மும்மதம் கலந்த கட்டடக் கலை

ஆங்கிலேயர்கள் ஒவ்வொரு நாட்டையும் கைப்பற்றியவுடன் அந்தந்த நாடுகளுக்கேற்ப கட்டடக் கலையை வடிவமைத்தனர்.
மும்மதம் கலந்த கட்டடக் கலை
Published on
Updated on
3 min read

ஆங்கிலேயர்கள் ஒவ்வொரு நாட்டையும் கைப்பற்றியவுடன் அந்தந்த நாடுகளுக்கேற்ப கட்டடக் கலையை வடிவமைத்தனர். இந்தியாவிலும் அவர்கள் தனித்துவமாக உருவாக்கப்பட்ட கட்டடக் கலையே 'இந்தோ - சராசெனிக் கட்டடக் கலை'.

முகலாயர் கட்டடக் கலை, ஆங்கிலேயக் கட்டடக் கலை, உள்ளூர் கட்டடக் கலை ஆகிய மூன்றும் கலந்த இந்தக் கட்டடக் கலை முதல் முதலில் சென்னையில்தான் வடிவமைக்கப்பட்டது. பின்னரே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவியது.

சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடம், பாரிமுனையிலுள்ள பழைய பாரத ஸ்டேட் வங்கி அலுவலகம், எழும்பூர் ரயில்வே கட்டடம், பொதுப்பணித் துறை பின்புறமுள்ள கட்டடம், தஞ்சாவூர் அருங்காட்சியகம் (பழைய ஆட்சியரகம்), தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை வளாகத்திலுள்ள கண் மருத்துவத் துறை கட்டடம் உள்ளிட்ட கட்டடங்கள் 'இந்தோ - சராசெனிக்' முறையில் கட்டப்பட்டவை.

இதுகுறித்து தஞ்சாவூரைச் சேர்ந்த மூத்தக் கட்டடப் பொறியாளரும், இந்து சமய அறநிலையத் துறையின் தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, விழுப்புரம் ஆகிய மண்டலங்களின் சுற்றுச்சூழல் குழு உறுப்பினரும், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி.) உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களின் வருகைதரு பேராசிரியருமான எஸ். ராஜேந்திரன் கூறியது:

'ஆங்கிலேயர்களுக்கு நம்முடைய கட்டடக் கலை பிடித்திருந்தது. அவர்கள் தங்களுடைய கட்டடக் கலையுடன் இங்குள்ள கட்டடக் கலையையும் சேர்த்து, 'இந்தோ - சராசெனிக்' என்ற புதிய கட்டடக் கலையை உருவாக்கினர். முகலாயர், ஆங்கிலேயர், உள்ளூர் ஆகிய மூன்றும் கலந்த இந்தக் கலையை 'மும்மதம் கலந்த கட்டடக்கலை' என்றே கூறலாம்.

ஆங்கிலேயர்கள் தங்களுடைய வரைபடத்தை வைத்து, நம்மூர் கட்டடக் கலைஞர்களைக் கொண்டு வடிமைத்த இந்தக் கலையால், நம்முடைய கலைஞர்களும் கட்டுமானத் திறனை மேம்படுத்திக் கொண்டனர்.

இந்தக் கலையில் கட்டடத்தின் உச்சியிலுள்ள குவிமாடம் கூம்பு வடிவத்தில் இருக்கும். தஞ்சாவூர் அருங்காட்சியகத்தின் (பழைய ஆட்சியரகம்) முகப்பில் உச்சியிலுள்ள குவிமாடம் வெங்காய வடிவத்தைவிட சற்று வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கும். வளைவுகள் கூராகவும், வளைவு, வளைவாகவும் இருக்கும்.

பொதுவாக, வளைவுகள் சுண்ணாம்பு, கற்களை வைத்து கட்டுவது வழக்கம். இந்த வளைவுகள் அனைத்தும் கருங்கல்லில் செய்து தூக்கி வைக்கப்பட்டுள்ளது. முகலாயர் கட்டடக் கலையிலிருந்து ஆங்கிலேயர் கட்டடக் கலையைக் கலக்கும்போது இந்தச் சிறப்பம்சங்கள் இடம்பெற்றன.

தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் மாடிக்குச் செல்வதற்கான படிக்கட்டுகள் மையப் பகுதியில் இருக்கும். அடுத்து மேல் மாடிக்குச் செல்லும்போது தனியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சுழல் வடிவில் உள்ள இந்தப் படிக்கட்டுகள் நிறைய கணக்கீடுகள் செய்து, வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை அமைக்கச் சிறந்த வடிவமைப்புச் சிந்தனை தேவை.

