'திருக்குறளைப் பரப்புவதே வாழ்நாள் கடமை' என்கிறார் லால்குடி அரசு கல்லூரி பேராசிரியர் எம். ராஜா.
அசைவப் பிரியரான இவர், திருக்குறள் பரப்புவதாலேயே இருபத்து ஐந்து ஆண்டுகளாகப் புலால் உணவை துறந்து, அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டும் இரக்கச் சிந்தனையாளராகவும் மாறியுள்ளார்.
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த அவரிடம் பேசியபோது:
'தமிழில் முனைவர் பட்டம் பெற்றுள்ள எனக்கு ஐம்பத்து நான்கு வயதாகிறது. லால்குடியில் இயங்கிய பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியில் 2009-இல் தமிழ் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். இந்தக் கல்லூரி லால்குடி அரசுக் கல்லூரியாகத் தரம் உயர்ந்துள்ளது. தமிழ்த் துறைத் தலைவராக நான் பொறுப்பு வகிக்கிறேன்.
உலகப் பொதுமறையான திருக்குறளை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல என்னால் இயன்ற பங்களிப்பை அளித்து வருகிறேன். குறள் காட்டும் வழியில் மது, புலால் உணவைத் தவிர்த்து, அனைத்து உயிர்களிடத்தும் இரக்கம் காட்டும் சிந்தனையை வளர்த்துகொண்டுள்ளேன். குறளே என்னை செம்மைப்படுத்துவதுடன், என்னைச்சுற்றியுள்ளவர்களை செம்மைப்படுத்த உறுதுணையாக அமைந்துள்ளது.
நான் கல்லூரியில் சேர்ந்த நாள்முதல் இன்று வரையில், பதினைந்து ஆண்டுகளாகவே கல்லூரியின் அறிவிப்புப் பலகையில் திருக்குறளை தினமும் எழுதி, அதன் விளக்கத்தையும் குறிப்பிட்டுவருகிறேன்.
திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலகத்தின் சமரசத் தீர்வு மைய அறிவிப்புப் பலகையிலும் நாள்தோறும் ஒரு திருக்குறளை எழுதி அதன் பொருள் மற்றும் விளக்கத்தை தமிழ், ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன்.
இந்தப் பணியை ஒன்பது ஆண்டுகளாக இடைவிடாது மேற்கொண்டு வருகிறேன். இதனால், திருக்குறளுடன், பொது நிகழ்வுகள், பொது அறிவுச் சிந்தனை, நடப்பு நிகழ்வுகளையும் அன்றாடம் அறிவிப்புப் பலகையில் இடம்பெறச் செய்வதை மேற்கொண்டுவருகிறேன்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளையும், ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளேன். 'குறியியல் வகைகளும்-பயன்பாடும்', ' உலகமயமாக்கலில் நாட்டுப்புறக் கலைகள்', மரபு வழி கலைகளின் கலைச்சொல் அகராதி', 'பண்ணைப்புரத்து இசை அருவி', 'விளிம்பு நிலையில் நாட்டுப்புறக் கைவினைப் பொருள்கள்', 'ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கையும் - கருணாநிதி', 'ஸ்டாலினின் செம்மொழி தமிழ் வளர்ச்சிப் பணிகளும்' என ஆறு நூல்களை எழுதியுள்ளேன். இதில், 3 நூல்களுக்கு தமிழ்நாடு அரசின் விருது கிடைத்துள்ளது.
திருச்சி மத்திய மண்டலத்தில் இயங்கும் அரசு கல்லூரியின் புத்தக மைய ஒருங்கிணைப்பாளரா உள்ளதால், சாகித்திய அகாதெமி விருது பெற்ற புத்தகங்களை மாணவர்களை படிக்கச் செய்து வருகிறேன்.
எனது இல்லத்தின் மாடியில் 100-க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்த்து வருகிறேன். புறாக்களுக்கு வைக்கும் இரையைத் தேடி மயில், குயில், மைனா, கொண்டலாத்தி, மரங்கொத்தி உள்ளிட்ட பறவைகளும் வந்து செல்கின்றன.
திருக்குறள் மனித வாழ்வின் முக்கிய அங்கங்களான அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது. மனிதன் எவ்வாறு நல்லொழுக்கத்துடன் வாழ்வது, செல்வத்தை எவ்வாறு ஈட்டுவது, இன்பத்தை எவ்வாறு அனுபவிப்பது என்பதற்கான வழிகளைக் காட்டுகிறது. மனிதர்களுக்குரிய நீதிகளைக் கூறுவதால், நீதிநூலாக விளங்குகிறது. மனித வாழ்வின் விழுமியங்களையும், நீதிகளையும், நடைமுறை வாழ்வியலையும் விளக்குகிறது.
கல்லூரிப் பருவத்திலேயே மாணவர், மாணவிகளிடையே திருக்குறள் போட்டிகள் நடத்துதல், கலைப் போட்டிகளை நடத்துவதில் ஆர்வம் கொண்டு செயல்பட்டதற்காக, பாரதிதாசன் பல்கலைக் கழகத்தால் சிறந்த கலைப்போட்டிகள் ஒருங்கிணைப்பாளர் விருது பெற்றேன்.
கலைப்பண்பாட்டு துறையிலும் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்து, நாடகங்கள் அரங்கேற்றுவதையும், அதில் தமிழ் மற்றும் திருக்குறள் பரப்புவதையும் வழக்கமாக்கி கொண்டுள்ளேன். பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகளை இந்த நாடகங்களில் பங்கேற்கச் செய்து இருபத்து ஐந்துக்கும் மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றியுள்ளேன்.
எனது சேவைகளுக்காக, திருச்சி மாவட்ட நிர்வாகத்தால் நான்கு முறை விருதுகள், நாடக சேவைக்கான உ.வே.சா. விருது, செந்தமிழ்ச் சிற்பி விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளேன்' என்கிறார் எம்.ராஜா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.