எப்படி இருக்கிறார் பில் கிளிண்டன்...

தனது அதிரடி நடவடிக்கைகளால் உலகின் கவனத்தை அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப் ஈர்க்க, முன்னாள் அதிபர் பில் கிளிண்டனை அமெரிக்கர்கள் ஆழ்ந்த கவலையோடு கவனித்துகொண்டிருக்கிறார்கள்.
எப்படி இருக்கிறார் பில் கிளிண்டன்...
Published on
Updated on
2 min read

தனது அதிரடி நடவடிக்கைகளால் உலகின் கவனத்தை அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப் ஈர்க்க, முன்னாள் அதிபர் பில் கிளிண்டனை அமெரிக்கர்கள் ஆழ்ந்த கவலையோடு கவனித்துகொண்டிருக்கிறார்கள். காரணம் அவரது உடல் நிலைதான்!

இதற்கிடையில், 'நான் அதிபர் டிரம்ப்பைவிட இளையவன்'' என்று கிளிண்டன் சொல்ல, அமெரிக்கர்கள் பலரோ, 'உங்களைவிட வயதானவர் என்றாலும் டிரம்ப் சுறுசுறுப்பாகவும், சக்தி மிகுந்தும் இருக்கிறார்'' என்று பதில் சொல்லியிருக்கின்றனர்.

பில் கிளிண்டன் 1993 முதல் 2001 வரை 42-ஆவது அதிபராகப் பதவி வகித்தார். பதவிக்காலத்தில் சர்ச்சைகளுக்குக் குறைவில்லை என்றாலும், பதவிக்காலம் முடிந்த பிறகும் மிகப் பிரபலமாகவே விளங்கினார். உலகம் முழுவதும் சென்று சொற்பொழிவுகளை நிகழ்த்தி கோடிக்

கணக்கில் சம்பாதித்தார். 'கிளிண்டன் பவுண்டேஷன்' என்ற தொண்டு நிறுவனத்தைத் துவக்கி, பொதுச்சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார். இவரது தொண்டு நிறுவனத்துக்கு பல்வேறு நாட்டு அரசுகளும் நன்கொடை வழங்கின. தனது மனைவி ஹிலாரியின் அரசியல் நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருந்து வந்தார் கிளிண்டன்.

தற்போது கிளிண்டனுக்கு எழுபத்து எட்டு வயதும், ஹிலரிக்கு எழுபத்து ஏழு வயதும் ஆகிறது. முதுமையின் பாதிப்பு ஹிலாரியைவிட, கிளிண்டனுக்கே அதிகமாக இருக்கிறது.

பொது நிகழ்ச்சிகளில் அவர் பேசும்போது, கைகளில் நடுக்கத்தைக் காண முடிகிறது. தாடைகளின் அசைவை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. நடக்கும்போது சற்றே தள்ளாடுகிறார். ஞாபக மறதி அதிகரித்துவருவதாக அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகிறார்கள். அவரது எடை கணிசமாகக் குறைந்துவிட்டது. பணிவிடைகள் செய்யும் ஊழியர்கள், 'ஒரு காலத்தில் அமெரிக்காவையே கட்டி ஆண்ட கிளிண்டனா இவர் என்று எங்களுக்கே சந்தேகம் வருகிறது. அந்த அளவுக்கு அவரது உடல்நிலை நலிவடைந்துவிட்டது' என்று வருத்தத்துடன் கூறுகின்றனர்.

கிளிண்டன் 2004-இல் பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். 2010-இல் அவருக்கு ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. கடந்த பத்து ஆண்டாகவே கிளிண்டனின் உடல்நிலை குறித்த வதந்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

2016-இல் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் மாநாடு ஒன்றில் கிளிண்டன் பேசும்போது, அவரது கைகளில் தென்பட்ட நடுக்கம், வார்த்தைக் குளறல் போன்றவை உடல்நலம் குறித்த பல சந்தேகங்களைக் கிளப்பின.

2017-இல் அவர் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றபோது, வழியில் சுவிட்சர்லாந்துக்குச் சென்று ஸ்டெம் செல் பரிசோதனை செய்துகொண்டார் என்று தகவல்கள் வெளியாயின. அக்டோபர் 2021-இல் அவருக்கு சிறுநீர் பாதையில் கடுமையான தொற்று வந்து மிகவும் அவதிப்பட்டு, சிகிச்சை எடுத்துகொண்டார்.

2022-இல் நியூயார்க்கில் நடைபெற்ற பேரணி ஒன்றில் கிளிண்டன் பேசும்போது, கைகளின் நடுக்கம் காரணமாக வெகுநேரம் மைக்கைப் பிடித்துகொள்ள முடியவில்லை. அவரது இடது கையில் காணப்பட்ட நடுக்கம் பார்கின்சன் நோயின் அறிகுறி என்ற பேச்சு அப்போதே நிலவியது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜனநாயகக் கட்சிக் கருத்தரங்கில் பேசும்போது, கை நடுக்கத்தை சமாளிக்க அவர் மைக் பொருத்தப்பட்ட பொடியம் என்ற சொற்பொழிவு மேடையை கைகளால் இறுகப் பற்றிக் கொண்டதை பலரும் கவனிக்கத் தவறவில்லை. ஆறு அடி, இரண்டு அங்குல உயரமும் 120 கிலோ எடையும் கொண்ட கிளிண்டன் இப்படி கை நடுக்கத்துடன், தள்ளாடி நடப்பதை மக்கள் கவலையோடு பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com