிலான தமிழ் உணவு வகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, 'சங்கமித்திரை' உணவகத்தின் தலைமை செஃப் மூர்த்தி இயங்கிவருகிறார்.
'அயலகம்' என்ற உணவுத் திருவிழா இங்கு அண்மையில் நடைபெற்றபோது, சிங்கப்பூரைச் சேர்ந்த உணவுக் கலை நிபுணர் தேவகி சண்முகம் பங்கேற்றார்.
ஆசியாவின் பிரபல உணவு நிபுணரான அவர், 'ருசி ராணி', 'ஸ்பைஸ் குயின்' என்றே சிங்கப்பூர்வாசிகள் அழைக்கின்றனர்.
அவரிடம் பேசியபோது:
'எனதுஅப்பாவுக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை. பத்து வயதிலேயே சிங்கப்பூர் வந்துவிட்டார். அம்மா பெயர் அஞ்சலை. அவர் சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்தவர். அப்பா சிங்கப்பூரின் 'தமிழ் முரசு' நாளிதழில் வேலை பார்த்தார். பெற்றோருக்கு ஏழு குழந்தைகள். நான் மூத்த மகள்.
1965-இல் அப்பாவுக்கு வேலை போய்விட்டதால்,, குடும்பத்தில் வறுமை அதிகமானது. அப்போது, உணவுக்குக் கஷ்டப்படும் குடும்பங்களுக்கு ஐ.நா. சபையின் சார்பில் பால் பௌடர், கோதுமை, ஸ்பகடி, சோயாபீன், சோளம் போன்றவற்றை கொடுத்து உதவுவார்கள். எனது அம்மாவுக்கு அவற்றை வைத்து, தனக்குத் தெரிந்த வகையில் சமைத்துகொடுப்பதை நாங்கள் சாப்பிடுவோம்.
அக்கம்பக்கத்து வீடுகளில் விதவிதமாகச் சாப்பிடுவதைப் பார்த்து நாமும் சாப்பிட வேண்டும் என்கிற ஆசை ஏற்படும். இருக்கும் பொருள்களைக் கொண்டு நாங்களே விதவிதமாகச் சமைத்து சாப்பிட ஆரம்பித்தோம். பத்திரிகைகளில் வெளியாகும் உணவுக் குறிப்புகள், அவற்றுக்கான படங்களைக் கத்தரித்து, சேகரித்து வைக்கத் தொடங்கினேன்.
எங்கள் வீட்டில் அப்பா கூட நன்றாக சமைப்பார். அப்பாவின் சமையலில் ஒரு ஒழுங்கு இருக்கும். சமையல் செய்யும்போது தவறு செய்துவிட்டால் தலையில் அழுத்தமாக குட்டு விழும். நான் அப்படி வாங்கிய குட்டுகள்தான் அதிகம்.
குடும்ப வருவாய்க்காக, பள்ளியில் எழுத்தர் பணிக்குச் சேர்ந்தேன். நான் நன்றாகச் சமைப்பேன் என்பதால், என் மதிய உணவை ருசிபார்க்கும் சக ஊழியர்கள் என் சமையல் திறமையை மிகவும் பாராட்டுவார்கள். அதன் பலனாக பள்ளி விழாக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் வீட்டு பிறந்தநாள் விழாக்கள் போன்ற சமயங்களில் உணவு சமைத்து கொடுக்கத் தொடங்கினேன்.
திருமணத்துக்குப் பிறகு என் கணவரோ, வேலையை ராஜிநாமா செய்துவிட்டு முழு நேரமாக சமையல் வகுப்புகள் எடுக்குமாறு ஊக்கம் அளித்தார். அதன்படியே செய்தேன். குடும்ப விழாக்களுக்கு உணவு தயாரித்தும் கொடுத்தேன். பத்திரிகைகளில் சமையல் கலை குறித்த தொடர் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது. அதனால், என் வகுப்புகளில் அதிகம் பேர் சேர ஆர்வம் காட்டினர். சமையல் ஆர்டர்களும் அதிகரித்தன.
என் திறமையை மேலும் வளர்த்துகொள்வதில் ஆர்வம் காட்டினேன். நிறைய ஹோட்டல்களுக்குச் சென்று விதவிதமான உணவுவகைகளை ருசி பார்ப்பேன். அதை எப்படி தயாரிக்கிறார்கள் என்று கேட்பேன். சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்றால், நூலகங்களுக்குச் சென்று தகவல்களைத் சேகரிப்பேன். இப்படி ருசி பார்ப்பது, புதுமையான உணவு வகைகளை செய்து பார்ப்பது, சமையல் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வது என்று என் நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன.
கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இந்திய மசாலாக்களின் ருசி, மருத்துவ மகிமையை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு நல்ல ஹோட்டல் ஒன்றை ஆரம்பிக்க , நான் ஆசை ஆசையாய் கட்டிய வீட்டை விற்று 'ஸ்பைஸ் குயின்' என்ற பெயரில் உணவகம் ஒன்றை சிங்கப்பூரில் ஆரம்பித்தேன். நல்ல வரவேற்பைப் பெற்றதால், என்னையே 'ஸ்பைஸ் குயின்' என்று அழைக்க ஆரம்பித்தார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மசாலா வியாபாரத்தில் நஷ்டம் வந்தது. அதோடு என் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், உணவகத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் விற்றுவிட்டேன்.
'பனானா லீப் டெம்ப்டேஷன்' எனும் முதல் நூலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. புகழ் கிடைத்ததால், 22 சமையல் புத்தகங்களையும் எழுதினேன். அவற்றில் மூன்று புத்தகங்களுக்கு சர்வதேச அளவில் பரிசு கிடைத்திருக்கிறது.
உணவு ஆலோசகராக புதிய அவதாரம் எடுத்தேன். சமையல் குறித்த கருத்தரங்குகளை நடத்தினேன். சிங்கப்பூர், மலேசியா,இலங்கை, ஜப்பான்,இந்தோனேஷியா போன்ற ஆசிய நாடுகளில் இருக்கும் மிகப் பெரிய நட்சத்திர உணவகங்களின் சமையல் நிபுணர்களுக்கு உணவைப் புதுவிதமாக மேம்படுத்துவது என்பதை சொல்லிக் கொடுத்தேன்.
காதலர் தினம், புத்தாண்டு போன்ற நாட்களில் ஒவ்வொரு ஸ்டார் ஹோட்டல்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் உணவை தயார் செய்து கொடுப்பது பிஸியாகிவிட்டேன்.
2004-இல், சுனாமியின்போது, என் கையிருப்பையும், நன்கொடை வசூல் செய்தும் இலங்கைக்கு சென்று பத்து நாள்கள் தங்கி, பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று அங்கிருந்த மக்களுக்கு சமைத்துப் போட்டதே எனக்கு மிகுந்த மன நிறைவை அளித்தது.
நான் ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தவள். இன்று வசதியும் பெயரும், புகழும் வந்துவிட்டாலும் என் இளமைப் பருவ ஏழ்மையை நான் மறக்க மாட்டேன். வெட்கப்படவும் மாட்டேன். முறைப்படி சமையல் கலை படிப்பு ஏதும் படிக்காதவள். ஆனாலும் என் சுய திறமை, கடுமையான உழைப்பு, தணியாத ஆர்வத்தைக் கொண்டு சாதித்துள்ளேன்.
இவற்றையெல்லாம் நினைக்கும்போது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது'' என்கிறார் தேவகி சண்முகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.