இந்தக் கட்டடத்தில், முகலாயர் கட்டடக்கலையின் அடையாளமாக வளைவுகள் முக்கியமானவை. இந்த வளைவுகள் அனைத்திலும் மேலே கருங்கல்லை வைத்து நிறைவு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல, தூண்கள் நிறைய இருக்கின்றன. பக்கவாட்டிலும் ஸ்தூபி வடிவில் தூண்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஜன்னல்களில் கொடுங்கை இருக்காது. அதற்கு பதிலாக நிழற்கூரை போன்ற வளைவான அமைப்பு சுவருக்குள் அழுந்திருக்கும். ஜன்னல்களில் தற்போது காணப்படும் நிழற்கூரை பிற்காலத்தில் பொருத்தப்பட்டது.

ஆங்கிலேயர் கட்டடக்கலையின் அடையாளமாக காற்று உள்ளே வந்து செல்லும் விதமான அம்சங்கள் நிறைந்திருந்தன. அறைகளின் மேற்புறத்தில் காற்றோட்டத்துக்கான வழியும், அதைத் திறந்து மூடுவதற்கான வசதியும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அறைகளும் அதிகபட்சமாக 15 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளன.

உள்ளே ஓர் அறை இருந்தால், அதற்கு வெளியே நீளமான தாழ்வாரம் இருக்கிறது. வெளியிலிருந்து வெப்பம் உள்ளே வராமல் இருப்பதற்காக இந்த வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. அறைக் கதவு மூடப்பட்டிருந்தாலும், தேவைப்படும்போது காற்று உள்ளே வருவதற்காகத் திறந்து மூடுவதற்கான வசதியும் உள்ளது. அறைக்குள் காற்றோட்ட வசதியை ஏற்படுத்தியது ஆங்கிலேயர்கள்தான்.

தாழ்வாரத்தில் நிறைய தூண்கள் கல்லிலும், மரத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. இதை 'தூண்கள் நிறைந்த தாழ்வாரம்' எனவும் அழைக்கப்படுகிறது. கற்களில் மட்டுமல்லாமல், சுதை வேலைப்பாட்டிலும் ஜன்னல்கள் இருக்கின்றன.

உள்கூரையில் உத்திரங்களைப் பொருத்தினர். சுடுமண்ணில் (டெரகோட்டா) தரையை அமைத்தனர். ஒட்டுமொத்தமாக இங்குள்ள தட்பவெப்பத்துக்கு ஏற்ப கட்டடக்கலையை வடிவமைத்தனர். உள்ளே வரும் வெப்பக்காற்று வெளியேறும் விதமாக கதவுகளும், உள்கூரையும் உயரமாகவும், மேலே காற்றோட்ட வசதியுடனும் அமைத்தனர்.

கைப்பிடிச் சுவரிலும்கூட கைப்பிடிகள் அனைத்தும் மரத்தில் அமைக்கப்பட்டது. மாடிக் கைப்பிடிச் சுவரில் துவாரங்கள் ஏற்படுத்தப்பட்டன. மாலை நேரத்தில் அறையில் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை ஏற்பட வேண்டும் என்பதற்காக உயரமாகக் கட்டி, காற்றோட்ட வசதியும் செய்யப்பட்டது. கட்டடத்தில் அலங்கார வேலைப்பாடுகள் முகலாயர் பாணியிலும், பாணியிலும் இருந்தன.

இதனுடன் உள்ளூர் கட்டுமான முறைகளைச் சேர்த்துக் கொண்டனர். சுண்ணாம்பு, சிறிய அளவிலான செங்கற்கள் உட்பட இங்குள்ள கட்டடப் பொருள்களே பயன்படுத்தப்பட்டன. சுண்ணாம்பையும், மணலையும் நன்றாக அரைத்து, புளிக்க வைத்து நம்முடைய தொழிலாளர்களை வைத்துதான் கட்டப்பட்டது. செங்கற்களும் ஒரு அங்குலக் கணத்திலும், 6 அங்குல நீளத்திலும், 5 அங்குல அகலத்திலும் இருக்கும். இந்த உள்ளூர் தொழில்நுட்பத்தில் சோழர், நாயக்கர், மராட்டியர் கால கட்டடக்கலையின் தாக்கமும் இருந்தது.

தற்போது பழைய ஆட்சியரகத்தை அரசு அருங்காட்சியமாக மாற்றி, புதுப்பித்திருப்பது பாராட்டுக்குரியது. இதன் மூலம், இளையதலைமுறையினர் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக உள்ளது'' என்கிறார் ராஜேந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com