தமிழ் வளர்க்கும் தமிழவேள்

தமிழ் கூறும் நல்லுலகம் பல அறிஞர்களைக் காலம்தோறும் கொண்டு சிறக்கிறது. அப்படியான அறிஞர்களுள் ஒருவர் 'தமிழவேள்' சிவாலயம் ஜெ.மோகன்.
ஜெ.மோகன்
ஜெ.மோகன்
Published on
Updated on
3 min read

தமிழ் கூறும் நல்லுலகம் பல அறிஞர்களைக் காலம்தோறும் கொண்டு சிறக்கிறது. அப்படியான அறிஞர்களுள் ஒருவர் 'தமிழவேள்' சிவாலயம் ஜெ.மோகன்.

சிறுவயது முதல் தமிழ் மீது காதல் கொண்டவர், பக்திநெறியில் தமிழ் வளர்ப்பவர், பல்வேறு அறப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர், ஆதினகர்த்தர்கள் தொடங்கி தமிழ் ஆர்வம் கொண்ட குழந்தைகள் வரை அனைவரோடும் நட்பு பாராட்டுபவர், 'இறைவன் வரம் கொடுத்தால் நூல்களை என் பிள்ளைகளாகக் கேட்பேன்' என்று சொல்லக் கூடிய புத்தக ஆர்வலர், 'தமிழ்த் தாத்தா' உ.வே. சா.

பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்ததைப் போல பழைய உரைகளைத் தேடித் தேடி பதிப்பித்து வருபவர்..

உங்கள் சமயத் தமிழ் ஆர்வத்தின் பின்னணி என்ன?

இறையருளால் சைவ நெறியைப் பின்பற்றிய நல்லக் குடும்பத்தில் பிறந்தேன். எனது தந்தையும், அவரது தந்தையும் வாழ்க்கை விழுமியங்களைப் பயிற்றுவித்தனர். அவர்களே ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்ந்தனர். அந்த வழி என்னை உயர்ந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.

உங்கள் கல்வியின் பின்புலம் குறித்துக் கூறுங்கள்?

நான் பொறியியல் படித்தவன். ஆனால், பள்ளி நாள்களிலேயே அன்றாடம் ஏதாவது புத்தகத்தை பை கிராப்ட்ஸ் சாலையோரப் புத்தகக் கடைகளில் வாங்குவேன். வீட்டுக்கு வந்து, புரட்டிப் பார்ப்பேன். புத்தகங்களைப் படித்து, அவற்றைப் பாதுகாத்து வைத்திருப்பேன். நான் பிறந்து வளர்ந்த வீட்டில் அம்மாவின் நினைவாக வீட்டையே நூலகமாக மாற்றலாம் என்று எண்ணியிருக்கிறேன்.

இலக்கிய ஆர்வம் உங்களுக்குள் ஏற்பட என்ன, யார் காரணம்?

சாலையோரப் புத்தகக் கடைகளில் புத்தகங்களை வாங்கும்பொழுது, பல அறிஞர்களை அங்கே சந்தித்திருக்கிறேன். அவிநாசிலிங்கம் செட்டியார் அங்கேதான் அறிமுகமானார். சுவாமிஜி சித்பவானந்தர் காவி உடையோடு புத்தகங்களைத் தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவருடனான எனது தொடர்பு கடைசி வரை புனிதமான உறவாக இருந்தது. திருப்பராய்துறைக்கு அடிக்கடி செல்வதுண்டு. சுவாமிக்கு என் மீது அபிமானம் உண்டு.

உங்களின் வழிகாட்டி யார்?

எனக்கு வழிகாட்டி என்றால் அருள்செல்வர் நா. மகாலிங்கம்தான். ஆண்டுதோறும் அவர் வள்ளலார், மகாத்மா காந்தி விழாக்களை நடத்துவார். நான் தவறாமல் பங்கு கொள்வேன். அருள்செல்வருடன் நான் நெருக்கமாக இருந்தேன். அவர் கற்பித்ததை இன்றைக்கும் பின்பற்றுகிறேன்.

சேக்கிழார் ஆராய்ச்சி மையச் செயலராக இருக்கிறீர்கள்? அதுகுறித்துக் கூறுங்கள்...

சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தில் ஆண்டுதோறும் சேக்கிழார் விழா நடத்துகிறோம். பல பிரபல பேச்சாளர்கள் வருகை தருகிறார்கள். ஆனால் என்னுடைய நோக்கம் புதியவர்கள் வர வேண்டும்.

இளையவர்கள் வர வேண்டும். அப்போதுதான் இளம்தலைமுறையிடம் திருமுறைகளை, தமிழைக் கொண்டு சேர்க்க முடியும். அதற்காக பள்ளி மாணவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கிறோம். நிகழ்ச்சிக்கு ஏறத்தாழ மூன்றாயிரம் பேர் வரை வருகிறார்கள். இந்த விழா பக்தித் திருவிழாவாகத் தொய்வின்றித் தொடர்ந்து நடைபெற வேண்டும். அதற்காக சொந்தமாக அலுவலகமும் அரங்கமும் ஏற்படுத்தி, அமைப்பை ஸ்திரப்படுத்த நினைக்கிறேன். இறையருள் கூட்டுவிக்க வேண்டும்.

உங்கள் நோக்கம் தமிழ் வளர்ப்பதா? பக்தியை வளர்ப்பதா?

இன்றைக்கு இப்படிக் கேட்கும் நிலை ஏற்பட்டிருப்பது வருந்தத்தக்கது. பக்தி இல்லாத தமிழ் இருக்கிறதா? பக்தியும் தமிழும் வெவ்வேறானதா? 'நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த ஞான சம்பந்தன்' என்கிறோமே, எனில் தமிழும் பக்தியும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்க முடியாதவை. தமிழும் பக்தியும் இந்த மண்ணில் மீண்டும் செழித்து வளர வேண்டும். தமிழ் உயர் தனி வளர்ச்சியைக் காண வேண்டுமானால் பக்தியோடு இணைந்தால் மட்டுமே சாத்தியம்.

உங்கள் கனவு நிறைவேறிவிட்டதா?

வேத பாடசாலை, திருமுறைகளுக்கான பயிற்சி தரும் பள்ளி ஒன்று தொடங்க வேண்டும் என்பதுதான் அந்தக் கனவு.

அதற்காக என்ன முயற்சியை மேற்கொண்டிருக்கிறீர்கள்?

வேதம் பயில்வோருக்கு வாய்ப்புகள் இருக்கின்றன. திருமுறைகள் பயில்வதால் வேலைவாய்ப்பு இன்றைக்கு சாத்தியம் இல்லாமல் இருக்கிறது. அதனால் அந்தப் பள்ளியில் பக்தியோடு திருமுறைகளைக் கற்கும் மாணவர்களுக்கு வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ள இலவசமாகத் தொழில் பயிற்சியையும் அளிக்க வேண்டும். அதற்காக, இடம் வாங்கி வைத்திருக்கிறேன்.

சிவாலயம் பற்றி...

அந்த நாளில் பல தமிழ் சான்றோர்கள் பதிப்பகம் வைத்திருந்தனர். அவையெல்லாம் பணம் சம்பாதிப்பதற்கானதல்ல. தமிழைக் காப்பதற்கான முயற்சி மட்டும்தான். வாடகை வீட்டில் குடியிருந்த திரு.வி.க. தன்னிடம் இருப்பதையெல்லாம் செலவிட்டு, அச்சகத்தை ஏற்படுத்தி புத்தகங்களை வெளியிட்டார்.

அப்படி நிறைய பேர் அன்றைக்குத் தமிழை அச்சில் ஏற்றிக் காப்பாற்றினர். அந்த முயற்சியை இன்றைக்கு நாமும் செய்ய வேண்டும். நாளை தமிழ் படிக்க விரும்பும் யாரேனும் ஒருவருக்கு இன்றைக்கு நாம் காப்பற்றித் தரும் புத்தகங்கள் பயன்படுமே என்ற எண்ணத்தில் 'சிவாலயம் பதிப்பகம்' வாயிலாக நூல்களைப் பதிப்பிக்கிறோம்.

உங்களது 'சிவாலயம்' பதிப்பகத்தின் தனித்துவம் என்ன?

பழைமை ரொம்பவும் என் மனதுக்கு நெருக்கமானது. புராதனமானவை என்னைக் கவர்கின்றன. பல பழைய சிதிலமடைந்த நூல்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை ஏற்பட்டது. அதனால் பழைய நூல்களைத் தேடிக் கண்டுபிடித்துப் பதிப்பிக்கிறேன். 75 நூல்களுக்கும் மேல் பதிப்பித்திருக்கிறேன்.

திருக்குறள் பரிமேலழகர் உரை, சரவணப் பெருமாள் ஐயர் உரை, கிருஷ்ணாம்பேட்டை குப்புசாமி முதலியார் உரை, களத்தூர் வேதகிரி முதலியார் உரை... என்று ஆறு பழைய திருக்குறள் உரைகளைப் பதிப்பித்திருக்கிறேன். இன்னும் கூட திருக்குறள் பதிப்பிக்க இருக்கிறது.

இவை தவிர நீங்கள் பதிப்பித்திருக்கும் ஏனைய முக்கியமான நூல்கள் எவை?

சங்க இலக்கியங்களைப் பதிப்பித்திருக்கிறேன். 'யாழ் நூல்' என்ற பண்ணிசை பற்றிய நூல் நூற்றாண்டுகள் கடந்துவிட்டது. இன்றைக்கு எவரிடமும் இல்லை. அதைக் கொண்டு வர அரும்பாடு பட வேண்டியிருந்தது.

சைவ நூல்களில் பெரியபுராணம் ஆறுமுகத்தம்பிரான், சி. கே. சுப்பிரமணிய முதலியார் உரை பதிப்பித்திருக்கிறேன். திருவாவடுதுறை ஆதினத்தில் தம்பிரானாக இருந்தவர் எழுதிய பெரியபுராணம் பதிப்பித்திருக்கிறோம். திருமயிலை ஸ்தல புராணம் அரிதாகக் கிடைத்தது. ஏறத்தாழ 130 ஆண்டுகளுக்கு முந்தையது பதிப்பித்திருக்கிறேன்.

திருவருட்பா பல உரைகளை பதிப்பித்திருக்கிறோம். திருவாசமும் அப்படியே அச்சில் ஏறியிருக்கிறது. எந்த நூலும் ஒரு உரையோடு நிறுத்துவதில்லை. சேக்கிழார் பற்றியும் பல நூல்களைத் தேடி பதிப்பித்திருக்கிறோம். எல்லாமும் பல தொகுதிகளைக் கொண்டவை. சில நூல்களில் உரை ஆசிரியர்கள் தாங்கள் யாருடைய உரையை அடியொற்றித் தந்திருக்கிறோம் என்ற குறிப்பைத் தந்திருக்கின்றனர். அந்தக் குறிப்பைக் கொண்டு அந்தப் பழைய உரை கிடைக்குமா? எனத் தேடி அதனையும் பதிப்பிக்கக் கடின உழைப்பு தேவைப்படுகிறது.

அண்மையில் திருமுறைகள் ஒன்பதாம் திருமுறை வரை செங்கல்வராயப் பிள்ளையின் தேவார ஒளிநெறி கிடைத்திருக்கிறது. பதினைந்து தொகுதிகளாகக் கொண்டு வந்திருக்கிறேன். ஏறத்தாழ ரூ. 80 லட்சத்துக்கும் அதிகமாக செலவு செய்து புத்தக வடிவம் கொடுத்திருக்கிறேன்.

திருவாவடுதுறை ஆதினத்தால் வழங்கப்படும் 'தமிழவேள்' என்கிற பட்டம் பெற்றது எவ்வாறு?

'தமிழவேள்' பட்டம் இதுவரை மூன்றே பேருக்கே வழங்கப்பட்டிருக்கிறது. 1909}இல் கரந்தை தமிழ் சங்கத்தை நிறுவிய உமாமகேஸ்வரப் பிள்ளைக்கும், 1964}இல் பி. டி.ராஜனுக்கும் வழங்கப்பட்டது. அதன்பிறகு எனக்கு இந்தப் பட்டம் கிடைத்திருக்கிறது. எதற்காகக் கொடுத்தார்கள் என்று எனக்கும் ஆச்சரியமாகவே இருக்கிறது. தமிழ் தந்த கெளரவம் என்று கருதுகிறேன்.

தருமை ஆதினத்தார் ஆவணி மூலத் திருவிழாவில் 'செம்பதிப்புச் செம்மல்' என்ற விருதை வழங்கினர். ஏனைய பல விருதுகளைத் தவிர்த்துவிட்டேன். பட்டம் பெறுவதில் என்ன இருக்கிறது? தமிழ் வளர்ச்சிக்கு நம்மால் ஏதாவது செய்ய முடிந்தால் போதும். ஆதினகர்த்தர்கள் வழங்கும் பட்டங்களை ஆசிர்வாதம் எனக் கருதி ஏற்கிறேன். அவ்வளவே!

உங்கள் தொழிலையும் நடத்திக் கொண்டு இத்தகைய அறப் பணிகளையும் எப்படிச் செய்கிறீர்கள்?

என் தந்தை சிறு வயதில், எனக்கு இருந்து தமிழ் ஆர்வத்தைப் பார்த்து, ''உன் வாழ்க்கையை நடத்த தேவையானதைப் பார்த்துக் கொண்டு பின்னர் உனது விருப்பங்களை நிறைவு செய்து கொள்'' என்றார். என்னோடு தமிழ்ப் புத்தகங்களும் பயணிக்கும். மருத்துவ உபகரணங்கள் சார்ந்த தொழில் செய்கிறேன்.

இறைசக்தி தானாக நடத்துகிறது. மனித முயற்சிக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் இந்தச் செயலை தெய்வம் அருளினால் மட்டுமே சாத்தியம் என்று நினைத்துச் செயல்படுகிறேன்.

உங்கள் பணிக்கு குடும்பத்தினரின் ஆதரவு உள்ளதா?

என் மனைவியின் முழுமையான ஆதரவு இருப்பதால் இந்தத் தெய்வப் பணியில் என்னால் ஈடுபட முடிந்திருக்கிறது. தெய்வத்தின் கருணையால் குடும்பத்தின் தேவைகளை நிறைவு செய்துவிட்டேன். இறை தந்த செல்வத்தை இறைப்பணிக்கே தருகிறோம். பல அமைப்புகளிலும் அறக்கட்டளைகளிலும் என்னுடைய பணி தொடர ஆணிவேராக இருப்பவர் என் மனைவி. இறைவனின் கருணை என்னை வழிநடத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com